தில்லியில் பரவுகிறது மலேரியா: 200-க்கும் மேற்பட்டோர் பாதிப்பு

தில்லியில் மலேரியா, டெங்கு, சிக்குன்குன்யா ஆகிய நோய்களின் தாக்கம் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.
தில்லியில் பரவுகிறது மலேரியா: 200-க்கும் மேற்பட்டோர் பாதிப்பு

தில்லியில் மலேரியா, டெங்கு, சிக்குன்குன்யா ஆகிய நோய்களின் தாக்கம் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. மலேரியாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 200-ஐ தாண்டியுள்ளது.

தில்லியை பொருத்தவரை, கொசுக்கள் மூலம் பரவக் கூடிய நோய்களின் தாக்கம் வழக்கமாக ஜூலை மாதம் மத்தியில் தொடங்கி நவம்பர் மாதம் இறுதியில் முடிந்துவிடும். ஆனால், நிகழாண்டில் நிலைமை வேறு மாதிரியாக உள்ளது.
கடந்த ஜனவரி மாதம் முதலே டெங்கு, சிக்குன்குன்யா, மலேரியா உள்ளிட்ட நோய்களின் தாக்கம் ஆரம்பமாகிவிட்டதால், கடந்த ஆண்டுகளை விட நிகழாண்டில் இந்நோய்களின் தாக்கம் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், தில்லியின் மூன்று மாநகராட்சிகள் சார்பில் தெற்கு தில்லி மாநகராட்சி திங்கள்கிழமை வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
தில்லியில் கடந்த ஜனவரி மாதம் தொடங்கி கடந்த 15-ஆம் தேதி வரை மலேரியாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 210 ஆகும். இவர்களில், 108 பேர் தில்லியைச் சேர்ந்தவர்கள். மற்றவர்கள் வேறு மாநிலங்களைச் சேர்ந்தவர்கள். கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 26 பேருக்கு மலேரியா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

நிகழாண்டு தொடக்கம் முதல் கடந்த 15-ஆம் தேதி வரை டெங்குவால் 150 பேரும், சிக்குன்குன்யாவால் 183 பேரும் பாதிக்கப்பட்டனர்.

கடந்த ஒரு வாரத்தில், 17 பேருக்கு டெங்குவும், 12 பேருக்கு சிக்குன்குன்யாவும் ஏற்பட்டுள்ளது. டெங்குவால் பாதிக்கப்பட்ட 183 பேரில் 122 பேர் தில்லியைச் சேர்ந்தவர்களாவர்.

டெங்கு, சிக்குன்குன்யா ஆகிய நோய்களைப் பரப்பும் ஏடிஸ் ஏஜிப்டி வகை கொசுக்கள், நந்நீரில் வளரக் கூடியதாகும். மலேரியாவை பரப்பக் கூடிய அனாபிலஸ் வகை கொசுக்கள், நன்னீர் மட்டுமின்றி கலங்கிய நீரிலும் வளரும். எனவே, சுற்றுப் புறத்தில் தண்ணீர் தேங்காமல் பார்த்துக் கொள்வதன் மூலம் கொசுப் பெருக்கத்தை கட்டுப்படுத்தலாம்.

தில்லியில் இதுவரை சுமார் 58 ஆயிரம் வீடுகளில் கொசுப் பெருக்கம் கண்டறியப்பட்டு, உரிய தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. கொசுக்கள் மூலம் பரவும் நோய்களைத் தடுக்க என்னென்ன செய்ய வேண்டும்? என்னென்ன செய்யக் கூடாது? என்பது தொடர்பாக மக்கள் மத்தியில் விழிப்புணர்வு பிரசாரம் மேற்கொள்ளப்பட்டுள்ள வருகிறது. அனைத்துப் பகுதிகளுக்கும் வாகனங்களில் சென்று, ஒலிப்பெருக்கி மூலமும், துண்டு பிரசுரங்கள் மூலமும் விழிப்புணர்வு பிரசாரம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. மேலும்,  எதிர்வரும் நாள்களில் இந்நோய்களின் தாக்கம் அதிகரிக்கக் கூடும் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ஆம் ஆத்மி அரசின் நடவடிக்கைகள்: டெங்கு, சிக்குன்குன்யா, மலேரியா ஆகிய நோய்கள் பரவாமல் தடுக்க தில்லி அரசும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்த விவகாரம் தொடர்பாக, 3 மாநகராட்சி மற்றும் தில்லி அரசின் அனைத்து துறை அதிகாரிகளுடன் முதல்வர் கேஜரிவால் கடந்த மே மாதம் உயர்மட்ட  ஆலோசனை நடத்தினார்.

டெங்கு, சிக்குன்குன்யா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதற்கு வசதியாக, தில்லியிலுள்ள அனைத்து அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகள் தங்களது படுக்கை வசதியை 20 சதவீதம் அதிகரிக்க வேண்டும் என்று உத்தரவிட்ட கேஜரிவால், மத்திய அரசுக்கு சொந்தமான மருத்துவமனைகளில் இந்நோயாளிகளுக்காக 10 சதவீத படுக்கைகளை ஒதுக்க வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டார். தில்லியில் கடந்த ஆண்டு டெங்குவால் 4,431 பேரும், சிக்குன்குன்யாவால் 9,749 பேரும் பாதிக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com