காஷ்மீர்: சீனாவின் தலையீடு தேவையில்லை: இந்தியா திட்டவட்டம்

காஷ்மீர் விவகாரத்தில் சீனாவின் தலையீடு தேவையில்லை என்று இந்தியா திட்டவட்டமாகக் கூறியுள்ளது.
பிரதமர் மோடியுடன் சீன அதிபர் ஜீ ஜின்பிங். (கோப்புப் படம்)
பிரதமர் மோடியுடன் சீன அதிபர் ஜீ ஜின்பிங். (கோப்புப் படம்)

காஷ்மீர் விவகாரத்தில் சீனாவின் தலையீடு தேவையில்லை என்று இந்தியா திட்டவட்டமாகக் கூறியுள்ளது. அதே நேரத்தில் காஷ்மீர் விவகாரம் குறித்து பாகிஸ்தானுடன் மட்டும்தான் பேச்சு நடத்த முடியும் என்றும் இந்தியா தெளிவுபடுத்தியுள்ளது.
முன்னதாக, காஷ்மீர் விவகாரத்தில் முக்கியப் பங்காற்றி, இந்தியா-பாகிஸ்தான் உறவை மேம்படுத்த சீனா ஆர்வத்துடன் இருப்பதாக அந்நாட்டு வெளியுறவு செய்தித் தொடர்பாளர் ஜிங் சுவாங் புதன்கிழமை கூறியிருந்தார். இந்நிலையில், காஷ்மீர் விவகாரத்தில் சீனாவின் தலையீடு தேவையில்லை என்று இந்தியா உறுதிபடக் கூறியுள்ளது.
காஷ்மீர் விவகாரம் இந்தியாவும், பாகிஸ்தானும் சம்பந்தப்பட்ட இருதரப்புப் பிரச்னை. இதில் மூன்றாவது நாட்டின் தலையீட்டை அனுமதிக்க மாட்டோம் என்பதுதான் தொடக்கத்தில் இருந்தே இந்தியாவின் நிலைப்பாடாக உள்ளது.
பயங்கரவாதம்தான் பிரச்னை: தில்லியில் வியாழக்கிழமை செய்தியாளர்களைச் சந்தித்த வெளியுறவுத் துறை அமைச்சக செய்தித் தொடர்பாளர் கோபால் பாக்லே கூறியதாவது:
காஷ்மீர் விஷயத்தில் இந்தியாவின் நிலைப்பாடு மிகவும் தெளிவாக உள்ளது. ஒரு நாட்டில் இருந்து (பாகிஸ்தான்) தூண்டிவிடப்படும் எல்லை தாண்டிய பயங்கரவாதம்தான் காஷ்மீரில் மிகமுக்கியப் பிரச்னையாக உள்ளது என்பது உங்கள் அனைவருக்கும் தெரியும்.
பாகிஸ்தானுடன் பேச்சு: இந்த பயங்கரவாதம் காஷ்மீரின் அமைதிக்கும், ஸ்திரத்தன்மைக்கும் அச்சுறுத்தல் அளிப்பதாக மட்டுமல்லாமல் இந்தியாவுக்கும், ஏன் உலகத்துக்கே பெரிய பிரச்னையாக உள்ளது. இரு தரப்பு செயல்திட்டத்தின்கீழ் காஷ்மீர் பிரச்னை உள்பட அனைத்து விவகாரங்கள் குறித்தும் பாகிஸ்தானுடன் பேச நாம் (இந்தியா) தயாராகவே இருக்கிறோம். இது தொடர்பான இந்தியாவின் நிலைப்பாட்டில் மாற்றம் ஏதுமில்லை.
பாக். குற்றச்சாட்டுக்கு மறுப்பு:
காஷ்மீரில் இந்திய ராணுவம் ரசாயன ஆயுதங்களைப் பயன்படுத்துவதாக பாகிஸ்தான் கூறி வருவது முற்றிலும் தவறானது. உலகின் எந்தப் பகுதியிலும், எந்த சூழ்நிலையிலும் ரசாயன ஆயுதங்களைப் பயன்படுத்தக் கூடாது என்பதில் இந்தியா உறுதியாக உள்ளது.
பர்ஹான் வானி விவகாரம்: பயங்கரவாத இயக்கத்தில் இணைந்து செயல்பட்ட பர்ஹான் வானி, இந்திய ராணுவத்துடன் ஏற்பட்ட மோதலில் கடந்த ஆண்டு உயிரிழந்தார். பயங்கரவாதியான அவரைப் புகழ்ந்து லஷ்கர்-ஏ-தொய்பா பயங்கரவாத அமைப்பு எழுதிய கதையை பாகிஸ்தான் அரசு தொடர்ந்து வாசித்துக் கொண்டிருக்கிறது என்றார் அவர்.
பதற்றத்தைக் குறைப்போம்: சீனாவுடன் டோகா லா பகுதியில் எழுந்துள்ள எல்லைப் பிரச்னை குறித்துப் பேசிய அவர், "இந்திய-சீன எல்லையில் ஏற்பட்டுள்ள பதற்றத்தைக் குறைக்க இரு தரப்பும் தூதரகங்கள் மூலம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. ஜெர்மனியில் நடைபெற்ற ஜி20 மாநாட்டில் பங்கேற்றபோது பிரதமர் நரேந்திர மோடியும், சீன அதிபர் ஜீ ஜின்பிங்கும் பல்வேறு முக்கிய விஷயங்கள் குறித்துப் பேசியுள்ளனர் என்றார்.
கோபால் பாக்லே இவ்வாறு கூறியபோதிலும், மோடி-ஜீ ஜின்பிங் இடையிலான பேச்சு அதிகாரப்பூர்வமற்றது என்று சீனா ஏற்கெனவே நிராகரித்துவிட்டது.
அச்சுறுத்தும் சீனா: சிக்கிம் மாநிலத்தின் டோகா லா பகுதி குறித்து இந்தியா-சீனா இடையே மோதல் போக்கு அதிகரித்துள்ள சூழலில் இந்தியாவுக்கு அச்சுறுத்தல் விடுக்கும் விதமாக சீனா தொடர்ந்து கருத்துகளைக் கூறி வருகிறது.
முதலில் 1962-ஆம் ஆண்டு நடைபெற்ற போரில் இந்தியா தோல்வியடைந்ததைச் சுட்டிக் காட்டியது. அதன் பிறகு, சிக்கிம் தனிநாடு கோரிக்கைக்கு ஆதரவு அளிப்போம் என்று கருத்து தெரிவித்தது.
அடுத்ததாக, இந்தியாவுக்கு எதிராக காஷ்மீர் விவகாரத்தை கையிலெடுத்த சீனா, பாகிஸ்தான் கேட்டுக் கொண்டால் காஷ்மீருக்குள் மூன்றாவது நாட்டின் (சீனா) ராணுவம் நுழைய முடியும் என்றும் கூறியிருந்தது. இறுதியாக, காஷ்மீர் விவகாரத்தில் தலையிட்டு இந்தியா- பாகிஸ்தான் இடையே பதற்றத்தைக் குறைக்க ஆர்வத்துடன்இருப்பதாகவும் கூறியது.
கடந்த காலத்தில் எல்லைப் பிரச்னையை பேசித் தீர்த்ததுபோல இப்போதும், பேச்சு நடத்தி தீர்வு காணலாம் என்ற நோக்கில் இந்திய வெளியுறவுச் செயலாளர் எஸ்.ஜெய்சங்கர் சில நாள்களுக்கு முன்பு கூறியதையும் சீனா நிராகரித்துவிட்டது.
டோகா லா பகுதிக்கு சொந்தம் கொண்டாடி வரும் சீனா, இந்தியா தனது படைகளை உடனடியாக வாபஸ் பெற வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com