நாகாலாந்து முதல்வராக ஜீலியாங் மீண்டும் பதவியேற்பு

நாகாலாந்து முதல்வராக டி.ஆர்.ஜீலியாங் மீண்டும் பதவியேற்றுள்ளார். முன்னதாக சட்டப் பேரவையில் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டிய முதல்வர் லீசீட்சு புதன்கிழமை அவைக்கு வருவதைத்
நாகாலாந்து முதல்வராக ஜீலியாங் மீண்டும் பதவியேற்பு

நாகாலாந்து முதல்வராக டி.ஆர்.ஜீலியாங் மீண்டும் பதவியேற்றுள்ளார். முன்னதாக சட்டப் பேரவையில் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டிய முதல்வர் லீசீட்சு புதன்கிழமை அவைக்கு வருவதைத் தவிர்த்துவிட்டார்.
நாகாலாந்தில் நாகா மக்கள் முன்னணியின் ஆட்சி நடைபெற்று வருகிறது.
கடந்த பிப்ரவரி மாதம் நகராட்சித் தேர்தல் இடஒதுக்கீடு விவகாரத்தால் மாநிலம் தழுவிய அளவில் நடைபெற்ற போராட்டம் காரணமாக ஜீலியாங் முதல்வர் பதவியில் இருந்து விலகினார். அதன் பிறகு அவரது கட்சியைச் சேர்ந்த ஷுரோசெலி லீசீட்சு முதல்வராகப் பொறுப்பேற்றார்.
ஆனால், அண்மையில் ஆளும் கூட்டணியில் உள்ள 59 எம்எல்ஏக்களில் 43 பேர் லீசீட்சுவுக்கு எதிராகப் போர்க்கொடி தூக்கியதுடன், டி.ஆர்.ஜீலியாங் தலைமையில் அணி திரண்டனர்.
இதையடுத்து, ஆளுநர் ஆச்சார்யாவைச் சந்தித்த ஜீலியாங், தமக்கு பெரும்பான்மை எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு இருப்பதால் தம்மை ஆட்சியமைக்க அழைப்பு விடுக்குமாறு உரிமை கோரினார்.
இதைத் தொடர்ந்து, சட்டப் பேரவையின் சிறப்புக் கூட்டத்தைக் கூட்டி பெரும்பான்மையை நிரூபிக்குமாறு முதல்வர் லீசீட்சுக்கு ஆளுநர் உத்தரவிட்டார். எனினும், அவரது உத்தரவை நாகாலாந்து அமைச்சரவை நிராகரித்தது. ஆளுநரின் உத்தரவுக்குத் தடை விதிக்குமாறு கோரி லீசீட்சு குவாஹாட்டி உயர் நீதிமன்றத்தின் கொஹிமா கிளையில் கடந்த 14-ஆம் தேதி மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
அவைக்கு வராத முதல்வர்: இதையடுத்து, நாகாலாந்து சட்டப் பேரவையில் லீசீட்சு பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.
இதற்காக நாகாலாந்து சட்டப் பேரவை புதன்கிழமை காலை கூடியது. ஜீலியாங் தனது ஆதரவு எம்எல்ஏக்களுடன் அவைக்கு வந்திருந்தார். எனினும், முதல்வர் லீசீட்சும் அவரது ஆதரவு எம்எல்ஏக்களும் அவைக்கு வராததால் அரசு மீதான நம்பிக்கைகோரும் தீர்மானத்தை நிறைவேற்ற முடியவில்லை. இதையடுத்து, பேரவைத் தலைவர் இம்டிவாபங் அவையை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தார். பெரும்பான்மையை நிரூபிக்க தேவையான எம்எல்ஏக்களின்ஆதரவு இல்லை என்பதால்தான் லீசீட்சு அவைக்கு வரவில்லை என்று தெரிகிறது.
புதிய முதல்வர் பதவியேற்பு: இதையடுத்து, குழப்பமான சூழ்நிலை ஏற்பட்டது. எனினும், ஜீலியாங்கை முதல்வராகப் பதவியேற்க அழைப்பு விடுத்த ஆளுநர், பிற்பகல் 3 மணியளவில் அவருக்குப் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.
அவர் பேரவையில் வரும் சனிக்கிழமை அல்லது அதற்கு முன்பு பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டுமென்று ஆளுநர் உத்தரவிட்டார். பெரும்பான்மையை ஜீலியாங் நிரூபித்த பிறகு மற்ற அமைச்சர்கள் பதவியேற்கவுள்ளனர். பாஜகவைச் சேர்ந்த 4 எம்எல்ஏக்களும் அவருக்கு ஏற்கெனவே ஆதரவு தெரிவித்துள்ளனர். எனவே, பேரவையில் ஜீலியாங் பெரும்பான்மையை மிகவும் எளிதாக நிரூபிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பதவியில் இருந்து விலகிய 5 மாதத்தில் ஜீலியாங் மீண்டும் முதல்வராகியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
லீசீட்சு நீக்கம்: இதனிடையே, நாகா மக்கள் முன்னணி கட்சியில் இருந்து லீசீட்சு நீக்கப்பட்டுள்ளார். கட்சி விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டதால் அவரை 6 ஆண்டுகளுக்கு கட்சியில் இருந்து நீக்குவதாக நாகா மக்கள் முன்னணியின் செயல் தலைவர்கள் ஹுஸ்கா, அபோங் ஆகியோர் தெரிவித்துள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com