ஜன் தன் கணக்குகளில் டெபாசிட் ரூ.64,564 கோடியாக அதிகரிப்பு
By DIN | Published on : 17th July 2017 01:23 AM | அ+அ அ- |

ஜன் தன் வங்கிக் கணக்குகளில் இதுவரை இல்லாத அளவு மிக அதிகமாக ரூ.64,564 கோடி டெபாசிட் செய்யப்பட்டதாகவும், கடந்த ஆண்டு உயர் மதிப்பு ரூபாய் நோட்டுகள் திரும்பப் பெறப்பட்ட முதல் 7 மாதங்களில் மட்டும் அந்தக் கணக்குகளில் ரூ.300 கோடி செலுத்தப்பட்டதாகவும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.
புழக்கத்தில் இருந்த 500, 1000 ரூபாய் நோட்டுகளை செல்லாதவையாக்கும் அறிவிப்பை பிரதமர் நரேந்திர மோடி கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 8}ஆம் தேதி வெளியிட்டார். பொதுமக்கள் தங்களிடமிருந்த அந்த ரூபாய் நோட்டுகளை வங்கிகளில் செலுத்தி, செல்லுபடியாகக் கூடிய ரூபாய் நோட்டுகளாகப் பெற்றுக் கொள்ளலாம் என்று அவர் அப்போது தெரிவித்தார்.
வரி ஏய்ப்பு செய்யும் நோக்குடன் பதுக்கப்பட்டுள்ள கருப்புப் பணத்தை வெளிக் கொண்டு வந்து, வரி வருவாயைப் பெருக்குவது, அந்த அதிரடி அறிவிப்பின் முக்கிய நோக்கங்களில் ஒன்றாகக் கூறப்பட்டது. எனினும், ஏழை எளிய மக்களுக்கும் வங்கிச் சேவைகளின் பலனை அளிக்கும் நோக்கில் பிரதமர் மோடியால் முன்னர் அறிமுகப்படுத்தப்பட்ட ஜன் தன் வங்கிக் கணக்குகளை கருப்புப் பணம் வைத்திருப்பவர்கள் அதிக அளவில் பயன்படுத்துவதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. கணக்கில் காட்டாமல் பதுக்கியிருந்த பெருந்தொகைகளை அவர்கள் பிறரது வங்கிக் கணக்குகள் மூலம், அந்த வாடிக்கையாளர்களைக் கொண்டே செலுத்துவதாக நாடு முழுவதும் பரவலாகக் கூறப்பட்டது.
இதையடுத்து, ஜன் தன் வங்கிக் கணக்குகளில் முறைகேடாக பணம் செலுத்துவோர் மீது கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று மத்திய அரசு எச்சரித்தது. இந்த நிலையில், ரூபாய் நோட்டு வாபஸ் நடவடிக்கைக்குப் பிறகு ஜன் தன் வங்கிக் கணக்குகளில் செலுத்தப்பட்டுள்ள தொகை குறித்து தகவலறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் எழுப்பப்பட்ட கேள்விக்கு, மத்திய நிதியமைச்சகம் அளித்துள்ள பதிலில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
கடந்த ஜூன் மாதம் 14}ஆம் தேதி நிலவரப்படி, ஜன் தன் திட்டத்தின் கீழ் 28.9 கோடி வங்கிக் கணக்குகள் உள்ளன. இவற்றில் அரசுடைமையாக்கப்பட்ட வங்கிகளில் 23.7 கோடி கணக்குகளும், மாநில அரசுகளின் ஊரக வங்கிகளில் 4.7 கோடி கணக்குகளும் உள்ளன. தனியார் வங்கிகளில் 92.7 லட்சம் ஜன் தன் கணக்குகள் உள்ளன.
அனைத்து ஜன் தன் கணக்குகளிலும், மொத்தம் ரூ.64,564 கோடி டெபாசிட் செய்யப்பட்டுள்ளது. இவற்றில் பொதுத்துறை வங்கிகளில் ரூ.50,800 கோடியும், ஊரக மற்றும் தனியார் வங்கிகளில் தலா ரு.11,683 கோடி மற்றும் ரூ.2,080.62 கோடி டெபாசிட் செய்யப்பட்டுள்ளது என்று நிதியமைச்சகம் தகவல் அளித்துள்ளது.
கடந்த ஆண்டு நவம்பர் 16}ஆம் தேதி நிலவரப்படி, 25.58 கோடி ஜன் தன் வங்கிக் கணக்குகளில் ரூ.64,252.15 கோடி டெபாசிட் செய்யப்பட்டிருந்ததாக மத்திய நிதித் துறை இணையமைச்சர் சந்தோஷ் குமார் கங்வார் மக்களவையில் தெரிவித்தார். இந்த வகையில், கடந்த ஆண்டின் நவம்பர் மாதம் 16}ஆம் தேதியிலிருந்து இந்த ஆண்டின் ஜூன் மாதம் 14}ஆம் தேதி வரையிலான 7 மாதங்களில் மட்டும் ஜன் தன் கணக்குகளில் ரூ.311.93 கோடி ரூபாய் செலுத்தப்பட்டுள்ளது.