மாநிலத்துக்கு தனிக் கொடியை உருவாக்குவது தேசத் துரோகமல்ல

மாநிலத்துக்கு தனிக் கொடி தேவை என்பது தேசத் துரோகமல்ல என்றார் கர்நாடக முதல்வர் சித்தராமையா.
மாநிலத்துக்கு தனிக் கொடியை உருவாக்குவது தேசத் துரோகமல்ல

மாநிலத்துக்கு தனிக் கொடி தேவை என்பது தேசத் துரோகமல்ல என்றார் கர்நாடக முதல்வர் சித்தராமையா.
மத்திய பொதுப் பணியாளர் தேர்வாணையம் நடத்திய தேர்வில் கன்னட பயிற்று மொழியில் தேர்வெழுதி சிறப்பிடம் பெற்ற மாணவர்களுக்கு கர்நாடக கன்னட ஆணையம் சார்பில், பெங்களூரில் புதன்கிழமை நடைபெற்ற பாராட்டு விழாவில் பங்கேற்ற பிறகு, செய்தியாளர்களிடம் சித்தராமையா கூறியது:
கர்நாடக மாநிலத்துக்கு தனிக் கொடி இருப்பது நமது தேசியக் கொடியை அவமதித்ததாகக் கூற முடியாது. மேலும், மாநிலத்திற்கு தனிக் கொடி தேவை என்பது தேசத் துரோகமல்ல. தனிக் கொடி இருப்பது இந்திய இறையாண்மைக்குத் தடையாக இருக்காது.
இந்த விவகாரத்தில் பாஜகவும், மஜதவும் தேவையில்லாமல் அரசியல் நடத்தி வருகின்றன. இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் மாநிலத்திற்கு தனியாக கொடி இருக்கலாம் என்றோ, இருக்கக் கூடாது என்றோ கூறப்படவில்லை. கர்நாடகத்தில் நடக்கும் அனைத்து அரசு விழாக்களின் தொடக்கத்திலும் நாட்டுப்பண் போல மாநிலப் பண் பாடப்படுகிறது. மாநிலப் பண் பாடுவது நாட்டுப் பண்ணுக்கு இழுக்காக அமைந்துள்ளதா?
கர்நாடகத்தின் மூத்த பத்திரிகையாளரும், இலக்கியவாதியுமான பாட்டீல் புட்டப்பாவின் ஆலோசனையின் பேரில், மாநிலத்திற்கு தனிக் கொடியை உருவாக்குவதற்காக தனிக் குழு அமைக்கப்பட்டுள்ளது.
இக் குழு தனது இறுதி அறிக்கையை மாநில அரசிடம் அளிக்கவில்லை. இந்தக் குழுவின் அறிக்கை கிடைத்ததும், அதன் சாதக-பாதகங்கள் குறித்து யோசித்து மாநில அரசு நடவடிக்கை மேற்கொள்ளும்.
பெங்களூரு பரப்பன அக்ரஹாராவில் உள்ள மத்திய சிறையில் நடைபெற்றதாகக் கூறப்படும் முறைகேடுகள் விவகாரத்தை மூடி மறைப்பதற்காகவே மாநிலத்திற்கு தனிக் கொடி விவகாரத்தை மாநில அரசு கையில் எடுத்திருப்பதாகக் கூறுவதை ஏற்க இயலாது.
அரசு அதிகாரிகளை தேவையில்லாமல் மாநில அரசு பணியிட மாற்றம் செய்வதாக பாஜக கூறும் குற்றச்சாட்டில் உண்மையில்லை. யாரை, எங்கு பணியிட மாற்றம் செய்ய வேண்டும் என்பது மாநில அரசின் உரிமைக்குள்பட்டதாகும் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com