விசா கட்டுப்பாடு பற்றி அமெரிக்காவிடம் தொடர்ந்து பேசிவருகிறோம்: மத்திய அரசு

அமெரிக்க விசா நடைமுறைகளில் நிலவும் கட்டுப்பாடுகளால் இந்தியர்களுக்கு ஏற்படும் பாதிப்புகள் குறித்து அந்நாட்டிடம் ஒவ்வொரு தருணத்திலும் எடுத்துரைக்கப்பட்டதாக மத்திய அரசு

அமெரிக்க விசா நடைமுறைகளில் நிலவும் கட்டுப்பாடுகளால் இந்தியர்களுக்கு ஏற்படும் பாதிப்புகள் குறித்து அந்நாட்டிடம் ஒவ்வொரு தருணத்திலும் எடுத்துரைக்கப்பட்டதாக மத்திய அரசு நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளது.
அமெரிக்காவின் தகவல் - தொழில்நுட்பத் துறையில் இந்தியர்களின் பங்கு அதிமுக்கியமானது. ஏறத்தாழ 30 லட்சம் இந்தியர்கள் அமெரிக்காவில் பணியாற்றி வருகின்றனர். இந்தச் சூழலில், வெளிநாடுகளில் இருந்து அமெரிக்காவுக்கு வந்து பணியாற்றுபவர்களுக்காக வழங்கப்படும் ஹெச்1பி விசா நடைமுறையில் பல்வேறு கட்டுப்பாடுகளை விதிக்க அந்நாட்டு அரசு திட்டமிட்டது.
இதற்கு இந்தியா கடும் அதிருப்தி தெரிவித்தது. அத்தகைய கட்டுப்பாடுகள் அமலுக்கு வந்தால் அமெரிக்க தகவல் - தொழில்நுட்பத் துறையைச் சார்ந்திருக்கும் லட்சக்கணக்கான இந்தியர்களின் பணிச் சூழல் கேள்விக்குறியாகிவிடும் என்றும் கூறப்பட்டது. இந்நிலையில், இதுதொடர்பாக மக்களவையில் திங்கள்கிழமை எழுப்பப்பட்ட கேள்விக்கு மத்திய தொழில் - வர்த்தகத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் எழுத்துப்பூர்வமாக அளித்த பதில்:
ஹெச்1பி விவகாரம் உள்பட அமெரிக்க விசா பெறுவதில் நீடிக்கும் அனைத்து பிரச்னைகள் குறித்து அந்நாட்டிடம் ஒவ்வொரு தருணத்தில் மத்திய அரசு எடுத்துரைத்துள்ளது. மேலும், விசா விண்ணப்பக் கட்டணங்களை அமெரிக்கா உயர்த்தியது தொடர்பாகவும் உலக வர்த்தக மையத்தில் (டபிள்யூடிஓ) அதிருப்தி வெளிப்படுத்தினோம். இந்த விவகாரத்தில் நமது தரப்பில் உள்ள கருத்துகளை தொடர்ந்து அமெரிக்காவிடம் தெரிவித்து வருகிறோம். ஆனால், விசா நடைமுறைகளில் அந்நாடு இதுவரை எந்த மாற்றத்தையும் செய்யவில்லை என்று அதில் நிர்மலா சீதாராமன் குறிப்பிட்டுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com