பாஜகவின் 37 ஆண்டு கால வரலாற்றில் முதல் முறையாக... ராம்நாத் கோவிந்த்!

பாஜக எனும் தேசியக் கட்சி உருவாகி 37 ஆண்டுகள் ஆன நிலையில், அக்கட்சியைச் சேர்ந்த ஒரு தலைவர் முதல் முறையாக குடியரசுத் தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
பாஜகவின் 37 ஆண்டு கால வரலாற்றில் முதல் முறையாக... ராம்நாத் கோவிந்த்!


புது தில்லி: பாஜக எனும் தேசியக் கட்சி உருவாகி 37 ஆண்டுகள் ஆன நிலையில், அக்கட்சியைச் சேர்ந்த ஒரு தலைவர் முதல் முறையாக குடியரசுத் தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

அதுவும் 65 சதவீதத்துக்கும் அதிகமான வாக்குகளைப் பெற்று மகத்தான வெற்றியுடன், நாட்டின் 14வது குடியரசுத் தலைவராகத் தேர்வு செய்யப்பட்டுள்ளார். 

அதுவும், முக்கிய எதிர்க்கட்சியான காங்கிரஸ் மற்றும் முக்கியக் கட்சிகள் இணைந்து அறிவித்த வேட்பாளர் மீராகுமாரை விடுத்து, சில காங்கிரஸ் எம்எல்ஏக்கள் ராம்நாத் கோவிந்துக்கு வாக்களித்து வெற்றியை மகத்தான வெற்றியாக மாற்றிய விஷயம் வேறு.

71 வயதாகும் ராம்நாத் கோவிந்த், நாட்டின் புதிய குடியரசுத் தலைவராக தேர்வு செய்யப்பட்டதாக வியாழக்கிழமை 4 மணியளவில் முறைப்படி அறிவிக்கப்பட்டது. இவர் வரும் 25ம் தேதி குடியரசுத் தலைவராக பதவியேற்கிறார்.

ராம்நாத் கோவிந்த் 7,02,044 மதிப்புள்ள 2,930 வாக்குகளையும், மீரா குமார் 3,67,314 மதிப்புகளைக் கொண்ட 1,844 வாக்குகளையும் பெற்றிருந்தனர்.

அதே சமயம், கடந்த 2012ம் ஆண்டு நடந்த குடியரசுத் தலைவர் தேர்தலில் போட்டியிட்ட பிரணாப் முகர்ஜி, 69% வாக்குகளைப் பெற்று மகத்தான வெற்றியை பதிவு செய்தார்.  இந்த சாதனையை கோவிந்த் தோற்கடிக்க தவறிவிட்டார் என்பது பாஜக தலைவர்களின் வருத்தமாகக் கூட  இருக்கலாம்.

இந்த தேர்தலில் 21 நாடாளுமன்ற உறுப்பினர்களின் வாக்குகள் செல்லாதவையாக அறிவிக்கப்பட்டது. அதாவது நாடு முழுவதும் 77 வாக்குகள் செல்லாதவை. 

அதோடு, மகாராஷ்டிரா, கர்நாடகா, கோவா, குஜராத், மிசோரம், இமாச்சலப் பிரதேசம், தில்லி உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்த சில எதிர்க்கட்சி எம்எல்ஏக்கள், கட்சி எனும் எல்லையையும் மீறி கோவிந்துக்கு வாக்களித்து மகிழ்ந்தனர். இதில் அதிகப்படியாக மகாராஷ்டிராவில் அதிகப்படியாக 20 எதிர்க்கட்சி எம்எல்ஏக்கள் ராம்நாத் கோவிந்துக்கு வாக்களித்துள்ளனர்.

அடுத்து ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலை எதிர்கொள்ளவிருக்கும் கர்நாடகாவில், 10 எதிர்க்கட்சி எம்எல்ஏக்கள் ராம்நாத் கோவிந்துக்கு வாக்களித்திருப்பது அக்கட்சியினரிடையே கலக்கத்தை ஏறப்டுத்தியுள்ளது.

தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு, முடிவுகள் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படுவதற்கு முன்பே, மதிய வாக்கிலேயே பாஜகவினர், ராம்நாத் கோவிந்தின் வெற்றியைக் கொண்டாட ஆரம்பித்துவிட்டனர்.

ராம்நாத் கோவிந்துக்கு வாழ்த்துத் தெரிவித்த மோடி, சுமார் 20 ஆண்டுகளுக்கு முன்பு ராம்நாத் கோவிந்தின் மகன் திருமணத்தில் தான் கலந்து கொண்டபோது எடுத்தப் புகைப்படத்தையும் டிவிட்டரில் பகிர்ந்து கொண்டார்.

தனது வெற்றி குறித்து கருத்துக் கூறிய ராம்நாத் கோவிந்த், "நான் மிகவும் உணர்ச்சிவசப்பட்டுள்ளேன்" என்று பேசமுடியாமல் தவித்தார்.

குடியரசுத் தலைவர் தேர்தலில் போட்டியிட்டு தோல்வி அடைந்த மீரா குமார், ராம்நாத் கோவிந்துக்கு தனது மனமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்துக் கொண்டார்.

கே.ஆர். நாராயணனுக்குப் பிறகு, இந்தியாவின் குடியரசுத் தலைவராகவும் 2வது தலித், ராம்நாத் கோவிந்த் என்பது குறிப்பிடத்தக்கது. 

பிகார் ஆளுநராக இருந்த ராம்நாத் கோவிந்த் மாநிலங்களவை உறுப்பினராகவும் இரண்டு முறை பதவி வகித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com