இந்திய-சீன எல்லையில் படைகள் குவிப்பு: அமெரிக்கா கவலை

இந்திய-சீன எல்லையில் இரு தரப்பு படைகள் குவிக்கப்பட்டுள்ளது குறித்து அமெரிக்கா கவலை தெரிவித்துள்ளது.

இந்திய-சீன எல்லையில் இரு தரப்பு படைகள் குவிக்கப்பட்டுள்ளது குறித்து அமெரிக்கா கவலை தெரிவித்துள்ளது.
சிக்கிம் மாநிலம் டோகாலாம் பகுதியை உரிமை கொண்டாடி வரும் சீனா அங்கு சாலை அமைக்க மேற்கொண்ட முயற்சியை இந்திய ராணுவம் தடுத்து நிறுத்தியது. இதையடுத்து, அப்பகுதியில் இரு நாடுகளும் தங்களது ராணுவத்தை நிலை நிறுத்தியுள்ளன. இதனால், எல்லையில் பதற்றம் நீடித்து வருகிறது.
இணைந்து செயல்பட வேண்டும்: இந்நிலையில், அமெரிக்க வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் ஹிதர் நவர்ட், வாஷிங்டனில் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
எல்லையில் இந்தியாவும், சீனாவும் ராணுவத்தை நிறுத்தியுள்ளது குறித்து அமெரிக்கா கவலையடைந்துள்ளது. பதற்றத்தை தணிக்கும் வகையில் இருதரப்பும் பேச்சு நடத்தும் என்று அமெரிக்கா நம்புகிறது. இந்திய-சீன எல்லையில் அமைதி நிலவ வேண்டும் என்பதுதான் அமெரிக்காவின் விருப்பம். இதற்காக அந்த இரு நாடுகளின் இணைந்து செயல்பட வேண்டும் என்றார் அவர்.
ஆயுத பலத்தை அதிகரிக்கிறது சீனா: இதனிடையே, சீனா ராணுவ பலத்தை அதிகரித்து வருவது குறித்து அமெரிக்க நாடாளுமன்ற மேலவையின் (செனட்) ராணுவ ஆயுதப் பிரிவுக் குழுவுக்கு, அமெரிக்க விமானப்படை தொழில்நுட்பப் பிரிவின் தலைவர் பால் செல்வா தகவல் அளித்துள்ளார். இது தொடர்பான கடிதத்தில் அவர் கூறியிருப்பதாவது: பொருளாதார வளர்ச்சியால் கிடைந்த பயன்கள் மூலம் சீன ராணுவம் தனது ஆயுத பலத்தை அதிகரித்து வருகிறது. அதன் மூலம் ஆசிய பிராந்தியத்தில் தனக்குத் தேவையானதை சாதிக்க சீனா முயற்சிக்கிறது. சீனாவின் ஆயுத பலத்தை எதிர்கொள்ளும் வகையில் அமெரிக்காவும் தனது ஆயுதத் தொழில்நுட்பத்தை மேம்படுத்த வேண்டியது அவசியமாகும் என்று அவர் கூறியுள்ளார்.
டோகாலாம் பகுதியை ஆக்கிரமிக்க முயற்சிக்கும் சீனா, அடுத்த கட்டமாக வடகிழக்கு மாநிலங்களுக்கும், இந்தியாவின் மற்ற பகுதிக்கும் இடையிலான தரைவழித் தொடர்பை தூண்டிக்கும் நடவடிக்கையில் ஈடுபடும் என்பது இந்தியத் தரப்பின் கவலையாக உள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com