விவசாயத்தை விட குடிநீருக்கு நீர் திறப்பதே அவசியம்: உச்சநீதிமன்றத்தில் கர்நாடகா அடம்!    

தமிழகத்திற்கு விவசாயத்திற்கு நீர் திறப்பது என்பதை விட பெங்களூரு நகரின் குடிநீர் தேவைக்கு நீர் திறப்பதே அவசியம் என்று உச்சநீதிமன்றத்தில் கர்நாடகா தெரிவித்துள்ளது.  
விவசாயத்தை விட குடிநீருக்கு நீர் திறப்பதே அவசியம்: உச்சநீதிமன்றத்தில் கர்நாடகா அடம்!    

புதுதில்லி:  தமிழகத்திற்கு விவசாயத்திற்கு நீர் திறப்பது என்பதை விட பெங்களூரு நகரின் குடிநீர் தேவைக்கு நீர் திறப்பதே அவசியம் என்று உச்சநீதிமன்றத்தில் கர்நாடகா தெரிவித்துள்ளது.  

காவிரி நதி நீர்ப் பங்கீடு தொடர்பாக 2007- இல் நடுவர் மன்றம் அளித்த இறுதித் தீர்ப்பு குறித்து தமிழகம், கர்நாடகம், கேரளம் ஆகிய மாநிலங்கள் தாக்கல் செய்துள்ள மனுக்கள் மீதான இறுதி விசாரணை உச்ச நீதிமன்றத்தில் கடந்த 11-ஆம் தேதி (செவ்வாய்க்கிழமை) தொடங்கியது.

இந்த விசாரணையானது தொடர்ந்து 15 வேலை நாள்களுக்கு நடைபெறும் என்று உச்சநீதிமன்றம் அறிவித்திருந்தது. அதன்படி விசாரணையானது நீதிபதிகள் தீபக் மிஸ்ரா, அமிதவா ராய், ஏ.எம். கான்வில்கர் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு நடைபெற்று வந்தது.

இரு தரப்புகளும் தங்கள் தரப்பு வாதத்தினை தொடர்ந்து முன்வைத்து வந்த நிலையில் வழக்கினை வரும் ஜூலை 18-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து  உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.  

அப்பொழுது கர்நாடகம் தன் தரப்பு வாதத்தினை விரிவாக முன்வைக்குமாறு கூறிய உச்சநீதிமன்றம், காவிரி போன்ற முக்கியமான வழக்குகளில் வெறுமனே புத்தகங்களில் உள்ளதை வைத்து ஒரு முடிவுக்கு வர  முடியாது என்றும், உண்மையான நிலவரங்களையும் தெரிந்து கொள்ள வேண்டுமென்றும் கருத்து தெரிவித்தது.

அதன்படி நேற்று முன்தினம் மீண்டும் விசாரணை துவங்கியது. கர்நாடகம் தனது தரப்பு வாதங்களை தொடர்ந்து முன்வைத்து வந்தது. இன்று மூன்றாவது நாளாக தொடர்ந்த வாதத்தில், 'தமிழகத்திற்கு விவசாயத்திற்கு நீர் திறப்பது என்பதை விட பெங்களூரு நகரின் குடிநீர் தேவைக்கு நீர் திறப்பதே அவசியம்' என்று கர்நாடகா  தெரிவித்தது.

அதைத் தொடர்ந்து நீதிபதிகள் கருத்து தெரிவித்த பொழுது காவிரி நடுவர் மன்றத்தின் முடிவுகளை இங்கு முன்வைக்க வேண்டாம் என்று கர்நாடகாவுக்கு எடுத்துக் கூறியதோடு, வழக்கை வரும் 25-ஆம் தேதிக்கு ஒத்தி வைத்து உத்தரவிட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com