தமிழகத்துக்கு 102 டிஎம்சி தண்ணீரே போதுமானது: காவிரி வழக்கில் கர்நாடகம் வாதம்

தமிழகத்துக்கு 102 டிஎம்சி தண்ணீரே போதுமானது என்று காவிரி வழக்கின் இறுதி விசாரணையின் போது கர்நாடகம் வாதிட்டது.

தமிழகத்துக்கு 102 டிஎம்சி தண்ணீரே போதுமானது என்று காவிரி வழக்கின் இறுதி விசாரணையின் போது கர்நாடகம் வாதிட்டது.
காவிரி நதி நீர்ப் பங்கீடு தொடர்பாக 2007-இல் காவிரி நடுவர் மன்றம் அளித்த இறுதித் தீர்ப்பு குறித்து தமிழகம், கர்நாடகம், கேரளம் ஆகிய மாநிலங்கள் மனுக்களைத் தாக்கல் செய்துள்ளன. இந்த மனுக்கள் மீதான இறுதி விசாரணை உச்ச நீதிமன்றத்தில் கடந்த வாரம் தொடங்கியது. இதன் தொடர்ச்சியாக, நான்காவது நாளாக செவ்வாய்க்கிழமையும் நீதிபதிகள் தீபக் மிஸ்ரா, அமிதவா ராய், ஏ.எம். கான்வில்கர் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் இறுதி விசாரணை நடைபெற்றது.
அப்போது கர்நாடக அரசின் சார்பில் மூத்த வழக்குரைஞர் மோகன் கத்தார்கி ஆஜராகி முன்வைத்த வாதம்:
காவிரி நடுவர் மன்றம் தமிழகத்தின் கூடுதலான பாசனப் பகுதிகளுக்கு அதிகப்படியான நீரை வழங்கி உத்தரவிட்டது. காவிரியில் தமிழகத்துக்கு திறக்கப்படும் மேற்பரப்பு நீரை மட்டும் கணக்கில் கொள்ளாமல், தமிழகத்தின் காவிரி டெல்டா மாவட்டங்களில் உள்ள 30 டிஎம்சி நிலத்தடி நீரையும், காவிரிப் படுகையில் உள்ள மேம்பட்ட பகுதிகளையும் நடுவர் மன்றம் கணக்கில் கொண்டிருக்க வேண்டும். ஆனால், 192 டிஎம்சி நீரைத் திறந்துவிட நடுவர் மன்றம் உத்தரவிட்டது. இதில் 10 டிஎம்சி நீர் சுற்றுச்சூழல் இழப்பால் வீணாகிறது. இந்த நீரை கர்நாடகம் ஏன் வழங்க வேண்டும்?. மேலும், தமிழகத்தில் 11 லட்சம் ஏக்கர் மட்டுமே வறட்சி பாதிக்கப்பட்ட பகுதியாக உள்ளது. ஆனால், கர்நாடகத்தில் 29 லட்சம் ஏக்கர் வறட்சி பாதித்த பகுதியாகவுள்ளது என்று அவர் வாதிட்டார்.
இதைத் தொடர்ந்து, கர்நாடக அரசு சார்பில் ஆஜரான மற்றொரு மூத்த வழக்குரைஞர் ஃபாலி எஸ். நாரிமன் வாதிடுகையில், 'தமிழகம், கர்நாடகம், கேரளம் ஆகிய மாநிலங்களுக்குத் தேவையான நீர் தொடர்பாக மட்டுமே காவிரி நடுவர் மன்றம் உத்தரவிட முடியும். ஆனால், மாதந்தோறும் திறந்துவிடப்படும் நீர் தொடர்பாக தீர்மானிக்க முடியாது. இதை காவிரி மேலாண்மை வாரியம்தான் முடிவு செய்ய முடியும்' என்றார்.
இதற்கு தமிழகத்தின் சார்பில் ஆஜரான வழக்குரைஞர்கள் சேகர் நாப்டே, ராகேஷ் துவிவேதி, உமாபதி ஆகியோர் ஆட்சேபம் தெரிவித்தனர். அவர்கள் வாதிடுகையில், 'காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்ட போது, அதற்கு கர்நாடகம் எதிர்ப்புத் தெரிவித்து முட்டுக்கட்டை போட்டது. ஆனால், இப்போது காவிரியில் தண்ணீர் திறக்க காவிரி மேலாண்மை வாரியம் மட்டுமே உத்தரவிட முடியும் எனக் கூறுகிறது. இதன் மூலம், தமிழகத்துக்கு காவிரியிலிருந்து 90 டிஎம்சி தண்ணீரை வழங்கக் கூடாது என்பதுதான் கர்நாடகத்தின் நிலைப்பாடு என்று தெளிவாகிறது. 90 டிஎம்சி தண்ணீரை நிறுத்தினால் தமிழகத்தில் 6 லட்சம் ஏக்கர் அளவுக்கு விவசாயம் பாதிக்கப்படும். எனவே, கர்நாடகத்தின் வாதத்தை ஏற்க முடியாது' என்றனர்.
நீதிபதிகள் கருத்து: கர்நாடகத்தின் வாதங்களைப் பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், 'காவிரி விவகாரம் போன்ற வழக்கு விசாரணை இந்த நீதிமன்றத்தில் முன்னெப்போதும் நடைபெற்றதில்லை. இந்த வழக்கு விசாரணையில் வெறும் வரைபடங்களைக் கொண்டு மட்டும் விளக்க முற்படாமல், வரைபடங்களை விளக்கும் வகையில் வாதங்களை இரு மாநில அரசுகளும் முன் வைக்க வேண்டும்' என தெரிவித்து விசாரணையை புதன்கிழமைக்கு (ஜூலை 19) ஒத்திவைத்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com