கலாபவன் மணியின் மரணத்தில் திலீப்புக்குத் தொடர்பு?

திரைப்பட நடிகை பாவனாவைத் துன்புறுத்தியது தொடர்பான வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள மலையாள நடிகர் திலீப்புக்கு, நடிகர் கலாபவன் மணியின் மர்ம மரணத்தில் உள்ள தொடர்பு குறித்து சிபிஐ விசாரணை நடத்த வேண்டும்
கலாபவன் மணியின் மரணத்தில் திலீப்புக்குத் தொடர்பு?

திரைப்பட நடிகை பாவனாவைத் துன்புறுத்தியது தொடர்பான வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள மலையாள நடிகர் திலீப்புக்கு, நடிகர் கலாபவன் மணியின் மர்ம மரணத்தில் உள்ள தொடர்பு குறித்து சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என்று மணியின் உறவினர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

கலாபவன் மணி கடந்த ஆண்டு மார்ச் 6}ஆம் தேதி கொச்சியில் உள்ள தனது இல்லத்தில் மர்மமான முறையில் இறந்தார். அவரது மரணம் குறித்து சிபிஐ விசாரணை நடத்தி வருகிறது.

இந்நிலையில், மணியின் மரணத்தில் திலீப்புக்குத் தொடர்பு இருக்கலாம் என்றும் அது தொடர்பாகவும் சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என்றும் மணியின் சகோதரர் ஆர்.எல்.வி.ராமகிருஷ்ணன் வலியுறுத்தினார். இது தொடர்பாக அவர் ஆங்கில நாளிதழ் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:

திலீப், கலாபவன் மணியுடன் பல்வேறு நிலப் பரிவர்த்தனைகளில் ஈடுபட்டிருந்ததாக இயக்குநர் பைஜு கொட்டாரக்கரா தெரிவித்தார். மணியின் மனை வணிகம் குறித்து எங்களுக்கு ஆரம்பத்தில் இருந்தே தெரியும். அவர் பல்வேறு இடங்களில் நிலம் வாங்கினார். ஆனால் அவருக்கு நிலப் பரிவர்த்தனைகளில் திலீப்புடன் இருந்த தொடர்பு குறித்து எங்களுக்குத் தெரியாது.

இந்நிலையில், திலீப்புக்கு எதிராக பைஜு கடுமையான குற்றச்சாட்டுகளைத் தெரிவித்துள்ளார். அவற்றை விசாரிக்க வேண்டும். இந்த விவகாரத்தை நான், மணியின் மரணம் குறித்து விசாரித்து வரும் சிபிஐ அதிகாரியிடம் தெரிவித்தேன். அவர் அது குறித்து பைஜுவிடம் பேசுவதாகக் கூறினார்.

இந்த விவகாரம் தொடர்பாக பைஜுவின் வாக்குமூலத்தை சிபிஐ கொச்சியில் உள்ள தனது அலுவலகத்தில் வியாழக்கிழமை பதிவு செய்தது. அது குறித்து பைஜு கூறுகையில், "எனது வாக்குமூலத்தை சிபிஐ பதிவு செய்துள்ளது. மணிக்கும் திலீப்புக்கும் இடையிலான மனை வணிகத் தொடர்புகள் குறித்து அனைத்து தகவல்களையும் நான் சிபிஐ வசம் ஒப்படைப்பேன்' என்றார்.

திலீப்புடன் நிதித் தகராறு ஏதுமில்லை}பாவனா: இதனிடையே, நடிகர் திலீப்புடன் தனக்கு நிதி அல்லது சொத்து தொடர்பான எந்தத் தகராறும் இருந்ததில்லை என்று நடிகை பாவனா தெரிவித்துள்ளார். இது தொடர்பாக பாவனா சார்பில் அவரது உறவினர் ராஜேஷ் பி.மேனன் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

சொத்து மற்றும் நிதி தொடர்பான தகராறுகளின் விளைவாகவே எனக்கு திலீப் துன்புறுத்தல் அளித்ததாக சமூக வலைதளங்களில் பரவும் தகவல்கள் அனைத்தும் வதந்திகள்தான். எனக்கும் திலீப்புக்கும் இடையே நிதி மற்றும் சொத்து சம்பந்தப்பட்ட தகராறு ஏதும் இருந்ததில்லை. சமூக வலைதளங்கள் அவதூறு பிரசாரம் செய்து வருவதால் நான் தற்போது விளக்கமளிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது என்று அந்த அறிக்கையில் பாவனா தெரிவித்துள்ளார்.

திலீப்புக்கு ஜாமீன் கிடைக்குமா?: பாவனாவை துன்புறுத்தியது தொடர்பான வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள நடிகர் திலீப் ஜாமீன் கோரி கேரள மாநிலம், அங்கமாலியில் உள்ள முதன்மை மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளார். அந்த மனு மீதான விசாரணையை கடந்த இரு தினங்களாக விசாரித்த நீதிமன்றம், அவரது ஜாமீன் மனு மீது வெள்ளிக்கிழமை முடிவு செய்யும் என்று தெரிகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com