விஐபி ஹெலிகாப்டர் ஒப்பந்த பேர வழக்கு: துபை நிறுவன பெண் அதிகாரி கைது
By DIN | Published on : 18th July 2017 01:05 AM | அ+அ அ- |
மிகவும் முக்கிய பிரமுகர்களுக்கு (விஐபி) ஹெலிகாப்டர்கள் வாங்க ஒப்பந்தம் கையெழுத்தானதில் பேரம் நடைபெற்றது தொடர்பாக பதிவு செய்யப்பட்டிருக்கும் வழக்கில், துபை நிறுவனத்தைச் சேர்ந்த பெண் இயக்குநரை அமலாக்கத் துறை அதிகாரிகள் திங்கள்கிழமை கைது செய்துள்ளனர்.
இதுகுறித்து அமலாக்கத் துறை அதிகாரிகள் கூறுகையில், 'இந்த ஊழல் விவகாரம் தொடர்பாக துபை நாட்டைச் சேர்ந்த யுஹெச்ஒய் சக்சேனா மற்றும் மேட்ரிக்ஸ் ஹோல்டிங்க்ஸ் நிறுவனத்தின் பெண் இயக்குநரான சிவானி சக்சேனாவை சட்டவிரோத பணப்பரிவர்த்தனை சட்டப்பிரிவின்கீழ் கைது செய்துள்ளோம். இதையடுத்து, அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினோம். அவரை 4 நாள்கள் நீதிமன்றக் காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது' என்றனர். இந்த ஊழல் விவகாரம் தொடர்பாக அமலாக்கத் துறை கடந்த 2014-ஆம் ஆண்டு சட்டவிரோத பணப்பரிவர்த்தனை சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்தது. அதில், இந்திய விமானப்படை முன்னாள் தலைமைத் தளபதி எஸ்.பி. தியாகி உள்ளிட்ட 21 பேரின் பெயர்கள் இடம்பெற்றுள்ளன.
இத்தாலி நாட்டின் அகஸ்டா வெஸ்ட் லேண்ட் நிறுவனத்திடம் இருந்து குடியரசுத் தலைவர், பிரதமர் உள்ளிட்ட மிகவும் முக்கிய பிரமுகர்கள் பயணம் செய்ய அதிநவீன ஹெலிகாப்டர்கள் வாங்குவதற்கு ரூ.3,600 கோடி மதிப்பில் இந்திய விமானப்படை ஒப்பந்தம் செய்தது. இதில் ரூ.423 கோடி அளவுக்கு ஊழல் நடந்திருப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து, அந்த ஒப்பந்தத்தை மத்திய அரசு கடந்த 2014-ஆம் ஆண்டு ரத்து செய்தது.