எல்லையை தன்னிச்சையாக மாற்ற சீனா முயற்சி: மாநிலங்களவையில் சுஷ்மா தகவல்

இந்தியா-சீனா-பூடான் ஆகிய மூன்று நாடுகளின் எல்லைகள் சந்திக்கும் இடத்தை தன்னிச்சையாக மாற்றி அமைக்க சீனா முயற்சிக்கிறது என்று மாநிலங்களவையில் மத்திய வெளியுறவுத் துறை
எல்லையை தன்னிச்சையாக மாற்ற சீனா முயற்சி: மாநிலங்களவையில் சுஷ்மா தகவல்

இந்தியா-சீனா-பூடான் ஆகிய மூன்று நாடுகளின் எல்லைகள் சந்திக்கும் இடத்தை தன்னிச்சையாக மாற்றி அமைக்க சீனா முயற்சிக்கிறது என்று மாநிலங்களவையில் மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் தெரிவித்தார்.
மாநிலங்களவையில் வியாழக்கிழமை கேள்வி நேரத்தின்போது இது தொடர்பாக அவர் மேலும் கூறியதாவது:
இந்தியா-சீனா-பூடான் எல்லைகள் சந்திக்கும் பகுதியில்,எல்லையை நிர்ணயிப்பது தொடர்பாக மூன்று நாடுகளும் பேசி முடிவெடுக்க வேண்டுமென்று கடந்த 2012-ஆம் ஆண்டில் எழுத்துப்பூர்வமாக மூன்று நாடுகளும் ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளன.
இந்தப் பகுதியில் இந்தியா-சீனா இடையிலான எல்லை குறித்து இரு நாடுகளும் இதுவரை பேச்சு நடத்தி இறுதியான முடிவு எதையும் எடுக்கவில்லை. இதே நிலைதான் சீனா-பூடான் எல்லையை முடிவு செய்வதிலும் நீடிக்கிறது. இப்போது, இந்த எல்லைப் பகுதியில்தான் சீனா சாலைகள் அமைக்கும் பணியில் ஈடுபட்டது. இந்த விஷயத்தில் இந்தியா தேவையில்லாமல் தலையிடவில்லை. மூன்று நாடுகளுக்கு இடையே எல்லை இறுதி செய்யப்படாத இடத்தில் சீனா தன்னிச்சையாக செயல்படக் கூடாது என்று கூறுவதில் எந்தத் தவறும் இல்லை. மூன்று நாடுகள் சந்திக்கும் எல்லையில் நமது நாடு எந்தத் தவறான நிலைப்பாட்டையும் எடுக்கவில்லை.
சீனா தன்னிச்சையாக எல்லையை மாற்றி அமைத்தால் அது இந்தியாவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும். இந்த விவகாரத்தில் அனைத்து நாடுகளும் நமக்கு ஆதரவாகத்தான் உள்ளன. இதில் இந்தியா மீது எந்தத் தவறும் இல்லை என்று அனைத்து நாடுகளுக்கும் தெரியும்.
எல்லை விவகாரத்தைப் பேசித்தான் தீர்க்க வேண்டும். பேச்சு நடத்துவதற்கு நாம் (இந்தியா) தயாராகவே இருக்கிறோம். எல்லையில் குவித்துள்ள ராணுவ வீரர்களை இரு தரப்புமே முதலில் திரும்பப் பெற்றுக் கொள்ள வேண்டும்.
இந்திய மாநிலமான ஜம்மு-காஷ்மீரின் ஒரு பகுதியை பாகிஸ்தான் சட்டவிரோதமாக ஆக்கிரமித்துள்ளது குறித்து சீனாவிடம் இந்தியா ஏற்கெனவே தகவல் தெரிவித்துவிட்டது. மேலும், அப்பகுதியில் சீனாவின் செயல்பாடுகள் இருக்கக் கூடாது என்பது வலியுறுத்தப்பட்டுள்ளது.
ஆசியப் பிராந்திய கடல் பகுதியில் மிகப்பெரிய சக்தியாக விளங்க வேண்டும் என்ற நோக்கில் சீனா செயல்பட்டு வருகிறது. அதற்காக துறைமுகம், சாலை உள்ளிட்ட உள்கட்டமைப்பு வசதிகளை சீனா மேம்படுத்தி வருகிறது. தென்சீனக் கடல் விவகாரத்தைப் பொறுத்தவரையில் அனைத்து நாடுகளின் கடல் போக்குவரத்துக்கும், வர்த்தகத்துக்கு எவ்விதப் பிரச்னையும் ஏற்படக் கூடாது என்பதுதான் இந்தியாவில் நிலைப்பாடு என்றார் அவர்.
ஜிஎஸ்டி எதிர்ப்பு போராட்டம் - எம்.பி.க்கள் கவலை: சரக்கு-சேவை வரிக்கு (ஜிஎஸ்டி) எதிர்ப்புத் தெரிவித்து நாடு முழுவதும் ஜவுளி உற்பத்தியாளர்களும், விற்பனையாளர்களும் போராட்டம் நடத்தி வருவது குறித்து மாநிலங்களவை எதிர்க்கட்சி எம்.பி.க்கள் வியாழக்கிழமை கவலை தெரிவித்தனர்.
அவையில் கேள்வி நேரத்துக்குப் பிறகு இந்த பிரச்னை குறித்துப் பேசிய காங்கிரஸ் எம்.பி. ஆனந்த் பாஸ்கர் ரோபோலு கூறியதாவது:
கைத்தறி நெசவுத் துறையை ஜிஎஸ்டி வெகுவாகப் பாதித்துள்ளது. ஜிஎஸ்டி-யில் இருந்து கைத்தறித் துணிகளுக்கு விலக்கு அளிக்கப்பட வேண்டும். விசைத்தறியில் நெய்யப்படும் துணிகளுக்கான ஜிஎஸ்டியை குறைக்க வேண்டும் என்றார்.
திரிணமூல் காங்கிரஸ் எம்.பி.க்கள் அகமது ஹுசைன், சேகர் ராய் உள்ளிட்டோர் கூறியதாவது:
ஜிஎஸ்டி-க்கு எதிர்ப்புத் தெரிவித்து மேற்கு வங்கத்தில் ஜவுளி, ஆயத்த ஆடை உற்பத்தியாளர்கள் வீதியில் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதற்கு முன்பு சிறு, நடுத்தர வரி வரம்புக்குள் கொண்டுவரப்பட்டது இல்லை. ஜவுளித்துறையில் நியாயமற்ற போட்டியை ஏற்படுத்தும் வகையில்தான் ஜிஎஸ்டி உள்ளது என்றனர்.
மாற்றுத் திறனாளிகள் பயன்படுத்தும் பொருள்களுக்கு ஜிஎஸ்டி-யில் இருந்து முழுமையாக விலக்களிக்க வேண்டுமென்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் உறுப்பினர் சி.பி. நாராயணன் வலியுறுத்தினார்.
ஜிஎஸ்டியை அமல்படுத்துவதில் மத்திய, மாநில அரசுகளிடையே போதிய ஒத்துழைப்பு இல்லை என்று காங்கிரஸ் எம்.பி. ராஜீவ் சுக்லா குற்றம்சாட்டினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com