14-ஆவது குடியரசுத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ராம்நாத் கோவிந்துக்கு பிரதமர், அரசியல் தலைவர்கள் வாழ்த்து

நாட்டின் 14-ஆவது குடியரசுத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ராம்நாத் கோவிந்துக்கு பிரதமர் மோடி, எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராகக் களமிறங்கிய மீரா குமார்,
14-ஆவது குடியரசுத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ராம்நாத் கோவிந்துக்கு பிரதமர், அரசியல் தலைவர்கள் வாழ்த்து

நாட்டின் 14-ஆவது குடியரசுத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ராம்நாத் கோவிந்துக்கு பிரதமர் மோடி, எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராகக் களமிறங்கிய மீரா குமார், பாஜக மூத்த தலைவர் அத்வானி உள்பட பல்வேறு தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
ஏறத்தாழ 65 சதவீத வாக்குகளைப் பெற்று அளப்பரிய வெற்றி பெற்றுள்ள ராம்நாத் கோவிந்த், குடியரசுத் தலைவர் பொறுப்பினை திறம்பட வகிக்க வேண்டும் என்றும் அவர்கள் விருப்பம் தெரிவித்துள்ளனர்.
குடியரசுத் தலைவர் தேர்தல் முடிவுகள் வியாழக்கிழமை அறிவிக்கப்பட்ட நிலையில், பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் முன்னிறுத்தப்பட்ட வேட்பாளர் ராம்நாத் கோவிந்துக்கு நாடு முழுவதும் வாழ்த்துகள் குவிந்து வருகின்றன.
முடிவுகள் வெளியான சில நிமிடங்களுக்குள் சுட்டுரை (டுவிட்டர்) வாயிலாக பிரதமர் மோடி தனது வாழ்த்தினைத் தெரிவித்தார். அதுதொடர்பாக அவர் வெளியிட்ட பதிவுகளில் தெரிவித்திருப்பதாவது:
நாட்டின் புதிய குடியரசுத் தலைவராகப் பொறுப்பேற்க உள்ள ராம்நாத் கோவிந்துக்கு மனமார்ந்த வாழ்த்துகள். அவர், தனது பதவிக்காலத்தில் ஆக்கப்பூர்வமாகவும், பிறருக்கு முன்னுதாரணமாகவும் செயல்பட வேண்டும் என விழைகிறேன்.
ராம்நாத் கோவிந்துக்கு வாக்களித்து ஆகச் சிறந்த வெற்றியைத் தேடித் தந்த அனைத்து எம்எல்ஏ, எம்.பி.க்களுக்கும் நன்றி. குறிப்பாக, மாற்றுக் கட்சியைச் சேர்ந்த மக்கள் பிரதிநிதிகள் அவரை ஆதரித்தமைக்கு நன்றி.
இந்தத் தேர்தலில் எதிர்க்கட்சிகள் சார்பில் களமிறங்கிய மீரா குமாருக்கும் எனது பாராட்டுகள். கடந்த சில மாதங்களாக அவர் மேற்கொண்ட தீவிர பிரசாரங்கள், ஜனநாயக மாண்புக்கு பெருமை சேர்ப்பவை என்று அந்தப் பதிவுகளில் பிரதமர் மோடி குறிப்பிட்டுள்ளார்.
அத்வானி வாழ்த்து: முன்னதாக, தேர்தல் முடிவுகள் வெளியானவுடன் பாஜக மூத்த தலைவர் எல்.கே.அத்வானி, ராம்நாத் கோவிந்தை தொலைபேசியில் தொடர்பு கொண்டு வாழ்த்து தெரிவித்தார். காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, துணைத் தலைவர் ராகுல் காந்தி, உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, பிகார் முதல்வர் நிதீஷ் குமார், தெலங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவ், ஜம்மு - காஷ்மீர் முதல்வர் மெஹபூபா முஃப்தி, ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, கேரள ஆளுநர் சதாசிவம், ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் தலைவர் ஜெகன்மோகன் ரெட்டி உள்பட பல தலைவர்கள் ராம்நாத் கோவிந்துக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

எனது போராட்டம் தொடரும்
குடியரசுத் தலைவர் தேர்தலில் என்னை வேட்பாளராக முன்னிறுத்திய 17 கட்சிகளுக்கும், வாக்களித்த மக்கள் பிரதிநிதிகளுக்கும் உளமார்ந்த நன்றி. இத்துடன் எனது போராட்டம் முடியப் போவதில்லை. மதச்சார்பு, அடக்குமுறைக்கு எதிராக தொடர்ந்து போராடிக் கொண்டே இருப்பேன்.
குடியரசுத் தலைவர் அரியணையில் அமரப் போகும் ராம்நாத் கோவிந்துக்கு நெஞ்சம் நிறைந்த வாழ்த்துகள். சவாலான சூழலில் அவர் இப்பொறுப்பை ஏற்க உள்ளார். சட்டப்பூர்வமாகவும், உளப்பூர்வமாகவும் இந்திய அரசியல் சாசனத்தை மேன்மைப்படுத்தும் இன்றியமையாத கடமை அவருக்கு உள்ளது என மீரா குமார் தனது வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com