எல்லையில் சீனா சாலை அமைப்பது இந்திய நலன்களைப் பாதிக்கும்: எதிர்க்கட்சிகளுக்கு மத்திய அரசு விளக்கம்

சர்வதேச எல்லையில் சீனா சாலை அமைப்பது இந்தியாவின் பாதுகாப்பு நலன்களைப் பாதிக்கும் என்று எதிர்க்கட்சிகளிடம் மத்திய அரசு விளக்கமளித்துள்ளது.
வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ், உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங். (கோப்புப் படம்)
வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ், உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங். (கோப்புப் படம்)

சர்வதேச எல்லையில் சீனா சாலை அமைப்பது இந்தியாவின் பாதுகாப்பு நலன்களைப் பாதிக்கும் என்று எதிர்க்கட்சிகளிடம் மத்திய அரசு விளக்கமளித்துள்ளது.
எல்லையில் சீனாவுடனான போர்ப் பதற்றம், காஷ்மீர் விவகாரம் ஆகியவை குறித்து எதிர்க்கட்சிகளுக்கு மத்திய அரசு வெள்ளிக்கிழமை விளக்கம் அளித்தது. இது தொடர்பாக தில்லியில் நடைபெற்ற கூட்டத்தில் மத்திய அரசு சார்பில் உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ், பாதுகாப்புத் துறை அமைச்சர் அருண் ஜேட்லி, தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவால் மற்றும் அரசு உயதிகாரிகள் கலந்து கொண்டனர்.
எதிர்க்கட்சிகளின சார்பில், காங்கிரஸ் மூத்த தலைவர்கள் குலாம் நபி ஆஸாத், மல்லிகார்ஜுன கார்கே, மார்க்சிஸ்ட் பொதுச் செயலர் சீதாரம் யெச்சூரி, சமாஜவாதி கட்சித் தலைவர் முலாயம் சிங் யாதவ், தேசியவாத காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த தாரிக் அன்வர், ஐக்கிய ஜனதா தளம் சார்பில் அக்கட்சியின் மூத்த தலைவர் சரத் யாதவ், கே.சி.தியாகி, திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் டெரிக் ஓ பிரையன் ஆகியோர் கலந்து கொண்டனர். ஆளும் பாஜக கூட்டணியில் அங்கம் வகிக்கும் லோக் ஜனசக்தி கட்சியின் தலைவர் ராம் விலாஸ் பாஸ்வானும் இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டார்.
இந்நிலையில், இந்திய- சீன எல்லையில் நிலவும் சூழல் குறித்தும், ஜம்மு- காஷ்மீரின் நிலைமை குறித்தும் எதிர்க்கட்சித் தலைவர்களுக்கு மத்திய அமைச்சர்களும், உயரதிகாரிகளும் விளக்கம் அளித்தனர்.
சீனா செல்கிறார் அஜித் தோவால் :
அப்போது, சர்வதேச எல்லையில் சீனா சாலை அமைப்பது இந்தியாவின் பாதுகாப்பு நலன்களைப் பாதிக்கும். தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் வரும் 26,27- ஆம் தேதிகளில் சீனாவுக்கு பயணம் மேற்கொள்கிறார். அப்போது அந்நாட்டு அதிகாரிகளிடம் இந்தியாவின் நிலைப்பாடு குறித்து எடுத்துரைப்பார் என்று தெரிவித்தனர்.
மேலும், இந்த விவகாரங்களில் மத்திய அரசு மேற்கொண்டுள்ள நடவடிக்கைகள் குறித்தும் எதிர்க்கட்சித் தலைவர்களிடம் விளக்கம் அளிக்கப்பட்டது.
சீனா பிரச்னை, காஷ்மீர் விவகாரம் ஆகியவற்றை எதிர்கொள்வதில் கருத்தொற்றுமையை ஏற்படுத்தும் முயற்சியாக இந்தக் கூட்டம் நடைபெற்றதாகக் கருதப்படுகிறது.
இதனிடையே, நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத் தொடர், வரும் திங்கள்கிழமை தொடங்கவுள்ளது.
இதில், எல்லையில் சீனாவுடனான மோதல், காஷ்மீர் பிரச்னை ஆகியவற்றை முன்வைத்து புயலைக் கிளப்புவதற்கு எதிர்க்கட்சிகள் திட்டமிட்டிருப்பதாகத் தகவல்கள் வெளியாகின. எனவே, அவர்களுக்கு அரசின் செயல்பாடுகளை விளக்கி, அவர்களைச் சமாதானப்படுத்தும் விதமாகவும் இக்கூட்டம் நடைபெற்றதாகக் கருதப்படுகிறது.
கூட்டத்துக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய காங்கிரஸ் தலைவர் குலாம் நபி ஆஸாத், ஆனந்த் சர்மா ஆகியோர் கூறியதாவது:
எல்லைப் பிரச்னை தொடர்பாக காங்கிரஸ் கட்சிக்கு இருந்த சந்தேகங்களை கூட்டத்தில் எழுப்பினோம். காஷ்மீர் பிரச்னையாக இருந்தாலும் சரி, சீனாவுடனான எல்லைப் பிரச்னையாக இருந்தாலும் சரி நமது தேசத்தின் நலன்தான் முக்கியமானது என்று மத்திய அரசு விளக்கமளித்துள்ளது. எனினும், இந்த விவகாரத்தை நாடாளுமன்றத்தில் எழுப்புவோம்.
காஷ்மீரில் அமர்நாத் யாத்ரீகர்கள் மீது தாக்கல் நடைபெற்றதற்கு பாதுகாப்பு குறைபாடுகள்தான் காரணம். காஷ்மீர் பள்ளத்தாக்கில் அமைதியை ஏற்படுத்த உள்ளூர் மக்களுடன் இணைந்து அரசு முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும். அதே நேரத்தில் தேச பாதுகாப்பு விஷயத்தில் மத்திய அரசுக்கு அனைவரும் துணை நிற்போம் என்று உறுதியளித்தோம் என்றனர்.
'நாங்கள் எழுப்பிய பல முக்கியக் கேள்விகளுக்கு அரசு உரிய பதிலளிக்கவில்லை' என்று திரிணமூல் காங்கிரஸ் எம்.பி. தெரிக் ஓ பிரையன் குற்றம்சாட்டினார்.
கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது குறித்து சீதாராம் யெச்சூரி கூறுகையில், பிரச்னையைத் தீர்க்க மத்திய அரசு எடுத்து வரும் முயற்சிகள் குறித்து மத்திய அரசு தரப்பில் விளக்கமளித்தார்கள் என்றார்.
மத்திய அமைச்சர் ராம் விலாஸ் பாஸ்வான் கூறியதாவது: டோகா லா பிரச்னை குறித்து முழுமையாக விளக்கமளித்தார்கள். இந்த பிரச்னையில் அரசுக்கு உறுதுணையாக இருப்போம் என்று எதிர்க்கட்சித் தலைவர்கள் வாக்குறுதி அளித்தனர் என்றார்.
வெளியுறவுத் துறை விளக்கம்: கூட்டத்துக்குப் பிறகு வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் கோபால் பாக்லே கூறியதாவது:
தேச நலன் சார்ந்த விஷயத்தில் மத்திய அரசு எடுக்கும் முடிவுக்கு துணை நிற்போம் என கூட்டத்தில் பங்கேற்ற அனைத்துக் கட்சிகளும் உறுதியளித்தன. அதே நேரத்தில் இந்தியா- சீனா இடையே பிரச்னையைத் தீர்க்க ராஜீய ரீதியில் பேச்சு நடத்தப்படுவது முக்கியம் என்றும் வலியுறுத்தப்பட்டது என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com