லாலுவின் மகன் பிகார் துணை முதல்வர் பதவியில் இருந்து விலகுவாரா?: ஆர்ஜேடிக்கு நிதீஷ் 4 நாள் கெடு

பிகார் துணை முதல்வர் பதவியில் இருந்து லாலுவின் மகன் தேஜஸ்வி யாதவ் விலகுவது குறித்து முடிவெடுக்க நிதீஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளம் கட்சி 4 நாள் கெடு விதித்துள்ளது
லாலுவின் மகன் பிகார் துணை முதல்வர் பதவியில் இருந்து விலகுவாரா?: ஆர்ஜேடிக்கு நிதீஷ் 4 நாள் கெடு

பிகார் துணை முதல்வர் பதவியில் இருந்து லாலுவின் மகன் தேஜஸ்வி யாதவ் விலகுவது குறித்து முடிவெடுக்க நிதீஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளம் கட்சி 4 நாள் கெடு விதித்துள்ளது. இதனால், பிகாரில் ஆட்சியில் உள்ள மகா கூட்டணி உடையும் நிலை உருவாகியுள்ளது.
பிகாரில் கடந்த 2015- ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டப் பேரவைத் தேர்தலில் லாலுவின் ராஷ்ட்ரீய ஜனதா தளம் (ஆர்ஜேடி), நிதீஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளம், காங்கிரஸ் ஆகியவை இணைந்து அமைத்த மகா கூட்டணி பாஜகவை தோற்கடித்து ஆட்சியைப் பிடித்தது.
நிதீஷ் குமார் மீண்டும் முதல்வராகப் பொறுப்பேற்றார். அதே நேரத்தில் கூட்டணியில் அதிகபட்சமாக 81 இடங்களில் வென்ற லாலுவின் கட்சிக்கு துணை முதல்வர் பதவி அளிக்கப்பட்டது. லாலுவின் மகன் தேஜஸ்வி யாதவ் துணை முதல்வராகப் பதவி வகித்து வருகிறார். லாலுவின் மற்றொரு மகன் தேஜ் பிரதாப் யாதவ் சுகாதாரத் துறை அமைச்சராகவுள்ளார்.
இந்நிலையில், லாலு மற்றும் அவரது குடும்பத்தினர் மீது ரயில்வே துறையில் நடைபெற்ற முறைகேடுகள் தொடர்பாக புதிய வழக்குகளை சிபிஐ அண்மையில் பதிவு செய்தது. ரயில்வே ஹோட்டல் டெண்டர்களை அளிப்பதற்காக நிலத்தை லஞ்சமாகப் பெற்ற வழக்கில், பிகார் துணை முதல்வராக உள்ள தேஜஸ்வி யாதவ் முக்கியக் குற்றவாளியாகச் சேர்க்கப்பட்டுள்ளார். முன்பு ரயில்வே அமைச்சராக லாலு இருந்தபோது இந்த முறைகேடு நடைபெற்றதாக சிபிஐ குற்றம்சாட்டியுள்ளது.
இந்த விவகாரத்தை கையிலெடுத்த பாஜக, ஊழல் வழக்கில் சிக்கியுள்ள தேஜஸ்வி யாதவை, நிதீஷ் தனது அமைச்சரவையில் வைத்திருக்கலாமா? என்று கேள்வி எழுப்பியது. இது நிதீஷ் குமாருக்கு அரசியல் ரீதியாக கடும் நெருக்கடியை ஏற்படுத்தியது.
இந்த விவகாரம் தொடர்பாக ஆலோசிப்பதற்காக பாட்னாவில் நிதீஷ் குமார் தலைமையில் ஐக்கிய ஜனதா தளம் கட்சிக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இந்த கூட்டத்துக்குப் பிறகு செய்தியாளர்களிடம் அக்கட்சியின் செய்தித் தொடர்பாளர் நீரஜ் குமார் கூறியதாவது:
கூட்டணி தர்மத்தை எவ்வாறு காக்க வேண்டும் என்பது ஐக்கிய ஜனதா தளம் கட்சிக்குத் தெரியும். அரசியல் ரீதியாக பல்வேறு தியாகங்களைச் செய்து எங்களுக்கு எழுந்த சவால்களை முறியடித்துள்ளோம். கூட்டணிக் கட்சி (ஆர்ஜேடி) மீது எழுந்துள்ள குற்றச்சாட்டுகள் குறித்த உண்மைகளை மக்கள் மத்தியில் அவர்கள் தெளிவுபடுத்த வேண்டும் என்றார்.
ஐக்கிய ஜனதா தளம் மூத்த தலைவர் ரமணி ராம் இது குறித்துக் கூறுகையில், தங்கள் நிலைப்பாட்டை விளக்குவதற்காக கூட்டணி கட்சிக்கு (ஆர்ஜேடி) 4 நாள்கள் அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. அதன் பிறகு அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து ஐக்கிய ஜனதா தளம் முடிவெடுக்கும் என்றார்.
கடந்த 1999-ஆம் ஆண்டு வாஜ்பாய் தலைமையிலான மத்திய அமைச்சரவையில் தான் ரயில்வே அமைச்சராக இருந்த போது, கைசால் ரயில் விபத்துக்கு பொறுப்பேற்று பதவி விலகியதை கட்சிக் கூட்டத்தில் நிதீஷ் சுட்டிக்காட்டியதாக ஐக்கிய ஜனதா தளம் கட்சி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
ஆர்ஜேடி மறுப்பு
துணை முதல்வர் பதவியில் இருந்து தேஜஸ்வி யாதவ் விலகமாட்டார் என்று ஆர்ஜேடி உறுதிபடக் கூறியுள்ளது. அக்கட்சியின் பிகார் மாநில தலைவர் ராமச்சந்திர புர்வே கூறியதாவது: பிகார் துணை முதல்வராக உள்ள தேஜஸ்வி யாதவ், சாலை மேம்பாட்டு, கட்டுமானத் துறையையும் கவனித்து வருகிறார். இதில் அவரது அமைச்சகப் பணிகள் மீது எவ்வித குற்றச்சாட்டும் எழவில்லை. எனவே, அவர் துணை முதல்வர் பதவியில் இருந்து விலக மாட்டார் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com