குடிபோதையில் வாகனம் ஓட்டி விபத்து ஏற்படுவதை இப்படியும் தடுக்கலாம்!

இந்தியாவில் குடிபோதையில் வாகனம் ஓட்டி அதனால் ஏற்படும் விபத்துகளில் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை நாளொன்றுக்கு 19 ஆக இருப்பதை நிச்சயம் போக்குவரத்துக் காவலர்களால் குறைக்க முடியும் என்கிறது ஆய்வு ஒன்று.
குடிபோதையில் வாகனம் ஓட்டி விபத்து ஏற்படுவதை இப்படியும் தடுக்கலாம்!

இந்தியாவில் குடிபோதையில் வாகனம் ஓட்டி அதனால் ஏற்படும் விபத்துகளில் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை நாளொன்றுக்கு 19 ஆக இருப்பதை நிச்சயம் போக்குவரத்துக் காவலர்களால் குறைக்க முடியும் என்கிறது ஆய்வு ஒன்று.

அமெரிக்க ஆராய்ச்சியும், ராஜஸ்தான் காவல்துறையும் இந்த விஷயத்தை உறுதி செய்துள்ளது.

குடிபோதையில் வாகனம் இயக்குவதைக் கட்டுப்படுத்தவே  2017ம் ஆண்டு ஏப்ரல் மாதம், நெடுஞ்சாலைகளில் இருக்கும் மதுபானக் கடைகளை அகற்ற வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியது.

அதன்பிறகு, மதுபானக் கடைகள் எத்தனை மூடப்பட்டன, இதனால் எவ்வளவு வருவாய் இழப்பு என்று மாய்ந்து மாய்ந்து பேசினோமே தவிர, சாலை விபத்துகள் குறைந்தவான, இதுபோன்று குடிபோதையில் வாகனம் ஓட்டுவது தொடர்பான வழக்குகள் குறைந்தனவா என்ற செய்திகள் காதில்விழவே இல்லை.

சரி விஷயத்துக்கு வரலாம்... 2010 மற்றும் 2011ம் ஆண்டுகளில் நடத்தப்பட்ட ஆய்வில், குடிபோதையில் வாகனம் ஓட்டுவதைக் கட்டுப்படுத்தும் முதல் வழி என்னவென்றால், வாகனங்கள் சோதனை செய்யும் இடங்களை போக்குவரத்துக் காவலர்கள் அடிக்கடி மாற்றுவதும், வழக்கமாக ஒரே இடத்தில் வாகனச் சோதனை நடத்துவதைத் தவிர்ப்பதுமே.

ஜே-பால் ஆராய்ச்சி அமைப்பு ராஜஸ்தான் காவல்துறையுடன் இணைந்து மேற்கொண்ட ஆய்வு மற்றும் சோதனைகள் இதனை உறுதி செய்துள்ளது.

இதனை 2 மாதங்களுக்கு சோதனை முறையில் பரீட்சித்த பகுதியில் இரவு நேரங்களில் ஏற்படும் விபத்துகள் 17% குறைந்து, விபத்தினால் இறப்பு ஏற்படுவது 25% அளவுக்குக் குறைந்துள்ளது.

இந்தியாவில் சராசரியாக 2015ம் ஆண்டில் ஒவ்வொரு 10 நிமிடத்துக்கும் 9 சாலை விபத்துகள் நிகழ்வதாகவும், இதில் 3 பேர் இறப்பதாகவும் புள்ளிவிவரம் தெரிவிக்கிறது. இது கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பை விட 9 சதவீதம் அதிகம். 

ஜே-பால் ஆராய்ச்சியில் தெரிய வந்த ஒரு முக்கிய அம்சம் என்னவென்றால், பொதுவாக நிகழும் சாலை விபத்துகளில் ஓட்டுநர்களின் அஜராக்கிரதையை விட, குடிபோதையில் வாகனம் ஓட்டுவதால் நிகழும் விபத்துகளே அதிகம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சாலை விபத்துகளில் உயிரிழப்பு நேரிடுவதில், குடிபோதையில் வாகனம் இயக்கியவரால் நிகழ்ந்த விபத்துகளில் 42% உயிரிழப்புகள் நேரிடுகின்றன. அதிவேக வாகனங்களால் நிகழ்ந்த உயிரிழப்பு 30%ஆகவும், அஜாக்கிரதையால் நிகழ்ந்த உயிரிழப்பு 33%ஆகவும், காலநிலைகளால் நிகழும் விபத்துகளால் ஏற்படும் உயிரிழப்பு 36%ஆகவும் உள்ளது. (இவை துல்லியமான அளவு அல்ல.)

அதிலும், விபத்து குறித்து தகவல் அறிந்து காவல்துறை வர தாமதமாகிவிட்டாலோ, ஓட்டுநர் நிற்காமல் சென்றுவிட்டாலோ, அது குடிபோதையில் நடந்த விபத்தா என்பதைக் கூட அறிய முடியாமல் போகிறது. 

இதனைத் தடுக்க, காவல்துறையினர், வாரத்தில் இரண்டு அல்லது 3 நாட்கள் சாலைகளில் வாகனச் சோதனையில் ஈடுபட வேண்டும். அதுவும் இரவு 7 மணி முதல் 10 மணி வரை. 

அதுவும் வழக்கமாக சோதனை செய்யும் இடங்களில் அல்லாமல், அடிக்கடி இடங்களை மாற்ற வேண்டும். இதற்குக் காரணம், வழக்கமாக சோதனை செய்யும் இடங்களை பலரும் அறிந்துகொண்டு, அந்த வழித்தடங்களில் பயணிக்காமல் தவிர்த்துவிடுவார்கள். எனவே, நேரம் மற்றும் சோதனை இடத்தை காவல்துறையினர் அடிக்கடி மாற்றிக் கொள்ள வேண்டும்.

ராஜஸ்தானில் இதுபோன்று சுமார் 2 ஆண்டுகள் செயல்படுத்தியதில், மாவட்ட நிர்வாக புள்ளி விவரம், நீதிமன்ற வழக்குகள், காவல்துறை அளித்த தகவல்கள், சாலை விபத்து மற்றும் உயிரிழப்பு குறித்த தகவல்களை ஆராயப்பட்டது.

இந்த சோதனை நடைபெற்ற இடங்களில் இரவு நேர விபத்துகள் மற்றும் உயிரிழப்புகள் பெருமளவில் குறைந்தன. அதே சமயம், ஆங்காங்கே காவல்துறை சோதனை நடப்பது மக்களிடையே வேகமாகப் பரவியதால், குடித்துவிட்டு வாகனம் ஓட்டினாலும், எச்சரிக்கையாக அதிவேகமாக இயக்குவதை குறைத்துக் கொண்டதும் காரணமாக இருந்தது.

இதனால், காவல்துறையின் பணிக்கும் சிறந்த வரவேற்புக் கிடைத்தது. இந்த அரும்பணிக்கு காவல்துறைக்கு பாராட்டும் கிடைத்தது.

எனவே, இதனை நாடு முழுவதும் பரவலாக்கினால் நிச்சயம் குடிபோதையில் வாகனம் ஓட்டி விபத்து நேரிடுவதை தவிர்த்து, உயிரிழப்புகளைக் குறைக்க முடியும் என்கிறது ஆய்வறிக்கை.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com