காஷ்மீர்: மூன்றாவது நாட்டின் தலையீட்டுக்கு ஃபரூக் ஆதரவு

காஷ்மீர் பிரச்னையைத் தீர்க்க மூன்றாவது நாட்டின் தலையீட்டுக்கு ஜம்மு-காஷ்மீர் முன்னாள் முதல்வர் ஃபரூக் அப்துல்லா ஆதரவு தெரிவித்துள்ளார்.
காஷ்மீர்: மூன்றாவது நாட்டின் தலையீட்டுக்கு ஃபரூக் ஆதரவு

காஷ்மீர் பிரச்னையைத் தீர்க்க மூன்றாவது நாட்டின் தலையீட்டுக்கு ஜம்மு-காஷ்மீர் முன்னாள் முதல்வர் ஃபரூக் அப்துல்லா ஆதரவு தெரிவித்துள்ளார்.
ஆனால், காஷ்மீர் விவகாரத்தில் மூன்றாவது நாட்டின் தலையீடு தேவையில்லை என்பது மத்திய அரசின் நிலைப்பாடாக உள்ளது.
தில்லியில் நாடாளுமன்றத்துக்கு வெளியே, செய்தியாளர்களிடம் வெள்ளிக்கிழமை அவர் இது தொடர்பாகக் கூறியதாவது:
காஷ்மீர் விவகாரத்துக்கு தீர்வுகாண இன்னும் எவ்வளவு நாள்கள்தான் நாம் காத்திருக்க முடியும்?. இந்த விவகாரத்தை முன்வைத்து இந்தியாவும், பாகிஸ்தானும் இன்னும் எத்தனை போர்களை எதிர்கொள்ள வேண்டும்?.
காஷ்மீர் விவகாரத்தைப் பேசித் தீர்ப்பதற்காக நமது நண்பர்களை (நட்பு நாடுகள்) நாம் பயன்படுத்திக் கொள்ளலாம். அதன் மூலம் பிரச்னையை எளிதாகத் தீர்க்கலாம் என்றார்.
இதையடுத்து, காஷ்மீர் விவகாரத்தில் மூன்றாவது நாட்டின் தலையீடு வேண்டும் என்கிறீர்களா? என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு, 'காஷ்மீர் பிரச்னையைத் தீர்க்க தயாராக இருப்பதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறினார். ஆனால், அவரது உதவியை நாம் கேட்கவில்லை. காஷ்மீர் விவகாரத்தில் மத்தியஸ்தராக செயல்பட தயாராக இருப்பதாக சீனாவும் கூறியது? ஆனால் இந்த விவகாரத்தை சீனாவின் கைகளில் விட தயாராக இல்லை என்று நாம் கூறிவிட்டோம். நண்பர்களிடம் இருந்து உதவி கேட்பது என்பது இந்த விவகாரத்தை அவர்களிடம் ஒப்படைப்பது என்று அர்த்தமாகாது.
காஷ்மீர் விவகாரம் குறித்து 70 ஆண்டுகளாகப் பேசி வருகிறோம். பாகிஸ்தானுடன் 4 போர்களை நடத்தியுள்ளோம். இன்னும் ஆயிரம் ஆண்டுகள் காத்திருக்க வேண்டுமா? பிரச்னைக்கு நேரடியாகத் தீர்வுகாண முயல வேண்டும். காஷ்மீர் பிரச்னையால் இன்னும் எத்தனை உயிர்களைக் கொள்ள வேண்டும்?
ஆயுதங்களையும், விமானங்களையும் வாங்கிக் குவிப்பதற்கு செலவு செய்யும் பணத்தில் எத்தனையோ லட்சம் ஏழை மக்களின் வாழ்க்கையை மேம்படுத்த முடியும். இதன் மூலம் இந்தியா வளர்ச்சியடையும் என்றார் ஃபரூக் அப்துல்லா.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com