குடியரசு துணைத் தலைவர் தேர்தல்: பாஜக வேட்பாளர் வெங்கய்ய நாயுடு: இன்று வேட்பு மனு தாக்கல் செய்கிறார்

குடியரசு துணைத் தலைவர் பதவிக்கான தேர்தலில், மத்தியில் ஆளும் பாஜக கூட்டணி சார்பில் மூத்த மத்திய அமைச்சர் வெங்கய்ய நாயுடு (68) வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.
குடியரசு துணைத் தலைவர் தேர்தல்: பாஜக வேட்பாளர் வெங்கய்ய நாயுடு: இன்று வேட்பு மனு தாக்கல் செய்கிறார்

குடியரசு துணைத் தலைவர் பதவிக்கான தேர்தலில், மத்தியில் ஆளும் பாஜக கூட்டணி சார்பில் மூத்த மத்திய அமைச்சர் வெங்கய்ய நாயுடு (68) வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். அவர் செவ்வாய்க்கிழமை (ஜூலை 18) தனது வேட்பு மனுவை தாக்கல் செய்யவுள்ளார்.
குடியரசு துணைத் தலைவராக இருக்கும் ஹமீது அன்சாரி, அப்பதவியை கடந்த 2007-ஆம் ஆண்டு முதல் தொடர்ந்து 10 ஆண்டுகளாக வகித்துள்ளார். அவரது பதவிக்காலம் ஆகஸ்ட் மாதத்துடன் நிறைவடையவுள்ளது. இதையடுத்து, அந்தப் பதவிக்கு ஆகஸ்ட் 5-ஆம் தேதி தேர்தல் நடக்கவுள்ளது.
இந்தத் தேர்தலில், காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் சார்பில் மகாத்மா காந்தியின் பேரனும், மேற்கு வங்க முன்னாள் ஆளுநருமான கோபால கிருஷ்ண காந்தி வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். மத்தியில் ஆளும் பாஜக கூட்டணியின் சார்பில் வேட்பாளராக யாரும் அறிவிக்கப்படாமல் இருந்து வந்தது. எனினும், அக்கட்சியின் மூத்த தலைவர்களான மத்திய அமைச்சர் வெங்கய்ய நாயுடு, தமிழக பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவ் ஆகியோரில் ஒருவர், வேட்பாளராக நிறுத்தப்படலாம் என்று எதிர்பார்க்கப்பட்டது.
குடியரசுத் தலைவர் தேர்தலில் வடமாநிலத்தைச் சேர்ந்த ராம்நாத் கோவிந்தை மத்தியில் ஆளும் பாஜக கூட்டணி வேட்பாளராக அறிவித்ததால், குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் தென்மாநிலங்களைச் சேர்ந்த ஒருவரையே பாஜக தேர்வு செய்யும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
இந்நிலையில், தில்லியில் பாஜக ஆட்சிமன்ற குழுக் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. இதில், பிரதமர் நரேந்திர மோடி, பாஜக தேசியத் தலைவர் அமித் ஷா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில், குடியரசு துணைத் தலைவர் பதவிக்கான தேர்தலில், தேசிய ஜனநாயகக் கூட்டணியின் வேட்பாளராக வெங்கய்ய நாயுடுவை நிறுத்துவது என்று ஒருமனதாக முடிவெடுக்கப்பட்டது.
பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து
பிரதமர் நரேந்திர மோடி சுட்டுரையில் திங்கள்கிழமை வெளியிட்ட பதிவுகளில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது: வெங்கய்ய நாயுடுவை பல ஆண்டுகளாக எனக்குத் தெரியும். அவரது கடின உழைப்பு, தீவிர பற்று ஆகியவற்றைக் கண்டு நான் வியப்படைந்துள்ளேன்.
விவசாயியின் மகனான அவர், பொது வாழ்க்கையில் நீண்ட அனுபவம் உள்ளவர். அரசியல் வட்டத்திலும் மிகுந்த செல்வாக்கு கொண்டவர். நாடாளுமன்றவாதியாக நீண்ட அனுபவம் கொண்டவர் என்ற வகையில், மாநிலங்களவைத் தலைவராக அவரால் சிறப்பான பங்களிப்பை அளிக்க முடியும் என்று அந்தப் பதிவுகளில் பிரதமர் மோடி குறிப்பிட்டுள்ளார்.
அமைச்சர் பதவி ராஜிநாமா
தேசிய ஜனநாயகக் கூட்டணியின் குடியரசுத் தலைவர் வேட்பாளராகத் தாம் தேர்வு செய்யப்பட்டதைத் தொடர்ந்து, மத்திய அமைச்சர் வெங்கய்ய நாயுடு தனது பதவியை திங்கள்கிழமை ராஜிநாமா செய்தார்.
இத்தகவலை அவருக்கு நெருக்கமான ஒருவர் தெரிவித்தார். அவர் மேலும் கூறுகையில், 'குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் போட்டியிடுவதற்கு சட்டரீதியில் பார்த்தால், நாயுடு அமைச்சர் பதவியை விட்டு விலக வேண்டிய அவசியம் ஏதுமில்லை. எனினும், உயரிய அப்பதவிக்கான தேர்தல் களத்தில் வேட்பாளராகப் போட்டியிடுவதை முன்னிட்டு, மிக உயரிய அரசியல் மாண்பு கருதி அவர் தனது பதவியை ராஜிநாமாசெய்துள்ளார்' என்றார்.
மத்திய அரசில் தகவல்-ஒலிபரப்பு மற்றும் வீட்டுவசதி-ஊரக மேம்பாடு ஆகிய இரு இலாகாக்களை வெங்கய்ய நாயுடு வகித்து வந்தது குறிப்பிடத்தக்கது.
வாழ்க்கைக் குறிப்பு
ஆந்திர மாநிலம், நெல்லூர் மாவட்டத்தில் கடந்த
1949-ஆம் ஆண்டு பிறந்தவர் வெங்கய்ய நாயுடு. விசாகப்பட்டினத்திலுள்ள ஆந்திர சட்டப் பல்கலைக்கழகத்தில் சட்ட இளங்கலை பட்டப்படிப்பு முடித்துள்ள அவர், தனது கல்லூரி வாழ்க்கையின்போதே ஆர். எஸ். எஸ்., ஏபிவிபி ஆகிய அமைப்புகளில் உறுப்பினராக இருந்தார். ஆந்திர பல்கலைக்கழக மாணவர் அமைப்பின் தலைவராக தேர்வு செய்யப்பட்ட வெங்கய்ய நாயுடு, கடந்த 1972-ஆம் ஆண்டில் நடைபெற்ற ஜெய் ஆந்திரா இயக்கத்தில் முக்கியப் பங்கு வகித்தார்.
நெருக்கடி நிலைக் காலத்தில் அப்போதைய காங்கிரஸ் அரசின் அடக்குமுறையை எதிர்த்து போராடியதால், சிறையில் அடைக்கப்பட்டார்.
பாஜகவில் மாநில, மத்திய பதவிகளில் பல்வேறு முக்கியப் பொறுப்புகளை அவர் வகித்துள்ளார்.
முன்னாள் பிரதமர் அடல்பிகாரி வாஜ்பாய் தலைமையிலான அமைச்சரவையில் ஊரக மேம்பாட்டுத் துறை அமைச்சராகவும் இருந்துள்ளார். 2002-ஆம் ஆண்டில் பாஜக-வின் தேசியத் தலைவராக பதவியேற்றார். பின்னர் 2004-இல் அந்தப் பதவிக்கு மீண்டும் தேர்வு செய்யப்பட்டார்.
எனினும், 2004-ஆம் ஆண்டில் அவரே முன்வந்து தலைவர் பதவியை ராஜிநாமா செய்தார்.
2014-ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில், பாஜக மிகப்பெரிய வெற்றி பெற்று மத்தியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் ஆட்சியமைத்தது. இதையடுத்து, பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவையில் மத்திய தகவல், ஒலிபரப்பு மற்றும் வீட்டுவசதி, நகர்ப்புற விவகாரத்துறை அமைச்சராக வெங்கய்ய நாயுடு பதவி வகித்து வருகிறார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com