"நீட்' தேர்வில் தமிழகத்திற்கு விலக்கு அளிக்க வேண்டும்

இளநிலை மருத்துவம் மற்றும் பல் மருத்துவப் படிப்பு சேர்க்கைக்காக நடத்தப்படும் தேசிய தகுதிகாண் நுழைவுத் தேர்வில் (நீட்) இருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்க வேண்டும் என
"நீட்' தேர்வில் தமிழகத்திற்கு விலக்கு அளிக்க வேண்டும்

இளநிலை மருத்துவம் மற்றும் பல் மருத்துவப் படிப்பு சேர்க்கைக்காக நடத்தப்படும் தேசிய தகுதிகாண் நுழைவுத் தேர்வில் (நீட்) இருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்க வேண்டும் என தில்லியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற நாடாளுமன்ற அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் அதிமுக வலியுறுத்தியது.

நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத் தொடர் திங்கள்கிழமை தொடங்குகிறது. இதையொட்டி, நாடாளுமன்ற வளாகத்தில் அனைத்துக் கட்சிகள் ஆலோசனைக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
இக்கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி, நாடாளுமன்ற விவகாரத் துறை அமைச்சர் அனந்த் குமார், உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், நிதி அமைச்சர் அருண் ஜேட்லி, காங்கிரஸ் மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலைவர் சீதாராம் யெச்சூரி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசியச் செயலர் டி.ராஜா, நாடாளுமன்ற அதிமுக குழுத் தலைவர் டாக்டர் பி.வேணுகோபால், மாநிலங்களவை அதிமுக குழுத் தலைவர் ஏ.நவநீதகிருஷ்ணன் உள்ளிடோர் பங்கேற்றனர்.
இக்கூட்டத்தின் போது "நீட்' தேர்வு, ஜிஎஸ்டி வரி, மீனவர் பிரச்னை ஆகிய விஷயங்கள் குறித்து ஏ.நவநீதகிருஷ்ணன் எம்.பி. பேசினார். இது குறித்து பின்னர் அவர் "தினமணி' செய்தியாளரிடம் கூறியதாவது:
நாடாளுமன்ற அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் தமிழகத்தின் நலன் சார்ந்த மூன்று விஷங்களை முன்வைத்தேன். அதில் நீட் தேர்வு விவகாரமும் ஒன்று. நீட் தேர்வு சிபிஎஸ்இ பாடத் திட்ட முறையிலான தேர்வாகும். சிபிஎஸ்இ முறையிலான பள்ளிப் படிப்பில் வசதி படைத்தவர்களின் குழந்தைகள்தான் படித்துள்ளனர். ஆனால், மாநிலப் பாடத் திட்ட முறையிலான தமிழ் வழியில் தமிழகம் முழுவதும் உள்ள ஏழைக் கிராமப்புற மாணவர்கள் படித்துள்ளனர்.
இதற்கு முன்பு மாநிலப் பாடத்திட்டத்தில் பள்ளிக் கல்வி பயின்று மருத்துவப் படிப்புகள் படித்து அமெரிக்கா, லண்டன் போன்ற வெளிநாடுகளில் பணிபுரியும் தமிழக மருத்துவர்கள் பிரபலமானவர்களாக இருந்து வருகின்றர். இதனால், கிராமப்புற மாணவர்களின் நலன் கருதி, "நீட்' தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்க வேண்டும்.
அதேபோன்று, இலங்கை அரசு மீன் வளம் மற்றும் நீர்வளத் திருத்த மசோதாவை அந்நாட்டு நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்துள்ளது. இந்த சட்டமானது தமிழக மீனவர்களின் நலன்களைப் பாதிக்கும் வகையில்அமைந்துள்ளது. இதனால், இச்சட்டத்தை நிறைவேற்றாமல் இருப்பதற்கு மத்திய அரசு தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.
மேலும், கைத்தறி, விசைத்தறி தயாரிப்புகளுக்கு ஜிஎஸ்டி வரி விதிப்பை எதிர்த்து தமிழகத்தில் நெசவாளர்கள் போராடி வருகின்றனர். இதனால், 7 ஆயிரம் விசைத்தறிகள் இயங்கவில்லை. 25 ஆயிரம் நெசவாளர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். நெசவாளர்களின் நலன் கருதி அவர்களது உற்பத்திப் பொருள்களுக்கு சரக்கு, சேவை வரி வதிப்பில் இருந்து விலக்கு அளிக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூட்டத்தில் வலியுறுத்தினேன். மேலும் இதே கோரிக்கைகள் நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத் தொடரிலும் வலியுறுத்தப்படும் என்றார் நவநீதகிருஷ்ணன்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com