எல்லையில் ஆயுதங்களைக் குவிக்கும் சீனா: வெடிபொருள் பற்றாக்குறையில் இந்தியா?

சிக்கிமை ஒட்டிய திபெத் பகுதியில் ஒரு மாத காலத்துக்கும் மேலாக பதற்றமான சூழல் நிலவி வருகிறது. இந்த நிலையில், இந்திய ராணுவத்தில் வெடிபொருள் பற்றாக்குறை இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
எல்லையில் ஆயுதங்களைக் குவிக்கும் சீனா: வெடிபொருள் பற்றாக்குறையில் இந்தியா?


புது தில்லி: சிக்கிமை ஒட்டிய திபெத் பகுதியில் ஒரு மாத காலத்துக்கும் மேலாக பதற்றமான சூழல் நிலவி வருகிறது. இந்த நிலையில், இந்திய ராணுவத்தில் வெடிபொருள் பற்றாக்குறை இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

ஒரு பக்கம் சீனா போருக்கு தயாராகி வரும் நிலையில், மற்றொருபுறம் பாகிஸ்தான் எல்லைப் பகுதியில் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது.

எல்லையில் இரு அண்டை நாடுகளுடன் எல்லையில் பதற்றமான சூழல் நிலவிவரும் நிலையில், இந்திய ராணுவத்திடம் வெடிகுண்டுகள், வெடிமருந்துகள் உள்ளிட்டவற்றின் இருப்பு குறைவாக இருப்பதாக சிஏஜி அறிக்கை அளித்துள்ளது.

சீனாவுடனான போர் மூண்டால், இந்திய ராணுவத்திடம் இருக்கும் வெடிபொருட்களின் கையிருப்பு 10 நாட்களுக்குள் தீர்ந்துவிடும் என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2013ம் ஆண்டுக்குப் பிறகு இந்தியாவில் வெடிபொருள் மற்றும் வெடிகுண்டுகள் தயாரிப்பு குறைந்திருப்பதாகவும், வெடிபொருள் தயாரிப்பு ஆலைகளின் பணி மந்தமாகியிருப்பதாகவும், மத்திய அரசு சமீபகாலமாக பாதுகாப்பு தொடர்பான விவகாரத்தில் அலட்சியம் காட்டுவதாகவும் சிஏஜி குற்றம்சாட்டியுள்ளது.

வெடிபொருள் தயாரிப்பு ஆலைகளின் உற்பத்தி மிகவும் மோசமாக சரிந்து வருவதை நாங்கள் காணித்து வருகிறோம், அதில் பல்வேறு வெடிபொருட்களின் இருப்பு வெறும் 55 சதவீதம் மட்டுமே, அதாவது குறைந்த பட்ச இருப்பைவிடவும் குறைவாகவே வைத்துள்ளது என்றும் பகீர் தகவல்களை வெளியிட்டுள்ளது.

எல்லையில் ஆயுதங்களைக் குவிக்கும் சீனா
இந்தியா - சீனா இடையே போர்ச் சூழல் நிலவி வரும் வேளையில், சிக்கிமை ஒட்டிய திபெத் பகுதியில் சீன ராணுவம் ஆயுதங்களைக் குவித்து வருவது எல்லையில் பதற்றத்தை அதிகரித்துள்ளது.

இந்தியா, சீனா, பூடான் ஆகிய நாடுகளின் எல்லைப் பகுதியில் டோகா லா என்ற இடம் அமைந்துள்ளது. இந்த பகுதியில் மேற்குறிப்பிட்ட மூன்று நாடுகளுக்கும் தனித்தனி எல்லை வரையறைகள் இருக்கின்றன.

இந்நிலையில், டோகா லா பகுதியில் உள்ள இந்திய எல்லையில் சீன ராணுவ வீரர்கள் கடந்த மாதம் அத்துமீறி நுழைந்து சாலை அமைக்கும் பணிகளில் ஈடுபட்டனர். மேலும், டோகா லாவை எங்கள் நாட்டின் ஒரு பகுதி என்று சீனா பகிரங்கமாகவே அறிவித்தது.

இதையடுத்து, அந்தப் பகுதியில் இந்திய ராணுவத்தினர் குவிக்கப்பட்டு சாலைப் பணிகள் உடனடியாக தடுத்து நிறுத்தப்பட்டன. இதனால், இந்தியா - சீனா இடையே தற்போது போர்ச் சூழல் நிலவி வருகிறது.

இதுபோன்ற சூழ்நிலையில், சர்ச்சைக்குரிய டோகா லா பகுதிக்கு மிக அருகே அமைந்திருக்கும் சீனாவின் திபெத்தில் அந்நாட்டு ராணுவம் ஏராளமான போர் ஆயுதங்களைக் குவித்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அதிநவீன பீரங்கிகள், போர் ஹெலிகாப்டர்கள், ஏவுகணை ஏவு தளங்கள் உள்ளிட்ட தளவாடங்கள் அங்கு தினசரி கொண்டுவரப்படுவதாக சீன ஊடகங்கள் அதிகாரபூர்வமாக தெரிவித்துள்ளன.

சீனாவின் இந்த நடவடிக்கையானது இந்தியா மீது தாக்குதல் நடத்துவதற்கான முன்னேற்பாடாக இருக்கலாம் என்று சர்வதேச அரசியல் நோக்கர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

அவசரக் காலத்தில் ஆயுதக் கொள்முதல்: ராணுவத்துக்கு சிறப்பு அதிகாரம்

போர் அவசரக் காலங்களில் ஆயுதத் தளவாடங்களை நேரடியாக கொள்முதல் செய்துகொள்ள இரண்டு வாரங்களுக்கு முன்புதான் ராணுவத்துக்கு சிறப்பு அதிகாரம் அளிக்கப்பட்டது.

பொதுவாக மத்திய பாதுகாப்பு அமைச்சகத்தின் பரிசீலனை, மத்திய அரசின் ஒப்புதல் என பல்வேறு நிலைகளைக் கடந்த பிறகுதான் ராணுவத்துக்கான ஆயுதங்கள் கொள்முதல் செய்யப்படும்.

சிக்கிம் மாநிலம் டோகா லா பகுதியை மையமாகவைத்து இந்தியா-சீனா எல்லையில் பதற்றம் நீடித்து வருகிறது. காஷ்மீரிலும் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு பயங்கரவாதம் தலைதூக்கியுள்ளது. பாகிஸ்தான் எல்லையிலும் தொடர்ந்து பதற்றம் நிலவுகிறது.

எனினும், திடீரென போர் ஏற்பட்டால் அதனை எதிர்கொள்ள இந்திய ராணுவத்திடம் போதிய அளவுக்கு ஆயுதங்கள் இல்லை என்றும் கூறப்படுகிறது. ராணுவத்துக்காக வெளிநாடுகளில் இருந்த நவீன ரக துப்பாக்கிகளை வாங்க சில நாள்களுக்கு முன்பு முடிவெடுக்கப்பட்டது.

இதையடுத்து, போர் நடைபெறும் அவசரக் காலத்தில் ராணுவம் நேரடியாக ஆயுதங்களை கொள்முதல் செய்து கொள்ள மத்திய அரசு அனுமதித்துள்ளது. இதன்படி, ராணுவ துணைத் தளபதிக்கு ஆயுதம் கொள்முதல் செய்வதற்கான நிதி ஒதுக்கீடு செய்ய அதிகாரம் உண்டு. மொத்தம் 10 வகையான ஆயுதங்களை அவரது உத்தரவின் பெயரில் அவசரக் காலத்தில் வாங்கிக் கொள்ள முடியும். அதிகபட்சமாக ரூ. 40,000 கோடி செலவில் ஆயுதங்களை வாங்க முடியும்.

எவ்வித நெருக்கடிஏற்பட்டாலும் அதனைச் சமாளிக்க ராணுவம் தயாராக இருக்க வேண்டும் என்ற நோக்கில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com