நாடாளுமன்ற இரு அவைகளும் ஒத்திவைப்பு: அமர்நாத் யாத்ரீகர்கள் மீதான தாக்குதலுக்குக் கண்டனம்

ஜம்மு-காஷ்மீர் மாநிலம், அனந்த்நாக்கில் அமர்நாத் யாத்ரீகர்களை குறிவைத்து பயங்கரவாதிகள் கடந்த வாரம் நடத்தியத் தாக்குதலுக்கு நாடாளுமன்றத்தில் திங்கள்கிழமை கடும் கண்டனம்

ஜம்மு-காஷ்மீர் மாநிலம், அனந்த்நாக்கில் அமர்நாத் யாத்ரீகர்களை குறிவைத்து பயங்கரவாதிகள் கடந்த வாரம் நடத்தியத் தாக்குதலுக்கு நாடாளுமன்றத்தில் திங்கள்கிழமை கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது.
இதேபோல், நடப்பு அவையின் மறைந்த எம்.பி.க்கள், மறைந்த முன்னாள் எம்.பி.க்களுக்கு முன்னதாக இரு அவைகளிலும் அஞ்சலி செலுத்தப்பட்டது. அதன்பிறகு, இரு அவைகளும் நாள்முழுவதும் ஒத்திவைக்கப்பட்டன.
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் திங்கள்கிழமை தொடங்கியது. மக்களவை அலுவல் காலையில் தொடங்கியதும், அந்த அவைக்கு புதிதாக எம்.பி.க்களாக தேர்வு செய்யப்பட்ட தேசிய மாநாட்டுக் கட்சித் தலைவர் ஃபரூக் அப்துல்லா, இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் தலைவர் பி.கே. குஞ்ஞாலி குட்டி ஆகியோர் பதவியேற்றுக் கொண்டனர்.
அதன்பின்னர், மறைந்த குருதாஸ்பூர் தொகுதி எம்.பி.யும், நடிகருமான வினோத் கன்னாவுக்கும் (70), மறைந்த மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சர் அனில் மாதவ் தவேவுக்கும் (60) மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.
அதைத் தொடர்ந்து, மக்களவைத் தலைவர் சுமித்ரா மகாஜன் பேசியபோது, அமர்நாத் யாத்ரீகர்களைக் குறிவைத்து பயங்கரவாதிகள் நடத்தியத் தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்தார். அந்த தாக்குதலை கோழைத்தனமான தாக்குதல் என்றும் அவர் விமர்சித்தார். அதன்பின்னர், மக்களவை நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது.
முன்னதாக, நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் தொடங்கியதையொட்டி, பிரதமர் நரேந்திர மோடி, வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ், நாடாளுமன்ற விவகாரத் துறை அமைச்சர் அனந்த் குமார் ஆகியோர், மக்களவையில் இருந்த காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, சமாஜவாதி நிறுவனர் முலாயம் சிங் உள்ளிட்டோருடன் பரஸ்பரம் வாழ்த்துகளைப் பரிமாறிக் கொண்டனர்.
மாநிலங்களவையில்...: மாநிலங்களவையில் மழைக்கால கூட்டத் தொடர் தொடங்குவதை குறிக்கும் வகையில் முதலில் தேசிய கீதம் ஒளிபரப்பப்பட்டது. அதன்பிறகு, நடப்பு அவையின் மறைந்த எம்.பி.க்கள், ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகள் தாக்குதலில் பலியான அமர்நாத் யாத்ரீகர்கள், நாட்டின் பல்வேறு மாநிலங்களில் மழை வெள்ளத்தில் பலியான மக்கள் ஆகியோருக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. அப்போது, அவைத் தலைவர் ஹமீது அன்சாரி கூறுகையில், 'அனில் மாதவ் தவேயின் மறைவின் மூலம், சிறந்த சுற்றுச்சூழல் பாதுகாவலர், புகழ்பெற்ற நாடாளுமன்றவாதி, திறமையான நிர்வாகியை நாம் இழந்து விட்டோம். முட்டாள்தனமான, கோழைத்தனமான மற்றும் காட்டுமிராண்டித்தனமான அந்த தாக்குதலை (அமர்நாத் யாத்ரீகர்கள் மீதான தாக்குதல்) கண்டிக்க கடுமையான வார்த்தைகள் இல்லை' என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com