ஜனநாயக அமைப்புகளை மேலும் வலுப்படுத்துவேன்

குடியரசு துணைத் தலைவராக தாம் தேர்வு செய்யப்பட்டால், நாட்டில் ஜனநாயக அமைப்புகளை மேலும் வலுப்படுத்தப் போவதாக மத்தியில் ஆளும் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் வேட்பாளரான வெங்கய்ய நாயுடு
ஜனநாயக அமைப்புகளை மேலும் வலுப்படுத்துவேன்

குடியரசு துணைத் தலைவராக தாம் தேர்வு செய்யப்பட்டால், நாட்டில் ஜனநாயக அமைப்புகளை மேலும் வலுப்படுத்தப் போவதாக மத்தியில் ஆளும் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் வேட்பாளரான வெங்கய்ய நாயுடு அறிவித்துள்ளார்.
தில்லி நாடாளுமன்ற வளாகத்தில் குடியரசு துணைத் தலைவர் பதவிக்கானத் தேர்தலில் போட்டியிடுவதற்கான வேட்பு மனுவை தாக்கல் செய்தபிறகு, அவர் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் போட்டியிட தனக்கு விருப்பமில்லை என்று வெளியான தகவலை வெங்கய்ய நாயுடு மறுத்தார். இதுதொடர்பாக அவர் கூறியதாவது:
குடியரசு துணைத் தலைவர் பதவியை சர்வபள்ளி ராதாகிருஷ்ணன், ஜாகிர் ஹுசேன், எம். ஹிதாயத்துல்லா, ஆர். வெங்கடராமன், சங்கர் தயாள் சர்மா, பைரோன் சிங் ஷெகாவத் போன்ற மிகப்பெரும் தலைவர்கள் வகித்துள்ளனர்.
குடியரசு துணைத் தலைவர் அலுவலகத்துக்கு இருக்கும் பொறுப்புகள் குறித்து எனக்கு நன்றாகத் தெரியும். அந்தப் பதவிக்கு நான் தேர்ந்து எடுக்கப்பட்டால், அந்தப் பதவிக்கான பாரம்பரியங்களையும், அந்தப் பதவியை முன்பு வகித்த தலைவர்கள் வகுத்த நெறிகளையும் நான் காப்பேன். குடியரசு துணைத் தலைவர் அலுவலகம் மீதிருக்கும் மரியாதையை நிலைநிறுத்துவேன். நாடாளுமன்ற ஜனநாயக முறைதான், இந்தியாவின் அழகு மற்றும் வலிமையாகும். இதை மேலும் வலுப்படுத்துவதே எனது குறிக்கோள் ஆகும்.
நான் சாதாரண குடும்பப் பிண்ணனியைச் சேர்ந்தவன். கட்சியை விட்டு விலகியதை நினைக்கும்போது வேதனையாக உள்ளது. ஏனெனில், பாஜகவை எனது தாயைப் போல் கருதினேன். மிகவும் இளைய வயதிலேயே எனது தாயாரை நான் இழந்துவிட்டேன். கட்சித் தொண்டர்களுடன்தான் வளர்ந்தேன். கட்சியின் ஆதரவுடன்தான், இந்நிலைக்கு நான் உயர்ந்துள்ளேன். ஆனால், இனிமேல் நான் பாஜகவுக்கு சொந்தமானவன் அல்ல. நான் இனி கட்சிக்கு அப்பாற்பட்டவன் (பாஜகவில் இருந்து விலகிவிட்டதையும், கட்சி சார்பற்று பணியாற்ற போவதையும் அவர் இவ்வாறு குறிப்பிட்டார்).
சமூக சேவையில் ஈடுபட திட்டமிட்டிருந்தேன்: 2019-ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் வெற்றி பெற்று பிரதமராக நரேந்திர மோடி தொடர்ந்து 2-ஆவது முறையாகப் பதவியேற்றதும், அரசியலை விட்டு விலகி, சமூக சேவையில் ஈடுபட திட்டமிட்டிருந்தேன். ஆனால், விதி வேறு மாதிரி தீர்மானித்துள்ளது.
நமது நாட்டுக்கு நல்ல தலைமை (பிரதமர் மோடி) கிடைத்துள்ளது. அந்தத் தலைமையை பயன்படுத்தி, நமது நாட்டை வலுப்படுத்த வேண்டும். நாட்டை முன்னோக்கி கொண்டு செல்ல வேண்டும். அதுவே எனது விருப்பம். மத்திய அமைச்சர் பதவியில் தொடரவே நான் விருப்பம் தெரிவித்ததாகச் சிலர் கூறுவதில் உண்மையில்லை.
அதேநேரத்தில், நாடாளுமன்ற உறுப்பினராக நான் தொடர்வேன். அடுத்த மாதம் நடைபெறவிருக்கும் குடியரசு துணைத் தலைவர் பதவிக்கான தேர்தலில் எனது வாக்கையும் பதிவு செய்வேன் என்றார் வெங்கய்யநாயுடு.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com