பாகிஸ்தான் ராணுவம் துப்பாக்கிச் சூடு: இந்திய வீரர் உள்பட 2 பேர் பலி

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் எல்லைக் கோட்டுப் பகுதியில் பாகிஸ்தான் ராணுவத்தினர் அத்துமீறி நடத்திய துப்பாக்கிச் சூட்டில், இந்திய ராணுவ வீரர் ஒருவரும், 9 வயது சிறுமியும் உயிரிழந்தனர். 4 பேர்

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் எல்லைக் கோட்டுப் பகுதியில் பாகிஸ்தான் ராணுவத்தினர் அத்துமீறி நடத்திய துப்பாக்கிச் சூட்டில், இந்திய ராணுவ வீரர் ஒருவரும், 9 வயது சிறுமியும் உயிரிழந்தனர். 4 பேர் காயமடைந்தனர்.
இதுதொடர்பாக, ராணுவ செய்தித் தொடர்பாளர் ஒருவர் திங்கள்கிழமை கூறியதாவது:
காஷ்மீர் மாநிலத்தின் பூஞ்ச், ரஜெளரி, பாராமுல்லா ஆகிய மாவட்டங்களில் உள்ள இந்திய ராணுவ முகாம்கள் மீது பாகிஸ்தான் ராணுவத்தினர் திங்கள்கிழமை காலை அத்துமீறி துப்பாக்கிச் சூடு நடத்தினர். சிறிய ரக பீரங்கி குண்டுகளைக் கொண்டும் அவர்கள் தாக்குதல் நடத்தினர். பதிலுக்கு, இந்திய வீரர்கள் கடுமையாக அவர்களுடன் போரிட்டனர்.
நீண்ட நேரம் நீடித்த இந்தச் சண்டையில், பாகிஸ்தான் ராணுவத்தினர் செலுத்திய சிறிய ரக பீரங்கி குண்டு, இந்திய ராணுவத்தினரின் முகாம் மீது விழுந்தது. அதில், முகாமில் இருந்த முதாசர் அகமது (37) என்ற வீரர் படுகாயம் அடைந்தார்.
பின்னர், மருத்துவப் பரிசோதனை அறைக்கு கொண்டு செல்லப்பட்ட அவர், சிறிது நேரத்தில் உயிரிழந்தார் என்றார் அவர்.
பூஞ்ச், ரஜெளரி ஆகிய மாவட்டங்களில், பாலகோட், மஞ்சகோட், பரோட்டி ஆகிய பொதுமக்கள் வசிக்கும் பகுதிகளிலும் சிறிய ரக பீரங்கி குண்டுகளை வீசி பாகிஸ்தான் ராணுவத்தினர் தாக்குதல் நடத்தினர். இந்தத் தாக்குதலில் பரோட்டி நகரில் சாஜதா ஹெளசர்(9) என்ற சிறுமி உயிரிழந்தார்.
மஞ்சகோட் பகுதியில் பாகிஸ்தான் ராணுவத்தினர் நிகழ்த்திய தாக்குதலில், உள்ளூர்வாசி 2 பேர் காயமடைந்தனர். அதையடுத்து, அந்தப் பகுதிகளில் பள்ளிகள் மூடப்பட்டன. பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என்று மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியது.
அதைத் தொடர்ந்து, பாராமுல்லா மாவட்டத்தின் கமால்கோட் பகுதியில் உள்ள 3 கிராமங்கள் மீது பாகிஸ்தான் ராணுவத்தினர் திங்கள்கிழமை மாலை அத்துமீறி துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதில், ராணுவ வீரர் ஒருவர் காயமடைந்தார்.
ஜம்மு-காஷ்மீரில், பாகிஸ்தான் ராணுவத்தின் தாக்குதலில், இந்த மாதத்தில் இதுவரை, ராணுவ வீரர்கள் 4 பேரும், பொதுமக்கள் 3 பேரும் கொல்லப்பட்டுள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com