பெங்களூரு சிறை விவகாரம்: ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்

பெங்களூரு பரப்பன அக்ரஹாராத்தில் உள்ள மத்திய சிறையில் முறைகேடுகள் நடைபெற்றதாகக் கூறப்படும் விவகாரம் தொடர்பாக, சிறைத் துறை டிஜிபி எச்.என்.சத்தியநாராயண ராவ் கட்டாய
பெங்களூரு சிறை விவகாரம்: ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்

பெங்களூரு பரப்பன அக்ரஹாராத்தில் உள்ள மத்திய சிறையில் முறைகேடுகள் நடைபெற்றதாகக் கூறப்படும் விவகாரம் தொடர்பாக, சிறைத் துறை டிஜிபி எச்.என்.சத்தியநாராயண ராவ் கட்டாய விடுமுறையில் அனுப்பப்பட்டுள்ளார். இதோடு, புகார் தெரிவித்த டிஐஜி டி.ரூபா பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். இதற்கானஉத்தரவை கர்நாடக அரசு பிறப்பித்துள்ளது.
சொத்துக் குவிப்பு வழக்கில் சிறைத் தண்டனை பெற்று, பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்டுள்ள அதிமுக பொதுச் செயலர் சசிகலாவுக்கு சிறப்புச் சலுகைகள் வழங்க டிஜிபி எச்.என்.சத்தியநாராயணா ரூ.2 கோடி லஞ்சம் பெற்றதாகவும், முத்திரைத்தாள் மோசடியில் தண்டனை பெற்று சிறையில் அடைக்கப்பட்டுள்ள கரீம்லால் தெல்கிக்கு சிறப்பு வசதிகள் செய்து தரப்பட்டுள்ளதாகவும் சிறைத்துறை டிஐஜி டி.ரூபா அண்மையில் புகார் தெரிவித்திருந்தார்.
இதனிடையே, முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி வினய்குமார் தலைமையில் உயர்நிலைக் குழு விசாரணை நடத்தி வருகிறது.
இந்த நிலையில், சசிகலாவுக்கு பார்வையாளர்களைச் சந்திக்க தனி அறை வழங்கப்பட்டுள்ளதாகவும் மற்றொரு புகாரை ரூபா தெரிவித்திருந்தார்.
இந்த விவகாரம் தொடர்பாக, கர்நாடக முதல்வர் சித்தராமையா மீது எதிர்க்கட்சிகள் கடுமையான விமர்சனங்களைத் தொடுத்தன.
இந்த நிலையில், சிறைத் துறை டிஜிபி எச்.என்.சத்தியநாராயண ராவை கட்டாய விடுப்பில் செல்லுமாறு கர்நாடக அரசு திங்கள்கிழமை உத்தரவிட்டது.
இவருக்குப் பதிலாக பெங்களூரு ஊழல் தடுப்புப் படையின் ஏடிஜிபி என்.எஸ்.மேகரிக், சிறைத் துறை ஏடிஜிபியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
மேலும், டிஐஜி டி.ரூபா உடனடியாக பணியிட மாற்றம் செய்யப்பட்டு, பெங்களூரு போக்குவரத்து -சாலை பாதுகாப்பு ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார்.
புகைப்படங்கள் வெளியானதால் சர்ச்சை? இதனிடையே, சசிகலாவுக்கு பெண்கள் பிரிவின் முதல் மாடியில் சமையல் அறை, படுக்கை அறை, பார்வையாளர் சந்திப்பு அறை, உடைமைகளை வைக்கும் அறை, புழங்குவதற்கு ஓர் அறை, நடமாடுவதற்கு வசதியாக தாழ்வாரம் வழங்கப்பட்டுள்ளதாக ஊடகங்களில் புகைப்படங்கள் வெளியாகியுள்ளது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடக முதல்வரின் செயலகம் விளக்கம்
சிறைத் துறை மூத்த அதிகாரிகளின் பணியிட மாற்றம் குறித்து கர்நாடக முதல்வரின் செயலகம் விளக்கம் அளித்துள்ளது.
இதுகுறித்து அந்தச் செயலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-
உண்மை, நீதியை நிலைநாட்டும் ஆர்வத்தோடு கர்நாடக அரசு செயல்பட்டு வருகிறது. மக்களின் நலன் கருதி ஏதாவது முறைகேடு நடந்திருப்பதாகக் கண்டறிந்தால், உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. உண்மையைக் கண்டறிய விசாரணையையும் நடத்தி வந்துள்ளது.
பெங்களூரு பரப்பன அக்ரஹாராவில் உள்ள மத்திய சிறையில் சட்ட விதிமீறல்கள், முறைகேடுகள் நடந்து வருவதாக சிறைத் துறை டிஐஜி டி.ரூபாவிடம் இருந்து அறிக்கை வந்தவுடன், முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி வினய்குமார் தலைமையில் விசாரணை ஆணையம் உடனடியாக அமைக்கப்பட்டது. இதோடு, குற்றச்சாட்டுகள் குறித்து ஒரு வாரத்தில் இடைக்கால அறிக்கையையும், ஒரு மாதத்தில் இறுதி அறிக்கையையும் அளிக்குமாறு கர்நாடக அரசு உத்தரவிட்டுள்ளது.
விசாரணை ஆணையம் அமைத்தவுடனும் அதிகாரிகள் நடத்தை சேவை விதிகள், நெறிமுறைகளுக்கு உள்பட்டதாக இருக்கவில்லை. டிஐஜி டி.ரூபா, டிஜிபி எச்.என்.சத்தியநாராயண ராவ் ஆகிய இருவரும் ஊடகங்களில் விவாதிக்கத் தொடங்கி விட்டனர். இந்த நடவடிக்கை அகில இந்திய சேவை நடத்தை விதிகளை மீறியதாக இருக்கிறது. இதைத் தொடர்ந்து, இரு அதிகாரிகளுக்கு விளக்கம் கேட்டு கர்நாடக அரசு ஜூலை 14-இல் நோட்டீஸ் அனுப்பியது.
சிறைக்கு இரு அதிகாரிகளும் சென்று ஆய்வு நடத்தியதால், சிறை வளாகத்தில் பதற்றம் ஏற்பட்டது.
விசாரணை நடவடிக்கையின் புனிதத்தைக் காப்பாற்றி, அதிகாரிகளின் தலையீடுகளைத் தடுக்கும் நோக்கில் டிஜிபி எச்.என்.சத்தியநாராயண ராவை கட்டாய விடுப்பில் செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், டிஐஜி டி.ரூபாவை பணியிட மாற்றம் செய்து பெங்களூரு போக்குவரத்து, சாலை பாதுகாப்பு ஆணையராக நியமித்து அரசு உத்தரவிட்டுள்ளது.
எந்தவித தங்கு தடையும் இல்லாமல் விசாரணையை தொடர்வதில் அரசு உறுதியாக உள்ளது. இதன் மூலம் ஆதாரத்துடனான உண்மை அறிக்கையின் வாயிலாக வெளியே வரும்போது, தவறிழைத்தவர்களை சட்டத்தின் நடவடிக்கைக்கு உள்படுத்த தீவிரம் காட்டப்படும் என்று கூறப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com