உ.பி.யில் அதிக வாக்குகள் பெற்ற ராம்நாத் கோவிந்த்

குடியரசுத் தலைவர் தேர்தலில் வெற்றி பெற்ற ராம்நாத் கோவிந்த், உத்தரப் பிரதேச மாநிலத்தில் அதிக வாக்குகளையும், கேரள மாநிலத்தில் குறைந்த வாக்குகளையும் பெற்றுள்ளார்.
உ.பி.யில் அதிக வாக்குகள் பெற்ற ராம்நாத் கோவிந்த்

குடியரசுத் தலைவர் தேர்தலில் வெற்றி பெற்ற ராம்நாத் கோவிந்த், உத்தரப் பிரதேச மாநிலத்தில் அதிக வாக்குகளையும், கேரள மாநிலத்தில் குறைந்த வாக்குகளையும் பெற்றுள்ளார்.
தேர்தல் ஆணையம் அளித்த தகவல்படி, பாஜக ஆளும் உத்தரப் பிரதேசத்தில் ராம்நாத் கோவிந்த் அதிகபட்சமாக, 335 வாக்குகளைப் பெற்றுள்ளார். அவரை எதிர்த்துப் போட்டியிட்ட மீரா குமார் 65 வாக்குகளைப் பெற்றுள்ளார்.
அதற்கு அடுத்தபடியாக, மகாராஷ்டிரத்தில் மொத்தமுள்ள 285 வாக்குகளில், ராம்நாத் கோவிந்துக்கு 208 வாக்குகள் கிடைத்தன. தெலுங்கு தேசம்-பாஜக கூட்டணி ஆட்சி நடைபெறும் ஆந்திரப் பிரதேசத்தில், ஒட்டுமொத்த 171 வாக்குகளும் ராம்நாத் கோவிந்துக்கே கிடைத்தன.
பிரதமர் மோடியின் சொந்த மாநிலமான குஜராத்தில், ராம்நாத் கோவிந்துக்கு 132 வாக்குகளும், மீரா குமாருக்கு 49 வாக்குகளும் கிடைத்தன.
நாகாலாந்தில் ராம்நாத் கோவிந்துக்கு 57 வாக்குகள் கிடைத்தன. மீரா குமாருக்கு ஒரே ஒரு வாக்கு மட்டுமே கிடைத்தது. இதேபோல், சிக்கிம் மாநிலத்திலும் ராம்நாத்துக்கு 28 வாக்குகளும், மீரா குமாருக்கு ஒரு வாக்கும் கிடைத்தது.
ஐக்கிய ஜனதா தளம்-ராஷ்ட்ரீய ஜனதா தளம்-காங்கிரஸ் கூட்டணியின் ஆட்சி நடைபெறும் பிகார் மாநிலத்தில் மொத்தமுள்ள 239 வாக்குகளில் ராம்நாத்துக்கு 130 வாக்குகளும், மீரா குமாருக்கு 109 வாக்குகளும் கிடைத்தன.
பெரும்பாலான மாநிலங்களில் ராம்நாத் கோவிந்துக்கு அதிக வாக்குகள் கிடைத்தபோதிலும், திரிணமூல் காங்கிரஸ் ஆளும் மேற்கு வங்கத்திலும், இடதுசாரி முன்னணி ஆளும் கேரளத்திலும் மீரா குமாருக்கு அதிக வாக்குகள் கிடைத்தன. மேற்கு வங்கத்தில் மொத்தமுள்ள 284 வாக்குகளில் மீரா குமாருக்கு 273 வாக்குகள் கிடைத்தன. ராம்நாத் கோவிந்துக்கு 11 வாக்குகள் கிடைத்தன.
கேரளத்தில் மொத்தமுள்ள 139 வாக்குகளில் மீரா குமாருக்கு 138 வாக்குகளும், ராம்நாத்துக்கு ஒரு வாக்கும் கிடைத்தன. இடதுசாரி ஆளும் மற்றொரு மாநிலமான திரிபுராவிலும் மீரா குமாருக்கு 53 வாக்குகளும், ராம்நாத்துக்கு 7 வாக்குகளும் கிடைத்தன.
ஆம் ஆத்மியின் ஆட்சி நடைபெறும் தலைநகர் தில்லியில், மொத்தமுள்ள 61 வாக்குகளில் மீரா குமாருக்கு 55 வாக்குகளும், ராம்நாத் கோவிந்துக்கு 6 வாக்குகளும் கிடைத்தன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com