புதிய குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் பற்றிய 10 முக்கிய விஷயங்கள்

தேசிய ஜனநாயகக் கூட்டணியின் வேட்பாளரான ராம்நாத் கோவிந்த் இந்தியாவின் அடுத்த குடியரசுத் தலைவராக தேர்வு செய்யப்பட்டிருக்கிறார்.
புதிய குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் பற்றிய 10 முக்கிய விஷயங்கள்


புது தில்லி: தேசிய ஜனநாயகக் கூட்டணியின் வேட்பாளரான ராம்நாத் கோவிந்த் இந்தியாவின் அடுத்த குடியரசுத் தலைவராக தேர்வு செய்யப்பட்டிருக்கிறார். இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது.

குடியரசுத் தலைவர் தேர்தலில் போட்டியிட்ட பிகார் மாநில ஆளுநராக இருந்த ராம்நாத் கோவிந்த், எதிர்க்கட்சிகளின் வேட்பாளர் மீராகுமாரை விட பெருவாரியான வாக்குகளை பெற்று வெற்றி பெற்றுள்ளார்.

இதையடுத்து, நாட்டின் 14வது குடியரசுத் தலைவராக தேர்வு செய்யப்பட்டிருக்கும் ராம்நாத் கோவிந்த், வரும் 25ம் தேதி பதவியேற்க உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. ராம்நாத் கோவிந்துக்கு பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்துத் தெரிவித்துள்ளனர்.

இவரைப் பற்றிய 10 முக்கிய விஷயங்களைப் பார்க்கலாம்...

1. பிகார் மாநில ஆளுநராக இருந்த ராம்நாத் கோவிந்த், 1945ம் ஆண்டு அக்டோபர் 1ம் தேதி உத்தரப்பிரதேச மாநிலம் கான்பூர் தேஹாத்தில் பிறந்தவர்.

2. விவசாயக் குடும்பத்தில் பிறந்த ராம்நாத் கோவிந்த், கான்பூர் பல்கலைக்கழகத்தில் பி.காம்., பட்டப்படிப்பும், பின்னர் சட்டப் படிப்பையும் முடித்தார்.

3. பின்னர் தில்லி வந்த அவர் அங்கு வழக்குரைஞராகப் பணியாற்றினார். 1974-ம் ஆண்டு சவீதா என்பவரை மணந்தார். இந்த தம்பதிக்கு ஒரு மகனும், மகளும் உள்ளனர்.

4. கடந்த 1977 முதல் 1979 வரை தில்லி உயர் நீதிமன்றத்தில் அரசு வழக்குரைஞராகப் பணியாற்றினார். பின்னர் 1993-ஆம் ஆண்டு வரை உச்ச நீதிமன்றத்தில் வழக்குரைஞராகத் தொடர்ந்தார்.

5. தொடக்கம் முதலே பாஜகவில் இணைந்து பணியாற்றிய அவர், 1998 முதல் 2002-ஆம் ஆண்டு வரை பாஜகவின் தாழ்த்தப்பட்டோர் பிரிவான தலித் மோர்ச்சாவின் தலைவராக இருந்துள்ளார்.

6. 1994-ஆம் ஆண்டில் உத்தரப் பிரதேசத்தில் இருந்து பாஜக சார்பில் மாநிலங்களவைக்குத் தேர்வு செய்யப்பட்டார். 2006-ஆம் ஆண்டு வரை தொடர்ந்து 12 ஆண்டுகள் மாநிலங்களவை எம்.பி.யாக இருந்தார்.

7. தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர் நலனுக்கான நாடாளுமன்றக் குழு, உள்துறை, பெட்ரோலியம்-இயற்கை எரிவாயு, சமூக நீதி, சட்டம்-நீதி உள்ளிட்ட நாடாளுமன்றக் குழுக்களில் உறுப்பினராகப் பணியாற்றியுள்ளார். 

8. முன்னதாக, லக்னெள அம்பேத்கர் பல்கலைக்கழக நிர்வாகக் குழு உறுப்பினராகவும் இருந்துள்ளார். 2002-ஆம் ஆண்டில் இந்தியாவின் பிரதிநிதியாக ஐ.நா. சபையில் உரையாற்றியுள்ளார்.

9 .சர்ச்சையில் சிக்காதவர்: 1997-ஆம் ஆண்டில் தாழ்த்தப்பட்ட பிரிவைச் சேர்ந்த அரசுப் பணியாளர்களின் நலனுக்கு எதிராக மத்திய அரசு பிறப்பித்த உத்தரவுகளுக்கு எதிராகப் போராடி வெற்றி பெற்றார்.

10. பாஜக தேசிய செய்தித் தொடர்பாளராகவும் அவர் பணியாற்றியுள்ளார். கடந்த 2015-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் பிகார் ஆளுநராகப் பொறுப்பேற்றார். பாஜக-வில் நீண்டகாலமாக பணியாற்றி வந்த ராம்நாத் கோவிந்த் எவ்வித சர்ச்சையிலும் சிக்காதவர் என்பது குறிப்பிடத்தக்கது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com