காஷ்மீர் பெண்ணை மணமுடிக்கவிருந்த லஷ்கர் பயங்கரவாதி: பாதை மாறியதன் பின்னணி

காஷ்மீரில் கடந்த வாரம் காவல்துறையினரால் கைது செய்யப்பட்ட லஷ்கர்-இ-தொய்பா அமைப்பைச் சேர்ந்த பயங்கரவாதி சந்தீப் குமார் ஷர்மா, காஷ்மீரைச் சேர்ந்த பெண்ணை மணமுடிக்கவிருந்த தகவல் வெளியாகியுள்ளது.
காஷ்மீர் பெண்ணை மணமுடிக்கவிருந்த லஷ்கர் பயங்கரவாதி: பாதை மாறியதன் பின்னணி

லக்னௌ: காஷ்மீரில் கடந்த வாரம் காவல்துறையினரால் கைது செய்யப்பட்ட லஷ்கர்-இ-தொய்பா அமைப்பைச் சேர்ந்த பயங்கரவாதி சந்தீப் குமார் ஷர்மா, காஷ்மீரைச் சேர்ந்த பெண்ணை மணமுடிக்கவிருந்த தகவல் வெளியாகியுள்ளது.

காஷ்மீரைச் சேர்ந்த ஒரு பெண்ணை காதலித்து வந்த சந்தீப் குமார் ஷர்மா, திருமணத்துக்காக இஸ்லாம் மதத்தைத் தழுவி தனது பெயரை அடில் என்று மாற்றிக் கொண்டதாகவும், அவனிடம் விசாரணை நடத்தி வரும் குழுவைச் சேர்ந்த ஐஜி அஸீம் அருண் கூறினார். மேலும், தகாத நட்பால் அவன் பாதை பயங்கரவாதத்தை நோக்கிச் சென்றதாகவும் தெரிவித்தார்.

சந்தீப் தனது பெயரில் ஓட்டுநர் உரிமம் வைத்திருப்பதாகவும், பயங்கரவாதக் குழுக்களுக்கு ஆயுதங்களை ஓரிடத்தில் இருந்து மற்றொரு இடத்துக்குக் கடத்திச் செல்லும் பணியிலும் அவன் ஈடுபட்டு வந்ததும் விசாரணையில் தெரிய வந்துள்ளது. லஷ்கர் - இ- தொய்பா அமைப்பில் அவனுக்கு ஆயுதப் பயிற்சியும் வழங்கப்பட்டுள்ளது.

பயங்கரவாதச் செயலில் ஈடுபடவே காஷ்மீர் சென்ற சந்தீப், அங்கு ஏற்பட்ட காதலால் மனம் மாறி, பயங்கரவாதச் செயல்களில் ஈடுபடுவதைக் குறைத்துக் கொண்டதும் தெரிய வந்துள்ளது.

சந்தீப் குறித்து காஷ்மீர் எல்லைப் பகுதியில் அவன் தங்கியிருந்த இடத்தில் விசாரித்த போது, அவனுக்கு விரைவில் திருமணம் நடைபெற இருந்த தகவலை பொதுமக்கள் கூறியுள்ளனர்.

சம்பவத்தின் பின்னணி: 

ஜம்மு-காஷ்மீரில் பல்வேறு தாக்குதல் மற்றும் கொள்ளைச் சம்பவங்களில் ஈடுபட்ட லஷ்கர்-இ-தொய்பா அமைப்பைச் சேர்ந்த பயங்கரவாதிகள் இருவரை போலீஸார் கைது செய்தனர்.

அதில் ஒருவர் உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்தவராவார். சதித் திட்டங்களுக்கு உள்ளூரைச் சேர்ந்தவர்களையே ஜம்மு-காஷ்மீர் பயங்கரவாதிகள் இதுவரை பயன்படுத்தி வந்த நிலையில், தற்போது வெளிமாநிலத்தைச் சேர்ந்தவர்களையும் நாச வேலைகளில் ஈடுபடுத்துவது இந்த வழக்கை வேறு கோணத்துக்கு எடுத்துச் சென்றுள்ளது.

இதுகுறித்து ஜம்மு-காஷ்மீர் காவல்துறை ஐ.ஜி. முனீர் கான் செய்தியாளர்களிடம் திங்கள்கிழமை கூறியதாவது:

லஷ்கர்-இ-தொய்பா அமைப்பைச் சேர்ந்த பஷீர் லஷ்கரி என்பவர் ஸ்ரீநகரில் உள்ள கட்டடத்தில் மறைந்து இருப்பதாக போலீஸாருக்கு கடந்த 1-ஆம் தேதி ரகசிய தகவல் கிடைத்தது. இதன்பேரில், அங்கு சென்ற போலீஸார் அந்தக் கட்டடத்தை சுற்றிவளைத்தனர்.

இதனை அறிந்த பஷீர் லஷ்கரி உள்ளிட்ட பயங்கரவாதிகள் போலீஸாரை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர். போலீஸாரும் பதில் தாக்குதல் நடத்தினர். இந்தத் துப்பாக்கிச் சண்டையில் பஷீர் லஷ்கரிசுட்டுக்கொல்லப்பட்டார்.

இதையடுத்து, அந்தக் கட்டடத்துக்குள் நுழைந்த போலீஸார் அங்கிருந்த மற்றொரு பயங்கரவாதியை கைது செய்தனர். விசாரணையில், அவர் உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த சந்தீப் குமார் சர்மா என்கிற அடில் என்பது தெரியவந்தது. ஜம்மு-காஷ்மீர் அல்லாத வேறு மாநிலத்தைச் சேர்ந்த ஒருவர் பயங்கரவாதச் செயல்களில் ஈடுபடுவது இதுவே முதல்முறையாகும். இது போலீஸாரை அதிர்ச்சியடையச் செய்தது. பின்னர் அவரைக் கைது செய்து விசாரணை நடத்தியதில், பயங்கரவாதிகளின் பல்வேறு உத்திகள் வெளிச்சத்துக்கு வந்தன.

அதாவது, உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்தவரான சந்தீப் குமார், காஷ்மீர் பள்ளத்தாக்குக்கு 'வெல்டிங்' வேலை செய்வதற்காக வந்துள்ளார். அப்போது, அவருக்கும், லஷ்கர் பயங்கரவாதியான ஷகூர் அகமதுக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது.

பின்னர், லஷ்கர் பயங்கரவாதிகள் பலருடன் சந்தீப் குமாருக்கு தொடர்பு ஏற்பட்டது. இதையடுத்து, லஷ்கர் இயக்கத்துக்கு பணம் கிடைப்பதற்காக பல்வேறு வங்கிகள், ஏடிஎம்களில் சந்தீப் குமார் கொள்ளையடித்துள்ளார். அதில் கிடைக்கும் பணத்தை லஷ்கர் அமைப்பினரும், சந்தீப் குமாரும் பகிர்ந்து கொண்டுள்ளனர்.

மேலும், பல பயங்கரவாத தாக்குதல் சம்பவங்களிலும் சந்தீப் குமாரை லஷ்கர் அமைப்பினர் ஈடுபடுத்தத் தொடங்கினர். வேறு மாநிலத்தைச் சேர்ந்தவர் என்பதால் அவர் மீது போலீஸாருக்கு சந்தேகம் வராது என்ற நம்பிக்கையில் அவரை பல பயங்கரவாதச் செயல்களிலும் ஈடுபடச் செய்திருக்கின்றனர். குறிப்பாக, தெற்கு காஷ்மீரில் 6 போலீஸார் குண்டு வீசி கொலை செய்யப்பட்ட சம்பவத்திலும் சந்தீப் குமாருக்கு தொடர்பு இருந்துள்ளது.

சந்தீப் குமாரின் வாக்குமூலங்கள் அனைத்தும் பதிவு செய்யப்பட்டவுடன், அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார். அவருடன் பல்வேறு பயங்கரவாத நடவடிக்கைகளில் ஈடுபட்ட ஜம்மு- காஷ்மீரைச் சேர்ந்த முனீப் ஷா என்பவரும் கைது செய்யப்பட்டுள்ளார் என்றார் முனீர் கான்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com