ஆண்டுதோறும் ரூ.12,000 கோடிக்கு மின்னணு பணப் பரிவர்த்தனை: மத்திய அரசு தகவல்

ஆண்டுதோறும் ரூ.12,000 கோடி மதிப்புக்கு மின்னணு பணப் பரிவர்த்தனைகள் நடைபெறுவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

ஆண்டுதோறும் ரூ.12,000 கோடி மதிப்புக்கு மின்னணு பணப் பரிவர்த்தனைகள் நடைபெறுவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. மேலும், கடந்த சில ஆண்டுகளாக மின்னணு பரிவர்த்தனையில் நிகழும் மோசடிச் சம்பவங்கள் வெகுவாகக் குறைந்திருப்பதாக அரசு தகவல் வெளியிட்டுள்ளது.
இதுதொடர்பாக மாநிலங்களவையில் எழுப்பப்பட்ட கேள்வியொன்றுக்கு பதிலளித்த மத்திய தகவல் - தொழில்நுட்பம், சட்டத் துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் இந்த விவரங்களைத் தெரிவித்தார். இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது: மின்னணு பணப் பரிவர்த்தனைகளை அதிகரிக்க மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகிறது. இதற்கென சிறப்புத் திட்டங்களும் அறிவிக்கப்பட்டுள்ளன. ரொக்கப் பரிவர்த்தனையைத் தவிர்க்கும் பொருட்டு வங்கி அட்டைகள் மூலமாகவும், இணையவழியாகவும் பணப் பரிவர்த்தனைகள் மேற்கொள்வதை ஊக்குவிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
இந்த விவகாரத்தை ஆய்வு செய்து பரிந்துரைகளை வழங்க ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது. ஆண்டுதோறும் ரூ.12,000 கோடி மதிப்பிலான மின்னணு பணப் பரிவர்த்தனைகள் மேற்கொள்ளப்படுகின்றன.
இத்தகைய பரிவர்த்தனைகளில் நடைபெறும் மோசடிச் சம்பவங்களின் எண்ணிக்கை சமீப காலமாக வெகுவாகக் குறைந்து வருகிறது.
கடந்த ஏப்ரல், மே, ஜூன் மாதங்களை எடுத்துக் கொண்டால் மொத்த பரிவர்த்தனை அளவில் 0.005 சதவீதம்தான் மோசடிச் சம்பவங்கள் நடந்துள்ளன என்றார் அவர்.
இதற்கு நடுவே, நீதிபதிகள் நியமனம் தொடர்பான கேள்வியொன்றுக்கு பதிலளித்த ரவிசங்கர் பிரசாத், 'நீதித் துறையின் உயர் பொறுப்புகளுக்கு அதிக அளவில் பெண்களை நியமிக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டில் அரசு உள்ளது' என்றார்.
செல்லிடப்பேசி தயாரிப்பு: இதனிடையே, கடந்த நிதியாண்டில் ரூ.90,000 கோடி மதிப்பிலான செல்லிடப்பேசிகள் நாட்டில் உற்பத்தி செய்யப்பட்டதாக மத்திய தொலைத்தொடர்புத் துறை அமைச்சர் மனோஜ் சின்ஹா மாநிலங்களவையில் தெரிவித்தார்.
அந்த காலகட்டத்தில் ரூ.24,364 கோடி மதிப்பிலான செல்லிடப்பேசிகள் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
பருத்தி ஆடை ஏற்றுமதி சரிவு: மாநிலங்களவையில் பருத்தி ஆடைகள் ஏற்றுமதி தொடர்பாக கேள்வி ஒன்று எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த மத்திய ஜவுளித் துறை இணையமைச்சர் அஜய் டாம்டா, 'கடந்த 3 ஆண்டுகளில் நாட்டின் பருத்தி ஆடைகள் ஏற்றுமதி அளவு 10 சதவீதம் குறைந்துள்ளது' என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com