14-ஆவது குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்

குடியரசுத் தலைவர் தேர்தலில், ஆளும் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் வேட்பாளரான ராம்நாத் கோவிந்த் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.
குடியரசுத் தலைவர் தேர்தலில் வெற்றி பெற்ற ராம்நாத் கோவிந்துக்கு இனிப்பு வழங்கி வியாழக்கிழமை வாழ்த்து தெரிவித்த பிரதமர் மோடி.
குடியரசுத் தலைவர் தேர்தலில் வெற்றி பெற்ற ராம்நாத் கோவிந்துக்கு இனிப்பு வழங்கி வியாழக்கிழமை வாழ்த்து தெரிவித்த பிரதமர் மோடி.

குடியரசுத் தலைவர் தேர்தலில், ஆளும் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் வேட்பாளரான ராம்நாத் கோவிந்த் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.
நாட்டின் 14-ஆவது குடியரசுத் தலைவராக, அவர், வரும் 25-ஆம் தேதி பதவியேற்கவுள்ளார்.
71 வயதாகும் இவர், தலித் சமூகத்தில் இருந்து குடியரசுத் தலைவர் பதவிக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட இரண்டாவது நபர் ஆவார். மேலும், நாட்டின் உயரிய பதவிக்கு பாஜக தலைவர் ஒருவர் தேர்ந்தெடுக்கப்படுவது இதுவே முதல் முறையாகும்.
குடியரசுத் தலைவர் தேர்தலில், ராம்நாத் கோவிந்த், 65.5 சதவீத வாக்குகளைப் பெற்று, தன்னை எதிர்த்து எதிர்க்கட்சிகள் சார்பில் போட்டியிட்ட மக்களவை முன்னாள் தலைவர் மீரா குமாரைத் தோற்கடித்தார்.
குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியின் பதவிக்காலம், வரும் 24-ஆம் தேதியுடன் நிறைவடைவதையொட்டி, புதிய குடியரசுத் தலைவரைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல், கடந்த 17-ஆம் தேதி நடைபெற்றது.
இந்தத் தேர்தலில், பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில், பிகார் முன்னாள் ஆளுநர் ராம்நாத் கோவிந்தும், காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி சார்பில் மக்களவை முன்னாள் தலைவர் மீரா குமாரும் போட்டியிட்டனர்.
இந்தத் தேர்தலில், 4,109 எம்எல்ஏக்களும், 771 எம்.பி.க்களும் வாக்களிக்கத் தகுதி பெற்றிருந்தனர். அவர்களில், 4,083 எம்எல்ஏக்களும், 768 எம்.பி.க்களும் தங்களது வாக்குகளைச் செலுத்தினர்.
வாக்குப்பதிவுக்காக, நாடாளுமன்ற வளாகம் உள்பட நாடு முழுவதும் 32 இடங்களில் வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டிருந்தன. தேர்தலில் பதிவான வாக்குகள் வியாழக்கிழமை எண்ணப்பட்டு, முடிவுகள் அறிவிக்கப்பட்டன.
இதில், ராம்நாத் கோவிந்துக்கு 7,02,044 வாக்கு மதிப்புகளுடன் 2,930 வாக்குகளும், மீரா குமாருக்கு 3,67,314 வாக்கு மதிப்புகளுடன் 1,844 வாக்குகளும் (34.35 சதவீதம்) கிடைத்ததாக தேர்தல் அதிகாரி அனூப் மிஸ்ரா அறிவித்தார்.
பல மாநிலங்களில் எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த உறுப்பினர்கள் ராம்நாத் கோவிந்துக்கு ஆதரவாக வாக்களித்தது, அவரது வெற்றிக்கு மேலும் வலுசேர்ப்பதாக அமைந்தது.
செல்லாத வாக்குகள் 77
குடியரசுத் தலைவர் தேர்தலில் 77 வாக்குகள் செல்லாதவை என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இவற்றில் 21 வாக்குகள் எம்.பி.க்கள் அளித்தவையாகும். அதிகபட்சமாக மேற்கு வங்கத்தில் 10 செல்லாத வாக்குகள் பதிவாகியுள்ளன. இதற்கு அடுத்தபடியாக தில்லியில் 6, மணிப்பூர், ஜார்க்கண்ட்டில் தலா 4, உத்தரப் பிரதேசம் 2 செல்லாத வாக்குகள் அளிக்கப்பட்டுள்ளன. செல்லாத 77 வாக்குகளின் மொத்த வாக்கு மதிப்பு 20,942 ஆகும்.
வாக்களிக்கும் எம்.பி., எம்எல்ஏக்கள் குடியரசுத் தலைவர் தேர்தலில் தங்களின் முதல் விருப்பம் யாருக்கு என்பதை தெரிவிக்காமல் இருந்தாலும், தேர்தல் ஆணையம் குறிப்பிடாத வேறு பெயரைத் தெரிவித்திருந்தாலும் அந்த வாக்கு செல்லாது என்று அறிவிக்கப்படும்.
நேர்மையுடன் கடமையைச் செய்வோர், உயர்ந்த நிலையை அடையலாம்
'நேர்மையுடன் கடமையைச் செய்வோர், உயர்ந்த நிலையை அடையலாம் என்பது எனது வெற்றியின் மூலம் தெரிவிக்கப்படும் செய்தியாகும்' என்று ராம்நாத் கோவிந்த் கூறினார்.
தேர்தல் முடிவு அறிவிக்கப்பட்ட பிறகு, தில்லி அக்பர் சாலையில் உள்ள தனது இல்லத்தில் செய்தியாளர்களிடம் அவர் மேலும் கூறியதாவது:
நான் ஒருபோதும் குடியரசுத் தலைவர் பதவிக்கு ஆசைப்பட்டதில்லை. இந்த சமூகத்துக்கும், நாட்டுக்கும் நான் அயராது ஆற்றிய பணிகளே என்னை இந்த உயர்ந்த இடத்துக்கு கொண்டு வந்திருக்கிறது.
தில்லியில் கனமழை பெய்கிறது. இந்த நாளில், சிறுவயதில் எனது தந்தையின் குடிசை வீட்டில் தங்கியிருந்தது எனக்கு நினைவுக்கு வருகிறது. மழை நாள்களில் அந்தக் குடிசை வீடு ஒழுகும்போது, நானும் எனது சகோதரர்களும், மழை ஓயும் வரை, ஓர் ஓரத்தில் ஒதுங்கி நிற்போம்.
என்னைப் போல், பல ராம்நாத் கோவிந்துகள், பிழைப்புக்காக, மழையில் நனைந்துகொண்டும், வியர்வை சிந்தி உழைத்துக் கொண்டும் இருக்கிறார்கள். அவர்களின் பிரதிநிதியாக, நான் குடியரசுத் தலைவர் மாளிகைக்குச் செல்ல இருக்கிறேன். நேர்மையுடன் கடமையைச் செய்பவர்கள், உயர்ந்த நிலையை அடையலாம் என்பது எனது வெற்றியின் மூலம் தெரிவிக்கப்படும் செய்தியாகும். குடியரசுத் தலைவராக நான் தேர்ந்தெடுக்கப்பட்டது, இந்திய ஜனநாயகத்தின் மேன்மைக்கான ஆதாரமாகும்.
ராஜேந்திர பிரசாத், சர்வபள்ளி ராதாகிருஷ்ணன், அப்துல் கலாம், பிரணாப் முகர்ஜி போன்ற ஆளுமைகள் வகித்த இந்தப் பதவி, எனக்கு மிகப்பெரிய பொறுப்பைக் கொடுத்திருக்கிறது என்றார் அவர்.
புதிய குடியரசுத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ராம்நாத் கோவிந்த், வரும் 25-ஆம் தேதி பதவியேற்கவுள்ளார்.
குடியரசுத் தலைவர் தேர்தல் இதுவரை...

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com