விவசாயிகள் பிரச்னையை எழுப்பி எதிர்க்கட்சிகள் அமளி: மக்களவை நாள் முழுவதும் ஒத்திவைப்பு

விவசாயிகள் பிரச்னையை முன்வைத்து எதிர்க்கட்சி எம்.பி.க்கள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டதால் மக்களவை வியாழக்கிழமை நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது.

விவசாயிகள் பிரச்னையை முன்வைத்து எதிர்க்கட்சி எம்.பி.க்கள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டதால் மக்களவை வியாழக்கிழமை நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது.
வியாழக்கிழமை காலை மக்களவை கூடியதும், காங்கிரஸ் உறுப்பினர்கள் விவசாயிகள் பிரச்னையை முன்வைத்து பல்வேறு கோஷங்களை எழுப்பினர். அவர்கள் அவையின் மையப்பகுதிக்கு வந்து தொடர்ந்து முழக்கமிட்டதால் அவையை நடத்த முடியாத சூழ்நிலை ஏற்பட்டது. இதையடுத்து மக்களவைத் தலைவர் சுமித்ரா மகாஜன், அவையை 11 மணி வரை ஒத்திவைப்பதாக அறிவித்தார். மீண்டும் அவை கூடியபோதும், தொடர்ந்து கூச்சல் குழப்பம் நிலவியது. இதனால் அவை நடவடிக்கைகள் மீண்டும் ஒத்திவைக்கப்பட்டன.
11.30 மணிக்கு அவை மீண்டும் கூடியபோது, காங்கிரஸ், திரிணமூல் காங்கிரஸ், இடதுசாரி உள்ளிட்ட எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த எம்.பி.க்கள் அவையின் மையப்பகுதிக்கு வந்து தொடர்ந்து பல்வேறு கோஷங்களை எழுப்பினர். அப்போது பேசிய நாடாளுமன்ற விவகாரத் துறை அமைச்சர் அனந்த குமார், விவசாயிகள் பிரச்னை குறித்து மக்களவையில் நேற்று விவாதம் முடிந்துவிட்டது என்று கூறினார். இதனை எதிர்க்கட்சி எம்.பி.க்கள் ஏற்கவில்லை.
உறுப்பினர்கள் அமைதியாக தங்கள் இருக்கைக்குச் செல்ல வேண்டுமென்ற அவைத் தலைவர் சுமித்ரா மகாஜன் விடுத்த கோரிக்கையையும் எம்.பி.க்கள் நிராகரித்தனர். இதையடுத்து அவர், அவை பிற்பகல் வரை ஒத்திவைத்தார். மீண்டும் அவை கூடியபோது எதிர்க்கட்சியினர் விவசாயிகள் பிரச்னையை வலியுறுத்தி கோஷமிட்டனர்.
அதிமுக புரட்சித் தலைவி அம்மா அணியைச் சேர்ந்த எம்.பி.க்கள், தமிழகத்தில் குட்கா விற்பனை ஊழல் குறித்து சிபிஐ விசாரணை கோரி அவையின் மையப்பகுதிக்கு வந்து கோஷமிட்டனர். அவர்கள் கோரிக்கை வாசகம் அடங்கிய அட்டைகளையும் கையில் வைத்திருந்தனர். அவையில் தொடர்ந்து கூச்சல், குழப்பம் நிலவியதால் நாள் முழுவதும் அவையை ஒத்திவைப்பதாக சுமித்ரா மகாஜன் அறிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com