காஷ்மீரில் 3 ஹிஸ்புல் பயங்கரவாதிகள் கைது

காஷ்மீரின் பாராமுல்லா மாவட்டத்தில் ஹிஸ்புல் முஜாஹிதீன் பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்த 3 பயங்கரவாதிகளை பாதுகாப்புப் படையினர் கைது செய்தனர்.

காஷ்மீரின் பாராமுல்லா மாவட்டத்தில் ஹிஸ்புல் முஜாஹிதீன் பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்த 3 பயங்கரவாதிகளை பாதுகாப்புப் படையினர் கைது செய்தனர்.
இளைஞர்களை தங்கள் அமைப்பில் இணைத்து, பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் உள்ள பயங்கரவாத முகாம்களுக்கு அனுப்ப அந்த மூவரும் திட்டமிட்டிருந்ததாக போலீஸார் தெரிவித்தனர்.
இதுகுறித்து பாராமுல்லா காவல்துறை முதுநிலை கண்காணிப்பாளர் இம்தியாஸ் ஹுசைன் ஞாயிற்றுக்கிழமை கூறியதாவது:
குப்வாரா மாவட்டத்தைச் சேர்ந்த பர்வேஸ் வானி என்ற ஹிஸ்புல் முஜாஹிதீன் தளபதியின் வழிகாட்டுதலின் பேரில், பாராமுல்லா பகுதியில் 3 பேர் கொண்ட ஒரு பயங்கரவாதக் குழு இயங்கி வந்தது.
அவர்களைப் பற்றி கிடைத்த தகவலின் அடிப்படையில், பாதுகாப்புப் படையினரின் உதவியுடன் பாராமுல்லா மாவட்டத்தில் போலீஸார் நடத்திய தேடுதல் வேட்டையில் அந்த 3 பேரும் கைது செய்யப்பட்டனர்.
அவர்களிடமிருந்து ஆயுதங்கள், வெடிபொருள்கள் மற்றும் ரூ.1 லட்சம் மதிப்புள்ள இந்திய ரூபாய் நோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன.
அன்ஸாருல்லா தாந்தரே, அப்துல் ரஷீத் பட், மெஹ்ரஜுதீன் காக் ஆகிய அந்த மூவரும், பாரமுல்லா மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் வசித்து வந்தன
ர்.
காஷ்மீர் இளைஞர்களை தங்கள் அமைப்பில் சேர்த்து, பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் உள்ள காலித் பின் வாலீத் முகாமில் அமைந்துள்ள ஹிஸ்புல் முகாமுக்கு அனுப்ப அவர்கள் திட்டமிட்டிருந்தனர்.
இதற்காக, பாகிஸ்தான் தூதரக உதவியுடன் சட்டப்பூர்வமாக நுழைவு இசைவு (விசா) பெற்று, அந்த இளைஞர்களை பாகிஸ்தானுக்கு அனுப்பவும் அவர்கள் திட்டமிட்டிருந்தனர்.
கைது செய்யப்பட்டவர்களில் ஒருவரான அப்துல் ரஷீத், கடந்த மே மாதம் பாகிஸ்தான் சென்று, அங்கு பயங்கரவாதப் பயிற்சி பெற்றுள்ளதாகத் தெரிகிறது.
ஒரு பிரிவினைவாத அமைப்பின் பரிந்துரையின் பேரில் அவருக்கு பாகிஸ்தான் தூதரகம் விசா வழங்கியது.
இளைஞர்களை ஹிஸ்புல் பயங்கரவாத அமைப்பில் இணைப்பது மட்டுமன்றி, பிற பயங்கரவாத அமைப்புகளுக்கும் பல்வேறு உதவிகளை கைது செய்யப்பட்ட 3 பேரும் அளித்து வந்தனர்.
அவர்கள் மீது சட்ட விரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டத்தின்கீழ் குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டு, விசாரணை தொடங்கப்பட்டது.
மேலும், ஹிஸ்புல் அமைப்பில் சேர்க்கப்படவிருந்த சுமார் 10 சிறுவர்கள் மீட்கப்பட்டு, அவர்களது பெற்றோர்களிடம் ஒப்படைக்கப்பட்டனர் என்றார் இம்தியாஸ் ஹுசைன்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com