ராம்நாத் கோவிந்துக்கு வாக்களித்த காங்கிரஸ் எம்எல்ஏக்கள்: அதிருப்தியில் மேலிடம்

குடியரசுத் தலைவர் தேர்தலில் ராம்நாத் கோவிந்துக்கு ஆதரவாக குஜராத்தைச் சேர்ந்த 8 காங்கிரஸ் எம்எல்ஏக்கள் வாக்களித்தது தெரியவந்துள்ளது. இதனால், காங்கிரஸ் மேலிடம் அதிருப்தி அடைந்துள்ளது.
ராம்நாத் கோவிந்துக்கு வாக்களித்த காங்கிரஸ் எம்எல்ஏக்கள்: அதிருப்தியில் மேலிடம்


புது தில்லி: குடியரசுத் தலைவர் தேர்தலில் ராம்நாத் கோவிந்துக்கு ஆதரவாக குஜராத்தைச் சேர்ந்த 8 காங்கிரஸ் எம்எல்ஏக்கள் வாக்களித்தது தெரியவந்துள்ளது. இதனால், காங்கிரஸ் மேலிடம் அதிருப்தி அடைந்துள்ளது.

குடியரசுத் தலைவர் தேர்தலில் ராம்நாத் கோவிந்த் மகத்தான வெற்றி பெற்று நாட்டின் 14வது குடியரசுத் தலைவராக பதவியேற்க உள்ளார்.


இந்த நிலையில், அவருக்கு தேர்தல் நடத்த குஜராத் மற்றும் மேற்கு வங்க மாநிலத்தைச் சேர்ந்த காங்கிரஸ் மற்றும் எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த எம்எல்ஏக்கள் பலரும் வாக்களித்திருப்பதாக தகவல்கள் உறுதிபடுத்தப்பட்டுள்ளது.

இது காங்கிரஸ் வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சம்பந்தப்பட்ட எம்எல்ஏக்கள் மீது கட்சி மேலிடம் நடவடிக்கை எடுக்கலாம் என்றும் தெரிகிறது.

71 வயதாகும் கோவிந்த், 65.65 சதவீத வாக்குகளைப் பெற்றிருந்தார்.

குடியரசுத் தலைவர் தேர்தலைப் பொருத்தவரை எவருக்கு வாக்களிக்க வேண்டும் என்று எம்எல்ஏக்களுக்கு சம்பந்தப்பட்ட கட்சிக் கொறடா உத்தரவு பிறப்பிக்க இயலாது என்பதால், அவர்கள் தங்கள் விருப்பப்படி வாக்களித்திருக்கலாம் எனக் கூறப்படுகிறது.

நாட்டின் 14-ஆவது குடியரசுத் தலைவரைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் கடந்த 17-ஆம் தேதி நடைபெற்றது. அதில் பதிவான வாக்குகள் வியாழக்கிழமை எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன.

இதுதொடர்பாக தில்லியில் செய்தியாளர்களிடம் பேசிய தேர்தல் அதிகாரி அனூப் மிஸ்ரா, மாநில வாரியான வாக்குப் பதிவு விவரங்களை வெளியிட்டார். அப்போது, குஜராத்தில் ராம்நாத் கோவிந்துக்கு ஆதரவாக 132 வாக்குகளும், மீரா குமாருக்கு ஆதரவாக 49 வாக்குகளும் பதிவாகியிருப்பதாக அவர் தெரிவித்தார்.

குஜராத் பேரவையில் பாஜகவுக்கு 121 எம்எல்ஏக்களும், காங்கிரஸுக்கு 57 எம்எல்ஏக்களும் உள்ளனர். ஆனால், குடியரசுத் தலைவர் தேர்தலைப் பொருத்தவரை ராம்நாத் கோவிந்துக்கு பாஜக எம்எல்ஏக்களின் எண்ணிக்கையை விடக் கூடுதலாக 11 வாக்குகள் பதிவாகியுள்ளன. அதேவேளையில், மீரா குமாருக்கு 8 வாக்குகள் குறைவாகப் பதிவாகியுள்ளன. இது, குஜராத் மாநில காங்கிரஸ் கட்சிக்குள் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதே போல, சட்டீஸ்கர், மத்தியப் பிரதேசம், அரியானா, கோவா, உத்தரப்பிரதேசம், தில்லி உள்ளிட்ட மாநிலங்களிலும் குடியரசுத் தலைவர் கோவிந்த் எதிர்பார்க்கப்பட்டதை விட அதிக வாக்குகளைப் பெற்றுள்ளார்.

மகாராஷ்டிராவில் உள்ள எதிர்க்கட்சிகளின் வாக்குகளை கணக்கிட்டால் மீரா குமாருக்கு 90 வாக்குகள் கிடைத்திருக்க வேண்டும். ஆனால் 77 வாக்குகள்தான் கிடைத்துள்ளது. அதே போல, கோவிந்துக்கு பாஜகவின் 122 மற்றும் சிவ சேனாவின் 63 சேர்த்து 185 வாக்குகள் தான் கிடைத்திருக்க வேண்டும். ஆனால், அவருக்கு 208 வாக்குகள் கிடைத்துள்ளன.

கோவாவிலும் மொத்தமுள்ள 16 காங்கிரஸ் எம்எல்ஏக்களில் குறைந்தது 3 பேர் கோவிந்துக்கு வாக்களித்திருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.

இது குறித்து காங்கிரஸ் மேலிடம் அதிருப்தி அடைந்திருப்பதால், சிறப்புக் கூட்டத்தை கூட்டியுள்ளோம் என்று எதிர்க்கட்சித் தலைவர் சந்திரகாந்த் கவ்லேகர் கூறியுள்ளார்.

கட்சி மாறி வாக்களித்தவர்கள் மீது நடவடிக்கை எடுப்பது குறித்து கட்சி மேலிடம் தீவிரமாக யோசித்து வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com