பிளாஸ்டிக் முட்டைகள், பிளாஸ்டிக் அரிசி விற்பனை?: மக்களவையில் எம்.பி.க்கள் கவலை

நாட்டின் சில பகுதிகளில் பிளாஸ்டிக் முட்டைகள், பிளாஸ்டிக் அரிசி, பிளாஸ்டிக் சர்க்கரை ஆகியவை விற்பனை செய்யப்படுவதாக மக்களவையில் எம்.பி.க்கள் செவ்வாய்க்கிழமை கவலை

நாட்டின் சில பகுதிகளில் பிளாஸ்டிக் முட்டைகள், பிளாஸ்டிக் அரிசி, பிளாஸ்டிக் சர்க்கரை ஆகியவை விற்பனை செய்யப்படுவதாக மக்களவையில் எம்.பி.க்கள் செவ்வாய்க்கிழமை கவலை தெரிவித்தனர்.
பிளாஸ்டிக் முட்டை போன்றவற்றின் விற்பனை தொடர்பாக தெலங்கானா ராஷ்டிர சமிதி (டிஆர்எஸ்) கட்சி எம்.பி. மல்லா ரெட்டி, மக்களவையில் கேள்வி எழுப்பினார். அதற்கு மத்திய வேளாண் துறை இணையமைச்சர் சுதர்சன் பகத் எழுத்துமூலம் அளித்த பதிலில் கூறியிருப்பதாவது:
பிளாஸ்டிக் முட்டைகள் தொடர்பான செய்திகள் உணவுத் தர ஆணையமான எஃப்எஸ்எஸ்ஏஐ-யின் கவனத்துக்கு வந்துள்ளன. அதைத் தொடர்ந்து, செயற்கை முறையிலான முட்டைகளின் உற்பத்தி, விநியோகம் ஆகியவை நடைபெறாமல் இருப்பதை உறுதிப்படுத்துமாறு அந்த அமைப்பு, அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் உணவுத் தர ஆணையர்களைக் கேட்டுக் கொண்டுள்ளது. இந்த விவகாரத்தில் ஏதாவது விதிமீறல் நடந்தால் கடும் நடவடிக்கை எடுக்குமாறும் அவர்களை எஃப்எஸ்எஸ்ஐஏ அமைப்பு கேட்டுக் கொண்டுள்ளது. மேலும், சர்வதேச உணவுப் பாதுகாப்பு ஆணையக் கூட்டமைப்பும் (இன்ஃபோசான்) பிளாஸ்டிக் அரிசி, பிளாஸ்டிக் சர்க்கரை ஆகியவை குறித்து எச்சரித்துள்ளது.
எனினும், நாட்டின் எந்தப் பகுதியிலும் போலி முட்டைகள் விற்ஏனையில் இருப்பதாக தகவல் ஏதும் வரவில்லை. அனைத்து விதமான உணவு உற்பத்தி குறித்தும் தோராயமான மாதிரி மற்றும் சோதனையை எஃப்எஸ்எஸ்ஏஐ அமைப்பின் அதிகாரிகள் நடத்தி வருகின்றனர் என்று சுதர்சன் பகத் தனது பதிலில் தெரிவித்தார்.
இதனிடையே, பிளாஸ்டிக் அரிசி, சர்க்கரை உள்ளிட்டவற்றின் விற்பனை தொடர்பாக சமூக வலைதளங்களில் வெளியான விடியோ காட்சிகளைக் குறிப்பிட்டு, பாஜக எம்.பி. சிவகுமார் உதாசி மக்களவையில் தனியாக ஒரு கேள்வியை எழுப்பினார். அதற்குப் பதிலளித்து மத்திய நுகர்வோர் விவகாரத்துறை இணையமைச்சர் சி.ஆர்.சௌதரி கூறியதாவது:
அதுபோன்ற விடியோ காட்சிகள் வெளியானது உண்மைதான்.
இன்ஃபோசான் அமைப்பு அது பற்றி வெளியிட்ட எச்சரிக்கையைத் தொடர்ந்து இந்த விவகாரம் கேரளம் மற்றும் குஜராத் அரசின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. எனினும், தங்கள் மாநிலத்தில் அதுபோன்ற உணவப் பொருள்கள் விற்பனை செய்யப்படுவதாகத் தகவல் இல்லை என்று கேரள அரசும், குஜராத் அரசும் உறுதிப்படுத்தியுள்ளன.
நாட்டின் எந்தப் பகுதியிலும் பிளாஸ்டிக் அரிசியும், சர்க்கரையும் இருப்பதாகக் கண்டறியப்படவில்லை. எனினும், குறைபாடுள்ள உணவுப் பொருள்கள் விற்பனைக்கு வந்திருந்தால் அது தொடர்பாக நுகர்வோர் நீதிமன்றத்தை மக்கள் நாட முடியும் என்று அமைச்சர் தெரிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com