அதிவேக புல்லட் ரயில் திட்டத்தில் உங்கள் நகரம் இருக்கிறதா? இப்போதே பாருங்கள்!

மோடியின் தலைமையிலான மத்திய அரசின் கனவு திட்டமான புல்லட் ரயில் திட்டம் விரைவில் நனவாகப் போகிறது.
அதிவேக புல்லட் ரயில் திட்டத்தில் உங்கள் நகரம் இருக்கிறதா? இப்போதே பாருங்கள்!

சென்னை: மோடியின் தலைமையிலான மத்திய அரசின் கனவு திட்டமான புல்லட் ரயில் திட்டம் விரைவில் நனவாகப் போகிறது.

நமது நாட்டில் முதன்முறையாக மும்பை - ஆமாதாபாத் இடையே இயக்கப்பட உள்ள புல்லட் ரயிலில் பல்வேறு நவீன வசதிகள் இடம்பெற உள்ளதாக ரயில்வே நிர்வாகம் ஏற்கனவே அறிவித்து, பொதுமக்களுக்கு அதுபற்றிய ஆர்வத்தை உண்டாக்கிவிட்டது.

இது ஆரம்பம்தான். நாடு முழுவதும் பல முக்கிய நகரங்களை புல்லட் ரயில் மூலம் இணைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.

பல்வேறு புல்லட் ரயில் திட்டங்கள் அமைப்பது குறித்த சாத்தியக் கூறுகள் பற்றி ஆய்வறிக்கை தயாரித்து வரும் அதிவேக ரயில் திட்டக் கழகம் (எச்எஸ்ஆர்சி), தற்போது தில்லி - அமிருதசரஸ் இடையேயான ஆய்வறிக்கையை சமர்ப்பித்துள்ளது. தில்லி - கொல்கத்தா இடையேயான ஆய்வறிக்கை தற்போது தயாரிக்கப்பட்டு வருகிறது.

பல்வேறு நாடுகளைச் சேர்ந்த நிறுவனங்களுடன் இது குறித்து ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது. நாட்டின் அனைத்துப் பகுதிகளிலும் புல்லட் ரயில் திட்டத்தை செயல்படுத்துவது குறித்த சாத்தியக் கூறுகள் பற்றிய ஆய்வறிக்கை இந்த ஆண்டு இறுதிக்குள் சமர்ப்பிக்கப்பட உள்ளது. 

இதனை செயல்படுத்த மத்திய அரசு ஏற்கனவே தேசிய அதிகவேக ரயில் கழகத்தை உருவாக்கியுள்ளது. இந்த நிறுவனம்தான் மும்பை -ஆமதாபாத் இடையேயான புல்லட் ரயில் திட்டத்தை மேற்கொள்ள உள்ளது.

இந்தியாவின் பல்வேறு முக்கிய நகரங்களை இணைக்கும் வகையில் இந்த புல்லட் ரயில் திட்டத்தை செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. அதன்படி, 

மும்பை ஆமதாபாத் ரயில் திட்டம்
சுமார் ரூ.5ஆயிரம் கோடி மதிப்பிலான ஷிங்காசென் வகை புல்லட் ரயில்களை ஜப்பானிடம் இருந்து வாங்குவதற்காக ஒப்பந்தம் செய்துகொள்ளப்பட்டது. இந்தியாவில் முதல் முறையாக மும்பை-ஆமதாபாத் இடையே புல்லட் ரயில் இயக்கப்பட உள்ளது. இந்த ரயிலில் மொத்தம் 10 பெட்டிகளைக் கொண்ட இந்த ரயிலில் மொத்தம் 731 இருக்கைகள் இருக்கும். மேலும், பல்வேறு நவீன வசதிகளும் இந்த ரயிலில் இருக்கும். ஆண்கள், பெண்களுக்கு தனி கழிவறைகளும், மாற்றுத்திறனாளிகளுக்கு அதிக இடவசதியுடன் கூடிய கழிவறைகளும் இந்த ரயிலில் இருக்கும். ஓய்வறைகளும், குழந்தைகளுக்கு பாலூட்டுவதற்காக பெண்களுக்கு தனி அறைகளும் இந்த ரயிலில் இருக்கும்.

மும்பை-ஆமதாபாத் இடையே உள்ள 508 கி.மீ. தொலைவை 2 மணி நேரம் 7 நிமிடங்களில் இந்த ரயில் கடக்கும். சாதாரண வகுப்பில் 698 இருக்கைகளும், பிஸினஸ் வகுப்பில் 55 இருக்கைகளும் இந்த ரயிலில் இருக்கும் என்று ரயில்வே தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தில்லி - கொல்கத்தா
தில்லி - கொல்கத்தா இடையேயான 1,474 கி.மீ. தூரத்தை புல்லட் ரயில் 5.54 மணி நேரத்தில் கடக்கும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளது. இதில் கிரேட்டர் நொய்டா, அலிகார், லக்னௌ, சுல்தான்புர், ஜௌன்புர், வாராணசி, பாட்னா, தான்பாத் உட்பட 11 ரயில் நிலையங்கள் அமைக்கப்படும். இது குறித்த முதற்கட்ட ஆய்வறிக்கை மத்திய அமைச்சகத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இறுதி அறிக்கை வரும் அக்டோபரில் தாக்கல் செய்யப்படும். இதற்கு ஒப்புதல் பெறப்பட்டால் இந்த திட்டம் 2021ம் ஆண்டு தொடங்கும்.

தில்லி  - மும்பை
முதற் கட்டமாக துவக்கப்படும் மும்பை - ஆமதாபாத் புல்லட் ரயில் சேவையின் விரிவாக்கமாக இந்த திட்டம் பார்க்கப்படுகிறது. தில்லி - மும்பை இடையே குர்கான், ஜெய்ப்பூர், உதைப்பூர், பரோடா மற்றும் சூரத் ஆகிய ரயில் நிலையங்கள் அமைக்கப்படும்.

மும்பை - சென்னை
மும்பை - சென்னை இடையே அமைக்கப்படும் புல்லட் ரயில் திட்டத்தில் மிக முக்கிய நகரங்கள் இணைக்கப்படும் வாய்ப்பு உள்ளது. இதில் கோவா, புனே, பெங்களூர், திருப்பதி ஆகிய ரயில் நிலையங்கள் அமைய உள்ளது.

மும்பை - நாக்பூர்
இந்த திட்டம் குறித்த இறுதி அறிக்கை அக்டோபரில் தாக்கலாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இங்கு நாசிக், அவுரங்கபாத், அகோலா, அமராவதி ஆகிய 4 ரயில் நிலையங்கள் அமைக்கப்படும்.

தில்லி - அமிருதசரஸ்
சண்டிகர், பானிபட், அம்பாலா என 3 ரயில் நிலையங்களைக் கொண்டு இந்த புல்லட் ரயில் வழித்தடம் அமைக்கப்பட உள்ளது. சுமார் 458 கி.மீ. தூரத்தை 2.30 மணி நேரத்தில் கடக்கும் வகையில் இந்த திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது. சாதாரண விரைவு ரயில் பயண நேரத்தை விட இது  4 மணி நேரம் குறைவு என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த திட்டங்கள் செயல்பாட்டுக்கு வந்தால், சென்னையில் இருந்து திருப்பதிக்கும் கோவாவுக்கும் நாம் புல்லட் ரயிலிலேயே பயணிக்கலாம் என்பது வரப்பிரசாதம் தானே?

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com