குடியரசுத் துணைத் தலைவர் தேர்தல்: எதிர்க்கட்சிகளின் வேட்பாளர் கோபாலகிருஷ்ண காந்தி

குடியரசு துணைத் தலைவர் பதவிக்கானத் தேர்தலில், எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக மகாத்மா காந்தியின் பேரனும், மேற்கு வங்க மாநிலத்தின் முன்னாள் ஆளுநருமான கோபாலகிருஷ்ண காந்தி
குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் எதிர்க்கட்சிகளின் வேட்பாளர் குறித்து விவாதிப்பதற்காக தில்லியில் நடைபெற்ற கூட்டத்தில் பங்கேற்ற காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்
குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் எதிர்க்கட்சிகளின் வேட்பாளர் குறித்து விவாதிப்பதற்காக தில்லியில் நடைபெற்ற கூட்டத்தில் பங்கேற்ற காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்

குடியரசு துணைத் தலைவர் பதவிக்கானத் தேர்தலில், எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக மகாத்மா காந்தியின் பேரனும், மேற்கு வங்க மாநிலத்தின் முன்னாள் ஆளுநருமான கோபாலகிருஷ்ண காந்தி (72) அறிவிக்கப்பட்டுள்ளார்.
தில்லியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற எதிர்க்கட்சிகள் கூட்டத்தில், இந்த முடிவு ஒருமனதாக எடுக்கப்பட்டது.
குடியரசுத் துணைத் தலைவராக கடந்த 2007- ஆம் ஆண்டு முதல் தொடர்ந்து 2 முறை (10 ஆண்டுகளாக) ஹமீது அன்சாரி பதவி வகித்து வருகிறார். அவரது பதவிக்காலம் வரும் ஆகஸ்ட் மாதம் 10- ஆம் தேதியுடன் நிறைவடையவுள்ளது. இதையடுத்து, புதிய குடியரசு துணைத் தலைவரை தேர்வு செய்வதற்கான தேர்தல், ஆகஸ்ட் மாதம் 5- ஆம் தேதி நடைபெறவுள்ளது.
இந்தத் தேர்தலில், மத்தியில் ஆளும் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் நிறுத்தப்பட இருக்கும் வேட்பாளர் குறித்து இன்னமும் முடிவு செய்யப்படவில்லை. இந்நிலையில், குடியரசுத் துணைத் தலைவர் தேர்தல் குறித்து ஆலோசனை நடத்துவதற்கு, தில்லியில் எதிர்க்கட்சிகளின் கூட்டத்துக்கு காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காந்தி செவ்வாய்க்கிழமை ஏற்பாடு செய்திருந்தார்.
அதன்படி, தில்லியில் உள்ள நாடாளுமன்ற நூலகக் கட்டடத்தில் எதிர்க்கட்சிகள் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இக்கூட்டத்தில் காங்கிரஸ், திரிணமூல் காங்கிரஸ், பகுஜன் சமாஜ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், ஐக்கிய ஜனதா தளம் உள்ளிட்ட 18 எதிர்க்கட்சிகள் கலந்து கொண்டன.
நிதீஷ் குமார் பங்கேற்கவில்லை: காங்கிரஸ் கட்சி தரப்பில் அக்கட்சியின் தலைவர் சோனியா காந்தி, துணைத் தலைவர் ராகுல் காந்தி, மக்களவை காங்கிரஸ் எம்.பிக்கள் குழுத் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவர் குலாம் நபி ஆஸாத் உள்ளிட்டோர் கலந்து கொண்டிருந்தனர். முக்கிய எதிர்க்கட்சிகளில் ஒன்றான ஐக்கிய ஜனதா தளக் கட்சியின் தலைவர் நிதீஷ் குமார், இந்த கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லை. அவருக்குப் பதிலாக, அக்கட்சியின் மூத்த தலைவர் சரத் யாதவ் கலந்து கொண்டார்.
கூட்டம் தொடங்கியதும், ஜம்மு- காஷ்மீர் மாநிலத்தில் பயங்கரவாதிகள் திங்கள்கிழமை நடத்தியத் தாக்குதலில் பலியான 7 அமர்நாத் யாத்ரீகர்களுக்கு 2 நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது. அதன்பின்னர், குடியரசுத் துணைத் தலைவர் பதவிக்கு நடைபெறவிருக்கும் தேர்தல் குறித்து ஆலோசிக்கப்பட்டது. அப்போது, கோபால கிருஷ்ண காந்தியின் பெயரை திரிணமூல் காங்கிரஸ் மூத்தத் தலைவர் டேரக் ஒ பிரையன் முன்மொழிந்தார். அதை பகுஜன் சமாஜ் மூத்த தலைவர் சதீஷ் மிஸ்ரா, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி உள்ளிட்டோர் வழிமொழிந்தனர். இதையடுத்து, குடியரசு துணைத் தலைவர் பதவிக்கான தேர்தலில் எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக கோபால கிருஷ்ண காந்தியை எதிர்க்கட்சிகளின் சார்பில் பொது வேட்பாளராக நிறுத்துவது என்று ஒருமனதாக முடிவெடுக்கப்பட்டது.
கோபால கிருஷ்ண காந்தியை தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு, குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக போட்டியிட ஒப்புக் கொள்ள வேண்டும் என்று குலாம் நபி ஆஸாத், டேரக் ஒ பிரையன், சீதாராம் யெச்சூரி ஆகியோர் வேண்டுகோள் விடுத்தனர். இதை கோபால கிருஷ்ண காந்தியும் ஏற்றுக் கொண்டார்.
எதிர்க்கட்சிகள் கூட்டத்துக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசியபோது, மேற்கண்ட தகவலை காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காந்தி தெரிவித்தார். இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது:
குடியரசு துணைத் தலைவர் பதவிக்கான தேர்தலில், கோபால கிருஷ்ண காந்தியை எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக நிறுத்த 18 எதிர்க்கட்சிகளின் தலைவர்களும் கூட்டாக முடிவு செய்தனர். இதுகுறித்து அவரிடமும் எதிர்க்கட்சித் தலைவர்கள் பேசினர். அப்போது தேர்தலில் போட்டியிடுவது குறித்து ஆலோசிக்க தனக்கு 10 முதல் 15 நிமிடங்கள் வரையிலும் கால அவகாசம் கேட்டார். பின்னர் அவரே தொலைபேசியில் தொடர்பு கொண்டு, தேர்தலில் போட்டியிட சம்மதம் தெரிவித்தார் என்றார் சோனியா காந்தி.
அமர்நாத் தாக்குதலை கண்டித்து தீர்மானம்: எதிர்க்கட்சிகளின் கூட்டத்தில், அமர்நாத் யாத்ரீகர்கள் மீது திங்கள்கிழமை நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அந்தத் தீர்மானத்தில், அமர்நாத் யாத்ரீகர்கள் மீதான தாக்குதலை மனித நேயம் மற்றும் இந்தியாவின் பன்முகத்தன்மை, வேற்றுமையில் ஒற்றுமை ஆகியவை மீது நடத்தப்பட்ட தாக்குதல் என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
இதேபோல், நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடரில் எதிர்க்கட்சிகள் செயல்பட வேண்டிய விதம், ராஷ்ட்ரீய ஜனதா தளத் தலைவர் லாலு பிரசாதின் குடும்பத்தினர் வீடுகளில் சிபிஐ சோதனை நடத்திய விவகாரம் உள்ளிட்டவை குறித்தும் விவாதிக்கப்பட்டது. அப்போது, விவசாயிகள் பிரச்னை, ஜிஎஸ்டி, உயர்மதிப்பு ரூபாய் வாபஸ் ஆகியவற்றை நாடாளுமன்ற கூட்டத் தொடரில் எழுப்புவது என்று முடிவெடுக்கப்பட்டது.

முடிவை வரவேற்கிறேன்


எதிர்க்கட்சிகளிடையேயான ஒற்றுமை மற்றும் அக்கட்சிகள் எடுத்துள்ள முடிவை வரவேற்பதாக கோபாலகிருஷ்ண காந்தி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து தில்லியில் அவர் பிடிஐ செய்தியாளருக்கு அளித்த பேட்டியில் மேலும் கூறுகையில், 'அனைத்து முக்கியத்துவங்களையும் உணர்ந்து, தேர்தலில் போட்டியிட நான் சம்மதித்தேன்' என்றார்.
குடியரசுத் துணைத் தலைவர் பதவிக்கான தேர்தலில் எதிர்க்கட்சிகளின் வேட்பாளராக கோபால கிருஷ்ண காந்தி தேர்வு செய்யப்பட்டிருப்பதற்கு மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரியான கோபாலகிருஷ்ண காந்தி, மேற்கு வங்க ஆளுநராக கடந்த 2004- ஆம் ஆண்டு முதல் 2009- ஆம் ஆண்டு வரையிலும் பதவி வகித்துள்ளார். அவரது மனைவியின் பெயர் தாரா காந்தி. 2 மகள்கள் உள்ளனர்.
தேசப் பிதா மகாத்மா காந்தி, சுதந்திர இந்தியாவின் முதலாவது கவர்னர் ஜெனரலாக பதவி வகித்த ராஜாஜி ஆகியோரது பேரன் கோபாலகிருஷ்ண காந்தி. தமிழகத்தில் நீண்டகாலம் ஐஏஎஸ் அதிகாரியாக பணிபுரிந்துள்ளார்.
இவரது சகோதரர் ராஜ்மோகன் காந்தி 1989- இல் உத்தரப்பிரதேச மாநிலம், அமேதி தொகுதியில் நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் தலைவர் ராஜீவ் காந்தியை எதிர்த்துப் போட்டியிட்டு தோற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com