காங்கிரஸிலிருந்து வகேலா விலகல்

காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகுவதாக அக்கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான சங்கர்சிங் வகேலா வெள்ளிக்கிழமைஅதிரடியாக அறிவித்துள்ளார்.
குஜராத் மாநிலம், காந்திநகரில் நடைபெற்ற தனது 77-ஆவது பிறந்த நாள் விழாவில் ஆதரவாளர்கள் அளித்த வீரவாளுடன் சங்கர் சிங் வகேலா.
குஜராத் மாநிலம், காந்திநகரில் நடைபெற்ற தனது 77-ஆவது பிறந்த நாள் விழாவில் ஆதரவாளர்கள் அளித்த வீரவாளுடன் சங்கர் சிங் வகேலா.

காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகுவதாக அக்கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான சங்கர்சிங் வகேலா வெள்ளிக்கிழமைஅதிரடியாக அறிவித்துள்ளார். குஜராத் மாநிலத்தில் விரைவில் சட்டப்பரேவைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் கட்சியிலிருந்து விலகுவதாக வகேலா அறிவித்துள்ளது காங்கிரஸ் கட்சிக்கு பலத்த அடியாகும். எனினும் பா.ஜ.க.வில் சேரும் எண்ணம் ஏதும் இல்லை என்று அவர் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.
கடந்த 17-ஆம் தேதி நடைபெற்ற குடியரசுத் தலைவர் தேர்தலில் காங்கிரஸ் கட்சி எம்எல்ஏக்கள் 8 பேர் அணிமாறி பாஜக வேட்பாளர் ராம்நாத் கோவிந்துக்கு ஆதரவாக வாக்களித்துள்ளது வியாழக்கிழமை வெளிப்படையாகத் தெரிய வந்தது.
இந்நிலையில் வகேலாவின் 77-ஆவது பிறந்த நாள் விழாவை அவரது ஆதரவாளர்கள் காந்திநகரில் வெள்ளிக்கிழமை நடத்தினர். இதையொட்டி நடைபெற்ற பொதுக்கூட்டத்தில், காங்கிரஸில் இருந்து விலகும் முடிவை வகேலா அறிவித்தார்.
அவர் மேலும் பேசியதாவது: '' நான் காங்கிரஸ் கட்சியில் இருந்து 24 மணிநேரத்துக்கு முன் நீக்கப்பட்டேன். நான் தற்போது வகித்து வரும் குஜராத் சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் பதவியில் இருந்து உடனடியாக விலகுகிறேன். அடுத்த மாதம் 8-ஆம் தேதி நடைபெற உள்ள மாநிலங்களவை எம்.பி. பதவிக்கான தேர்தலுக்குப் பின் எனது எம்எல்ஏ பதவியை ராஜிநாமா செய்யப் போகிறேன். காங்கிரஸில் இருந்து என்னை விடுவித்துக் கொண்டேன். என்னிடம் இருந்து காங்கிரஸையும் விடுவித்துள்ளேன். நான் பாஜகவில் மீண்டும் இணைய மாட்டேன். வேறு எந்தக் கட்சியிலும் சேர மாட்டேன். அரசியலிலிருந்து ஓய்வுபெறும் எண்ணமும் எனக்கு இல்லை'' என்று வகேலா தெரிவித்துள்ளார்.
குஜராத் சட்டப் பேரவைக்கு விரைவில் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் வகேலாவின் ராஜிநாமா, காங்கிரஸ் கட்சிக்குப் பின்னடைவாகக் கருதப்படுகிறது. எனினும், காந்திநகரில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் வகேலாவின் மகன் மகேந்திர சிங் உள்ளிட்ட 2 எம்எல்ஏக்கள் மட்டுமே பங்கேற்றது காங்கிரஸ் கட்சிக்கு சற்று ஆறுதலை அளித்துள்ளது.
தனது எதிர்காலத் திட்டம் என்ன என்பது குறித்து வகேலா வெளிப்படையாக அறிவிக்காதபோதிலும் அவர் பாஜக மற்றும் காங்கிரஸுக்கு எதிராக புதிய அரசியல் கட்சியைத் தொடங்க வாய்ப்புள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
க்ஷத்ரிய இனத்தைச் சேர்ந்தவரான வகேலாவை அவரது ஆதரவாளர்கள் 'பாபு' என்று அழைக்கின்றனர். அவருக்கு வடக்கு குஜராத் பகுதியில் கணிசமான ஆதரவு காணப்படுகிறது.
குஜராத் மாநிலத்தில் ஒரு காலத்தில் ஆர்.எஸ்.எஸ். அமைப்பைச் சேர்ந்தவராகவும், பாஜக பிரமுகராகவும் விளங்கியவர் வகேலா. ஆர்எஸ்எஸ் அமைப்பில் நரேந்திர மோடியுடன் இணைந்து வகேலா பணியாற்றியவர் என்பதும் குறிப்பிடத்தக்கது., பின்னர் அக்கட்சியில் இருந்து விலகினார். கடந்த 1996-இல் ராஷ்ட்ரீய ஜனதா என்ற கட்சியை உருவாக்கினார். அந்த ஆண்டு அக்டோபர் 23 முதல் 1997 அக்டோபர் 27 வரை ஓராண்டு காலத்துக்கு குஜராத் முதல்வர் பதவியை வகித்தார். அதன் பின் வகேலா, காங்கிரஸில் இணைந்தார். அக்கட்சியில் பல்வேறு பொறுப்புகளை வகித்து வந்தார்.
குஜராத்தில் வரும் நவம்பர் - டிசம்பர் மாதங்களில் நடைபெற உள்ள சட்டப் பேரவைத் தேர்தலில் தன்னை முதல்வர் வேட்பாளராக அறிவிக்க வேண்டும் என்று கட்சி மேலிடத்தை வலியுறுத்தி வந்தார். எனினும், அவரது இந்தக் கோரிக்கையை காங்கிரஸ் மேலிடம் ஏற்கவில்லை என்று தெரிகிறது. இதையடுத்து அவர் கட்சியிலிருந்து விலகியுள்ளார்.

வகேலாவை நீக்கவில்லை: காங்கிரஸ்
வகேலா விவகாரம் குறித்து காங்கிரஸ் கட்சி விளக்கமளித்துள்ளது. இது தொடர்பாக அக்கட்சியின் செய்தித் தொடர்பாளர் ரண்தீப் சுர்ஜேவாலா, தில்லியில் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
வகேலாவுக்கு எதிராக காங்கிரஸ் கட்சி எந்த ஒழுங்கு நடவடிக்கையையும் எடுக்கவில்லை. அவர் கட்சியில் இருந்தும் நீக்கப்படவில்லை. மாறாக, வகேலாவை எங்கள் கட்சி மிகவும் மதித்து வந்துள்ளதோடு அவருக்கு முக்கியமான பொறுப்புகளையும் அளித்துள்ளது. குஜராத் மாநில காங்கிரஸ் தலைவர், மத்திய அமைச்சர், இந்திய சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தின் தலைவர் (கேபினட் அந்தஸ்துடன் கூடியது) ஆகிய பதவிகள் அவருக்கு வழங்கப்பட்டன. அவர் தற்போது குஜராத் மாநில சட்டப் பேரவை எதிர்க்கட்சித் தலைவராக இருக்கிறார்.
காங்கிரஸ் கட்சியின் தற்போதைய மாநிலத் தலைவரான பரத் சிங் சோலங்கியை நீக்கி விட்டு அந்தப் பதவியில் தன்னை நியமிக்க வேண்டும் என்று வகேலா விரும்பினார். ஆனால் அது பற்றி கட்சித் தலைமைதான் முடிவெடுக்க முடியுமே தவிர எந்தவொரு தனிநபரும் அது குறித்து முடிவெடுக்க முடியாது. ஏனெனில் தனிமனிதர்களை விட கட்சிதான் மிகவும் பெரியதாகும். தனிநபர்களின் விருப்பங்களை விட கட்சியின் கொள்கைகளும் நோக்கங்களும்தான் பெரிது என்பதை அனைவரும் உணர வேண்டும். கட்சிப் பதவிகளில் இருந்து வகேலா விலகியபோதிலும் கட்சிக்காக அவர் தொடர்ந்து உழைப்பார் என்று நம்புகிறோம் என்றார் சுர்ஜேவாலா.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com