நாகாலாந்து பேரவையில் இன்று பெரும்பான்மையை நிரூபிக்கிறார் ஜீலியாங்

நாகாலாந்து முதல்வராகப் பொறுப்பேற்றுள்ள டி.ஆர்.ஜீலியாங், மாநில சட்டப் பேரவையில் பெரும்பான்மையை வெள்ளிக்கிழமை நிரூபிக்க உள்ளார். போதிய எம்எல்ஏக்களின் ஆதரவு

நாகாலாந்து முதல்வராகப் பொறுப்பேற்றுள்ள டி.ஆர்.ஜீலியாங், மாநில சட்டப் பேரவையில் பெரும்பான்மையை வெள்ளிக்கிழமை நிரூபிக்க உள்ளார். போதிய எம்எல்ஏக்களின் ஆதரவு அவருக்கு இருப்பதால் நம்பிக்கை வாக்கெடுப்பில் ஜீலியாங் அரசு வெற்றி பெறுவது உறுதியாகியுள்ளது.
நாகா முன்னணி கட்சியின் ஆட்சி நடைபெற்று வரும் நாகாலாந்தில் பல்வேறு அரசியல் குழப்பங்கள் நீடித்து வருகின்றன. குறிப்பாக கட்சிக்குள் ஏற்பட்ட விரிசல் காரணமாக ஆளும் அரசின் அஸ்திவாரம் சரிய ஆரம்பித்தது. இதன் விளைவாக ஷுரோசெலி லீசிட்சுவிடம் இருந்த மாநில முதல்வர் பதவி பறிபோனதுடன், அப்பொறுப்பு ஜீலியாங் வசம் மீண்டும் வந்துள்ளது.
கடந்த பிப்ரவரி மாதம் நாகாலாந்தில் நடைபெற்ற நகராட்சித் தேர்தலில் பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீடு அளிக்கப்பட்ட விவகாரத்தால் மாநிலம் தழுவிய அளவில் போராட்டம் நடைபெற்றது. இதன் காரணமாக அப்போது முதல்வராக இருந்த ஜீலியாங் பதவி விலகினார். அதன் பிறகு அவரது கட்சியைச் சேர்ந்த ஷுரோசெலி லீசீட்சு முதல்வராகப் பொறுப்பேற்றார். ஆனால், அண்மையில் ஆளும் கூட்டணியில் உள்ள 59 எம்எல்ஏக்களில் 43 பேர் லீசீட்சுவுக்கு எதிராகப் போர்க்கொடி தூக்கியதுடன், டி.ஆர்.ஜீலியாங் தலைமையில் அணி திரண்டனர்.
இதையடுத்து, ஆளுநர் ஆச்சார்யாவைச் சந்தித்த ஜீலியாங், தமக்கு பெரும்பான்மை எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு இருப்பதால் தம்மை ஆட்சியமைக்க அழைப்பு விடுக்குமாறு உரிமை கோரினார்.
இதனால் நாகாலாந்து சட்டப் பேரவையில் லீசீட்சு பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. ஆனால், அதற்கான முயற்சிகளை லீசீட்சு முன்னெடுக்காததால், ஜீலியாங்கை முதல்வராகப் பதவியேற்க அழைப்பு விடுத்த ஆளுநர், அவருக்குப் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.
இந்நிலையில், மாநில சட்டப் பேரவையில் ஜீலியாங், பெரும்பான்மையை வெள்ளிக்கிழமை நிரூபிக்க உள்ளார். 47 எம்எல்ஏக்களின் ஆதரவு அவருக்கு இருப்பதால் நம்பிக்கை வாக்கெடுப்பில் எளிதாக ஜீலியாங் வெற்றி பெறுவார் எனக் கூறப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com