'இந்தியாவில் 1000 பேருக்கு ஒரு மருத்துவர்கூட இல்லை'

இந்தியாவில் 1000 பேருக்கு ஒரு மருத்துவர்கூட இல்லாத நிலைதான் உள்ளது' என்று மக்களவையில் மத்திய அரசு தெரிவித்தது.
'இந்தியாவில் 1000 பேருக்கு ஒரு மருத்துவர்கூட இல்லை'

இந்தியாவில் 1000 பேருக்கு ஒரு மருத்துவர்கூட இல்லாத நிலைதான் உள்ளது' என்று மக்களவையில் மத்திய அரசு தெரிவித்தது.
இதுதொடர்பாக மக்களவையில் வெள்ளிக்கிழமை கேள்விநேரத்தின்போது மத்திய சுகாதாரத் துறை இணையமைச்சர் அனுப்ரியா படேல் கூறியதாவது:
இந்திய மருத்துவ கவுன்சில் அளித்துள்ள தகவலின்படி, நாட்டில் பதிவு பெற்ற அலோபதி மருத்துவர்களின் எண்ணிக்கை 10,22,859. இவர்களில், 80 சதவீதம் பேர், அதாவது 8.18 லட்சம் பேர்தான், மருத்துவ சேவையாற்றி வருகின்றனர்.
133 கோடி மக்கள்தொகை கொண்ட நமது நாட்டில், மருத்துவர்கள்-மக்கள்தொகை விகிதாச்சாரம் 0.62:1000 என்ற அளவில் உள்ளது. அதாவது, ஆயிரம் பேருக்கு ஒன்றுக்கும் குறைவான அளவில்தான் மருத்துவர்களின் எண்ணிக்கை உள்ளது. எனவே, 'ஆயிரம் பேருக்கு ஒரு மருத்துவர் இருக்க வேண்டும்' என்ற ஐ.நா.வின் அளவுகோலை நாம் இன்னும் எட்டவில்லை. மருத்துவர்கள்-மக்கள்தொகை விகிதாசாரம், ஆஸ்திரேலியாவில் 3.374: 1000, பிரேசிலில் 1.852:1000, பிரான்ஸில் 3.227:1000, ஜெர்மனியில் 4.125:1000, ரஷியாவில் 3.306:1000, அமெரிக்காவில் 2.554:1000, ஆப்கானிஸ்தானில் 0.304: 1000, வங்கதேசத்தில் 0.389: 1000, பாகிஸ்தானில் 0.806:1000 என்ற அளவுகளில் உள்ளன.
நமது நாட்டின் மக்கள் தொகைக்கு ஏற்ப மருத்துவர்களின் எண்ணிக்கையையும் அதிகரிக்க மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. நாட்டில் தற்போது மொத்தம் 479 மருத்துவ கல்லூரிகள் உள்ளன. இவற்றில் 67,218 இடங்கள் உள்ளன. கடந்த 3 ஆண்டுகளில் 12,870 இடங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளது என்றார் அவர்.
1.64 லட்சம் நிறுவனங்களின் பதிவு ரத்து: நீண்ட காலமாக வர்த்தக நடவடிக்கைகளில் ஈடுபடாமல் இருந்த 1.64 லட்சம் நிறுவனங்களின் பதிவு ரத்து செய்யப்பட்டுள்ளதாக மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி வெள்ளிக்கிழமை தெரிவித்தார்.
போலி நிறுவனங்கள் மூலம் கருப்பு பணம் மற்றும் ஹவாலா பண பரிமாற்றம் போன்ற சட்டவிரோத செயல்கள் நடைபெறுவது தொடர்பாக மக்களவையில் எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்து அவர் கூறியதாவது:
2 நிதியாண்டுகளுக்கும் மேலாக வர்த்தக நடவடிக்கைகளில் ஈடுபடாமல் இருப்பது, வரி விதிமீறல்களில் ஈடுபடுவது உள்ளிட்ட காரணங்களுக்காக, ஒரு நிறுவனத்தை பதிவை ரத்து செய்வதற்கு, 2013-ஆம் ஆண்டைய நிறுவனங்கள் சட்டத்தின் 248-ஆவது பிரிவு வழிவகை செய்கிறது. இந்த சட்டப் பிரிவின்கீழ், கடந்த ஜூலை மாதம் வரை 1.62 லட்சம் நிறுவனங்களின் பதிவு ரத்து செய்யப்பட்டுள்ளது. போலி நிறுவனங்களுக்கு எதிராக தொடர்ந்து கடுமையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்றார் அவர்.
கருப்புப் பண தடுப்புச் சட்டம்: இதேபோல, வேறொரு கேள்விக்கு பதிலளித்த ஜேட்லி, 'கருப்புப் பணத் தடுப்புச் சட்டத்தின்கீழ் கடந்த 10 ஆண்டுகளில் 2,260 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன; இவற்றில் 370 வழக்குகளில் விசாரணை நடைபெற்று வருகிறது. இச்சட்டத்தின்கீழ் இதுவரை 2 பேர் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டுள்ளனர்' என்றார்.
ஜிஎஸ்டி-யில் 77 லட்சம் வர்த்தகர்கள் பதிவு: நாட்டில் அண்மையில் அறிமுகப்படுத்தப்பட்ட சரக்கு, சேவை வரியில் (ஜிஎஸ்டி) இதுவரை 77.5 லட்சம் வர்த்தகர்கள் தங்களை பதிவு செய்துள்ளதாக மக்களவையில் மத்திய நிதித் துறை இணையமைச்சர் சந்தோஷ் குமார் தெரிவித்தார்.
ரூ.90,000 கோடி மதிப்பு செல்லிடப்பேசிகள் உற்பத்தி: நாட்டில் ரூ.90 ஆயிரம் கோடி மதிப்புள்ள செல்லிடப்பேசிகள், 2016-17ஆம் நிதி ஆண்டில் உற்பத்தி செய்யப்பட்டதாகவும், ரூ.24 ஆயிரம் கோடி மதிப்புள்ள செல்லிடப்பேசிகள் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டதாகவும் மக்களவையில் தொலைத் தொடர்புத் துறை அமைச்சர் மனோஜ் சின்ஹா தெரிவித்தார்.
கொசுக்கள் மூலம் பரவும் நோய்களால் 1,010 பேர் உயிரிழப்பு: கொசுக்கள் மூலம் மனிதனுக்கு பரவும் நோய்கள் காரணமாக, நாட்டில் நிகழாண்டு தொடக்கம் முதல் இதுவரை 1,010 பேர் உயிரிழந்துள்ளனர்; இதில் பன்றி காய்ச்சலால் 632 பேர் உயிரிழந்துள்ளனர் என்று மக்களவையில் மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஜே.பி.நட்டா வெள்ளிக்கிழமை தெரிவித்தார்.
அஸ்ஸாம் வெள்ள நிவாரணம்-ரூ.12 ஆயிரம் கோடி தேவை: மழை-வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள அஸ்ஸாமில் நிவாரண, மீட்புப் பணிகளுக்கு ரூ.12 ஆயிரம் கோடி தேவை என்று அந்த மாநிலத்தைச் சேர்ந்த பாஜக எம்.பி.ராம் குமார் சர்மா, மக்களவையில் வெள்ளிக்கிழமை கோரிக்கை விடுத்தார். மழை-வெள்ளத்தால் அங்கு 70 பேர் உயிரிழந்துவிட்டதாகவும், 17 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com