தனிநபர் உரிமை காப்பு: உலக நாடுகள் இதனை எப்படி கையாள்கின்றன?

தனிநபர் ரகசியங்களை காப்பது என்பது அனைவருக்கும் அளிக்கப்பட்டிருக்கும் அடிப்படை உரிமை என அறுதியிட்டுக் கூற முடியாது என்று உச்ச நீதிமன்றம் தெளிவுபடுத்தியுள்ளது.
தனிநபர் உரிமை காப்பு: உலக நாடுகள் இதனை எப்படி கையாள்கின்றன?

புது தில்லி: தனிநபர் ரகசியங்களை காப்பது என்பது அனைவருக்கும் அளிக்கப்பட்டிருக்கும் அடிப்படை உரிமை என அறுதியிட்டுக் கூற முடியாது என்று உச்ச நீதிமன்றம் தெளிவுபடுத்தியுள்ளது.

சில நேரங்களில் மக்களின் தனிப்பட்ட தகவல்களை பகிரங்கமாக வெளியிடாமல் தவிர்க்கலாமே தவிர, அத்தகைய விவரங்களை எதற்காகவும் திரட்டவே கூடாது என்று வாதிடுவது ஏற்புடையதல்ல என்றும் உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

ஒருவேளை தனிநபர் ரகசியம் காப்பதை அடிப்படை உரிமையாக்கி உத்தரவிட்டால், ஒருவருக்கு எத்தனை குழந்தைகள் உள்ளன என்பதைக் கூட வெளிப்படையாக அறிந்து கொள்ள முடியாத சூழல் உருவாகிவிடும் என்றும் விளக்கமளிக்கப்பட்டுள்ளது.

ஆதார் அட்டைக்காக மக்களின் தனிப்பட்ட விவரங்களை சேகரிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டும், விமர்சனங்கள் எழுப்பப்பட்டும் வரும் நிலையில் இத்தகைய விளக்கத்தை உச்ச நீதிமன்றம் அளித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

இந்த விஷயத்தை உலக நாடுகள் எவ்வாறு கையாள்கின்றன என்று பார்க்கலாம்...

ஸ்வீடன்

தன் நாட்டு குடிமக்களுக்கு ஒவ்வொருவருக்கும் தனித்தனி அடையாள எண்களை வழங்கும் நடைமுறையைக் கொண்டு வந்த முதல் நாடு ஸ்வீடன். இந்த எண்ணைக் கொண்டுதான், ஒவ்வொரு குடிமகனும், தனது நாட்டுடனான எந்ததொடர்பையும் மேற்கொள்ள வேண்டும். ஒரு நபரைப் பற்றிய தகவல்களை இந்த எண்ணைக் கொடுத்து யார் வேண்டுமானாலும் அந்நாட்டின் வரித்துறையிடம் இருந்து பெற்றுக் கொள்ளலாம். அதே சமயம், தங்களது தனிநபர் ரகசியம் மீறப்படுவதாகவும், இதனால் பல பிரச்னைகளுக்கு ஆளாவதாகவும் அந்நாட்டு குடிமக்கள் அவ்வப்போது குற்றம்சாட்டுவதும், இதனை கண்காணிக்க வேண்டும் என்று வலியுறுத்தியும் வருகின்றனர்.

அமெரிக்கா

தனிநபர் ரகசியம் என்பது அமெரிக்காவில் மிக முக்கிய பிரச்னையாக பார்க்கப்படுகிறது. அவ்வபோது இது தொடர்பான விஷயங்களில் அந்நாட்டு உச்ச நீதிமன்றம் தலையிட்டு தீர்வு காணும் சம்பவங்களும் நடக்கின்றன. ஒரு தனிநபரின் ரகசியங்களை, அதிகாரம் இல்லாத நபர்கள் பார்ப்பதை தடுக்க தனிநபர் சட்டம் 1974 வகை செய்கிறது.

ஜப்பான்

இந்தியாவில் பயன்படுத்தப்படும் ஆதார் எண்ணைப் போல 12 எண்களைக் கொண்ட 'மை நம்பர்' என்பதை ஜப்பான் பயன்படுத்தி வருகிறது. பல்வேறு எதிர்ப்புகளுக்கு இடையேதான் இதுவும் அமலுக்கு வந்தது. இந்த எண்ணில், தொடர்புடைய நபரின் வரி செலுத்தும் விவரம், சமூக பாதுகாப்பு, பேரிடர் நிவாரண உதவிகள் போன்றவை இணைக்கப்பட்டிருக்கும். இதனை சொத்துக்களை கணக்கிட்டு வரி பிடித்தம் செய்வதற்காக வங்கிக் கணக்குகளுக்கும் அந்நாட்டு அரசு விரிவுபடுத்தியுள்ளது. 

ஐரோப்பா

ஐரோப்பிய நாடுகளில் பெரும்பாலும், தனிநபர்களின் தகவல்கள் மிகப் பாதுகாப்பாகவே கையாளப்படுகிறது. அதனை பயன்படுத்தவும், தகவல்களைப் பெறவும் அரசுகள் பல்வேறு வழிகாட்டுதல்களை ஏற்படுத்தியுள்ளன. 

ஆதார் வழக்கின் பின்னணி: 
ஆதாரை கட்டாயமாக்கி தற்போதைய மத்திய பாஜக அரசு முன்னெடுத்து வரும் நடவடிக்கைகளுக்கு எதிராக பல்வேறு மனுக்கள் நீதிமன்றங்களில் தாக்கல் செய்யப்பட்டன. மக்களின் தனிப்பட்ட விவரங்களை சேகரிப்பது முறையல்ல என்றும் அது தனிநபர் ரகசிய காப்புக்கு எதிரானது என்றும் அந்த மனுக்களில் வலியுறுத்தப்பட்டிருந்தது.

இதையடுத்து அந்த மனுக்களை பரிசீலித்த உச்ச நீதிமன்றம், தனிநபர் ரகசியம் காப்பதை மக்களின் அடிப்படை உரிமையாக்குவது குறித்து விசாரிக்க முடிவு செய்தது. இதையடுத்து அந்த விவகாரம் 9 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றப்பட்டது.

உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி ஜே.எஸ் கேஹர் தலைமையிலான அந்த அமர்வில் நீதிபதிகள் ஜே. செலமேஸ்வர், எஸ்.ஏ. பாப்தே, ஆர்.கே. அகர்வால், ரோஹின்டன் ஃபாலி நாரிமன், அபய் மனோகர் சாப்ரே, டி.ஒய். சந்திரசூட், சஞ்சய் கிஷண் கௌல், எஸ். அப்துல் நஸீர் ஆகியோர் இடம்பெற்றிருந்தனர். இந்நிலையில், அந்த அமர்வு முன்பு தனிநபர் ரகசியக் காப்பு விவகாரம் புதன்கிழமை விசாரணைக்கு வந்தது.

அப்போது மனுதாரர்கள் தரப்பில் தனிநபர் ரகசியங்களைக் காப்பதை அடிப்படை உரிமையாக்க வேண்டும் என வாதிடப்பட்டது. அதைத்தொடர்ந்து மத்திய அரசு தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட எழுத்துப்பூர்வமான வாதத்தில் அதற்கு எதிரான கருத்துகள் இடம்பெற்றிருந்தன. இதன் பின்னர் நீதிபதிகள் கூறியதாவது:

அனைத்து விவகாரங்களையும் தனிநபர் ரகசியம் காக்கும் நடவடிக்கைகளின் கீழ் கொண்டுவர இயலாது. அந்தரங்க விஷயங்களை பகிரங்கப்படுத்த முடியாது. அதேவேளையில், அனைத்து விஷயங்களையும் ரகசியம் என்ற பெயரில் மறைக்கவும் முடியாது. ஒருவேளை தனிநபர் ரகசியம் காப்பதை அடிப்படை உரிமையாக்கிவிட்டால், மகப்பேறு தகவல்கள் கூட அந்த வரம்பின் கீழ் கொண்டு வரப்படலாம். அதன் பிறகு, அனைத்து குழந்தைகளும் பள்ளிக்குச் செல்ல வேண்டும் என அரசு கட்டாயப்படுத்த முடியாது என்றுகூட பெற்றோர் வாதிடலாம்.

தகவல்கள், தரவுகள் ஆகியவற்றின் அடிப்படையிலான காலத்திலேயே நாம் வாழ்ந்து வருகிறோம். வங்கிக் கணக்கு விவரங்கள், வருமான வரித் தாக்கல் விவரங்கள், குற்றவாளிகளின் விவரங்கள் என பல்வேறு தகவல்கள் துறைரீதியாக ஆவணப்படுத்தப்படுகின்றன.

ஆனால், தனிநபர் ரகசியம் காக்கும் உரிமை வழங்கப்பட்டால் மேற்குறிப்பிட்ட நடைமுறைகளே கேள்விக்குறியாகிவிடும். எனவே, இந்த விவகாரத்தை முறைப்படுத்தலாமே தவிர, அடிப்படை உரிமையாக அறிவிக்க இயலாது என்று நீதிபதிகள் தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து விசாரணையை ஒத்திவைத்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com