பிகாரில் ஆளும் கூட்டணியில் விரிசல் அதிகரிப்பு: சோனியா சமரச முயற்சி

பிகாரில் ஆளும் கூட்டணியில் இடம்பெற்றிருக்கும் ஐக்கிய ஜனதா தளம், ராஷ்ட்ரீய ஜனதா தள(ஆர்ஜேடி) கட்சிகளிடையே விரிசல் அதிகரித்துள்ளது. இதையடுத்து, அந்த 2 கட்சிகளையும்
பிகாரில் ஆளும் கூட்டணியில் விரிசல் அதிகரிப்பு: சோனியா சமரச முயற்சி

பிகாரில் ஆளும் கூட்டணியில் இடம்பெற்றிருக்கும் ஐக்கிய ஜனதா தளம், ராஷ்ட்ரீய ஜனதா தள(ஆர்ஜேடி) கட்சிகளிடையே விரிசல் அதிகரித்துள்ளது. இதையடுத்து, அந்த 2 கட்சிகளையும் சமரசப்படுத்தும் முயற்சியில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி ஈடுபட்டுள்ளார்.
பிகார் சட்டப் பேரவைத் தேர்தலில் ஐக்கிய ஜனதா தளம், ஆர்ஜேடி, காங்கிரஸ் ஆகியவை கூட்டணி அமைத்து மகா கூட்டணி என்ற பெயரில் போட்டியிட்டன. இத்தேர்தலில் ஐக்கிய ஜனதா தளக் கட்சி 71 இடங்களில் வெற்றி பெற்றது. லாலு பிரசாத் யாதவின் ஆர்ஜேடி 80 இடங்களில் வெற்றி பெற்றது. காங்கிரஸ் 27 தொகுதிகளிலும், பாஜக 53 தொகுதிகளிலும் வெற்றி பெற்றன. இதையடுத்து, ஆர்ஜேடி ஆதரவுடன் ஐக்கிய ஜனதா தளக் கட்சி மீண்டும் ஆட்சியமைத்தது. முதல்வராக நிதீஷ் குமாரும், துணை முதல்வராக லாலுவின் மகன் தேஜஸ்வி யாதவும் உள்ளனர். லாலுவின் மற்றொரு மகனுக்கு அமைச்சர் பதவி அளிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, லாலு பிரசாத் யாதவ், தேஜஸ்வி பிரசாத் உள்ளிட்ட அவரது குடும்பத்தினருக்கு எதிராக ஊழல் குற்றச்சாட்டு எழுந்ததால், மகா கூட்டணியில் விரிசல் ஏற்படத் தொடங்கியது. குறிப்பாக, லாலு பிரசாத் யாதவ் குடும்பத்தினருக்கு எதிராக சிபிஐ புதிய ஊழல் புகாரை பதிவு செய்ததையடுத்து, அந்த விரிசல் அதிகரிக்கத் தொடங்கியது.
பிகார் துணை முதல்வராக இருக்கும் தேஜஸ்வி மீதான ஊழல் குற்றச்சாட்டு குறித்து 4 நாள்களுக்குள் பதிலளிக்க வேண்டும் என்று ஆர்ஜேடி-க்கு ஐக்கிய ஜனதா தளம் கட்சி கெடு விதித்தது. இதற்கு, பிகார் சட்டப் பேரவையில் தங்கள் கட்சிக்கு 80 இடங்கள் இருப்பதை மறந்துவிடக் கூடாது என்று ஐக்கிய ஜனதா தளத்துக்கு ஆர்ஜேடிஎச்சரிக்கை விடுத்தது.
இதற்கு, பாட்னாவில் செய்தியாளர்களிடம் பேசிய ஐக்கிய ஜனதா தளக் கட்சி செய்தித் தொடர்பாளர் நீரஜ் குமார் பதிலடி கொடுத்தார். அப்போது அவர் கூறுகையில், '80 எம்எல்ஏக்களுடன் ஆணவத்துடன் நடக்கும் ஆர்ஜேடி, 2010-ஆம் ஆண்டு தேர்தலில் 22 தொகுதிகளில் மட்டும் வென்றதை மறக்கக் கூடாது. 2015-ஆம் ஆண்டு தேர்தலில் அக்கட்சி அதிக இடங்களில் வென்றதற்கு, நிதீஷ் குமாரின் நம்பகமான தலைமையே காரணம். ஆதலால், தேஜஸ்வி மீதான குற்றச்சாட்டுக்கு ஆர்ஜேடி விரைந்து விளக்கம் அளிக்க வேண்டும்' என்றார்.
அக்கட்சியின் மற்றொரு செய்தித் தொடர்பாளர் கே.சி. தியாகி கூறுகையில், 'ஊழல் விவகாரத்தில் நிதீஷ் குமாரின் நிலையை அனைவரும் நன்கறிவர். அவர் எப்போதும் ஊழல் விவகாரத்தில் சமரசம் செய்ய மாட்டார்' என்றார்.
ராஜிநாமா செய்ய தேஜஸ்வி முடிவு?: இதனிடையே, துணை முதல்வர் பதவியிலிருந்து ராஜிநாமா செய்ய தேஜஸ்வி முடிவு செய்து விட்டதாக திடீரென செய்திகள் வெளியாகின. வழக்கு ஒன்றில் நீதிமன்றத்தில் ஆஜராக வெளியூர் சென்றுள்ள லாலு பிரசாத், ராஞ்சிக்கு சனிக்கிழமை திரும்பி வந்ததும், அவருடன் இதுகுறித்து ஆலோசித்துவிட்டு, ராஜிநாமா முடிவு குறித்த அறிவிப்பை தேஜஸ்வி வெளியிட இருப்பதாகவும் அச்செய்திகள் தெரிவித்தன. ஆனால், அதை தேஜஸ்வி மறுத்துள்ளார்.
இந்த நிலையில், நிதீஷ் குமார், லாலு பிரசாத் யாதவ் ஆகியோரை சமரசம் செய்யும் முயற்சியில் சோனியா காந்தி ஈடுபட்டுள்ளதாக காங்கிரஸ் கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன. இரண்டு பேரையும் தொலைபேசியில் தொடர்பு கொண்டு சோனியா காந்தி பேசியதாகவும் அந்த வட்டாரங்கள் கூறின.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com