உ.பி. பேரவையிலிருந்து காங்கிரஸ், சமாஜவாதி எம்எல்ஏக்கள் வெளிநடப்பு

உத்தரப் பிரதேசத்தில் ஆளும் பாஜக, எதிர்க்கட்சிகளை அவமதிக்கிறது என்று கூறி, காங்கிரஸ், சமாஜவாதி, பகுஜன் சமாஜ் எம்எல்ஏக்கள் சட்டப் பேரவையிலிருந்து வெளிநடப்பு செய்தனர்.

உத்தரப் பிரதேசத்தில் ஆளும் பாஜக, எதிர்க்கட்சிகளை அவமதிக்கிறது என்று கூறி, காங்கிரஸ், சமாஜவாதி, பகுஜன் சமாஜ் எம்எல்ஏக்கள் சட்டப் பேரவையிலிருந்து வெளிநடப்பு செய்தனர்.
சட்டமேலவையிலும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கடும் அமளியில் ஈடுபட்டனர். இதன்காரணமாக மேலவை 3 முறை ஒத்திவைக்கப்பட்டது.
சட்டப் பேரவை வியாழக்கிழமை தொடங்கியவுடன் சமாஜவாதி கட்சியின் எம்எல்ஏவும், பேரவை எதிர்க்கட்சித் தலைவருமான ராம் கோவிந்த் சௌத்ரி, உத்தரப் பிரதேச அரசு எதிர்க்கட்சிகளை அச்சுறுத்துகிறது என்று குற்றம்சாட்டினார்.
இதுகுறித்து மேலும் அவர் அவையில் கூறியதாவது:
நாங்கள் (எதிர்க்கட்சியினர்) அனைவரும் அச்சுறுத்தப்படுகிறோம். எங்கள் குடும்பத்தினரைச் சிறையில் அடைக்கப்போவதாக உத்தரப் பிரதேச அரசு மிரட்டுகிறது. நாங்கள் தொடர்ந்து அவமதிக்கப்படுகிறோம். சட்டப் பேரவைத் தலைவர் எங்களுக்கு எந்தவிதப் பாதுகாப்பும் வழங்கவில்லை. இதுபோன்ற சூழலை கடந்த 40 ஆண்டுகளில் நான் எப்போதும் சந்தித்ததில்லை. நாங்கள் வெளிநடப்பு செய்கிறோம். நீங்களே அவையை நடத்திக் கொள்ளுங்கள் என்று தெரிவித்தார்.
அவரை ஆதரித்து பகுஜன் சமாஜ் கட்சி எம்எல்ஏ லால்ஜி வர்மா கூறியதாவது:
மக்கள் பிரச்னைகள் குறித்து அவையில் எம்எல்ஏக்கள் பேச அனுமதிக்கப்படுவதில்லை.
மேலும், எதிர்க்கட்சி எம்எல்ஏக்களை அவமதிக்கும் வகையிலான வார்த்தைகள் உபயோகிக்கப்படுகின்றன. இனியும் அவையில் இருப்பது சரியில்லை. நாங்கள் வெளிநடப்பு செய்கிறோம் என்றார் லால்ஜி வர்மா.
அப்போது, 'புதன்கிழமை பேரவைக் கூட்டத்தில் எதிர்க்கட்சித் தலைவர் பேச முற்பட்டபோது, அவரது மைக் ஆஃப் செய்யப்பட்டது' என்று காங்கிரஸ் எம்எல்ஏ அஜய் குமார் லல்லு குற்றம்சாட்டினார்.
அதைத் தொடர்ந்து, அமைதிகாக்குமாறு அவைத் தலைவர் ஹிருதய் நரேன் தீக்ஷித் அறிவுறுத்தியதைப் பொருட்படுத்தாமல், எதிர்க்கட்சி எம்எல்ஏக்கள் அனைவரும் வெளிநடப்பு செய்தனர்.
எதிர்க்கட்சி எம்எல்ஏக்களின் குற்றச்சாட்டுகளுக்கு சட்டப் பேரவை விவகாரங்களுக்கான அமைச்சர் சுரேஷ் குமார் கன்னா பதிலளித்துக் கூறுகையில், 'எதிர்க்கட்சிகளின் குரல்கள் நசுக்கப்படுவதாகக் கூறப்படுவதில் உண்மையில்லை. பேரவையிலிருந்து வெளிநடப்பு செய்வது என்பது சட்டப் பேரவை உறுப்பினராக தேர்வு செய்த மக்களை அவமதிப்பது போன்றதாகும்' என்றார்.
'மற்றொரு விவகாரம் குறித்து விவாதம் நடத்த இருந்ததால் எதிர்க்கட்சித் தலைவரின் மைக் ஆஃப் செய்யப்பட்டது' என்றார் அவைத் தலைவர் ஹிருதய் நாராயண் தீக்ஷித்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com