ஜனவரியில் நிதியாண்டு தொடக்கம்?: மக்களவையில் மத்திய அரசு பதில்

நிதியாண்டின் தொடக்கத்தை ஜனவரி மாதமாக மாற்றுவது குறித்து தீவிரமாக பரிசீலித்து வருவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

நிதியாண்டின் தொடக்கத்தை ஜனவரி மாதமாக மாற்றுவது குறித்து தீவிரமாக பரிசீலித்து வருவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக மக்களவையில் எழுப்பப்பட்ட கேள்வியொன்றுக்கு பதிலளிக்கையில் இந்த தகவலை அரசு வெளியிட்டுள்ளது.
தற்போது உள்ள நடைமுறைப்படி நிதியாண்டின் தொடக்கம் ஏப்ரல் மாதமாக வரையறுக்கப்பட்டுள்ளது. வருமான வரிக் கணக்குத் தாக்கல் உள்பட பல்வேறு நிதி சார்ந்த நடவடிக்கைகள், ஆண்டுதோறும் அந்த மாதத்திலேயே தொடங்குகின்றன. ஆண்டின் தொடக்கம் ஜனவரியாகவும், நிதியாண்டின் தொடக்கம் ஏப்ரலாகவும் இருப்பதற்கு பதிலாக இரண்டையும் ஒரே மாதிரியாக மாற்றியமைக்கலாம் எனக் கோரிக்கைகள் எழுப்பப்பட்டன.
இதையடுத்து அதுகுறித்து பரிசீலித்து வரும் மத்திய அரசு, விரைவில் அந்த விவகாரம் தொடர்பாக முக்கிய முடிவினை எடுக்க உள்ளது. இந்நிலையில், இதுதொடர்பாக மக்களவையில் வெள்ளிக்கிழமை கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி எழுத்துப்பூர்வமாக அளித்த பதில்:
நிதியாண்டை மாற்றியமைப்பது குறித்து ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்வதற்காக அரசு முன்னாள் தலைமை பொருளாதார ஆலோசகர் சங்கர் ஆச்சார்யா தலைமையில் பிரத்யேக குழு ஒன்று அமைக்கப்பட்டது. அந்தக் குழு, தனது அறிக்கையை அண்மையில் தாக்கல் செய்தது.
அதைப் பரிசீலித்த பிறகு இதுதொடர்பாக உரிய முடிவெடுக்கப்படும். ஒருவேளை ஜனவரி மாதத்தில் இருந்து நிதியாண்டை தொடங்கினால், நவம்பர் அல்லது டிசம்பரில் மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்படுமா? என்று கேள்வி எழுப்பப்படுகிறது. அதுகுறித்து தற்போது எந்தக் கருத்தும் தெரிவிக்க இயலாது என்று அந்த பதிலில் ஜேட்லி குறிப்பிட்டுள்ளார். நிதியாண்டின் தொடக்கத்தை ஜனவரிக்கு மாற்றும்பட்சத்தில் வரித் தாக்கலுக்கான காலக் கெடு உள்பட பல்வேறு விதிகளைத் திருத்தியமைக்க வேண்டிய நிலை அரசுக்கு ஏற்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
விவசாயக் கடன் தள்ளுபடி இல்லை: இதனிடையே, மக்களவையில் எழுப்பப்பட்ட மற்றொரு கேள்விக்கு பதிலளித்த மத்திய நிதித் துறை இணையமைச்சர் சந்தோஷ்குமார் கங்வார், விவசாயக் கடன்களைத் தள்ளுபடி செய்யும் திட்டம் எதுவுமில்லை என்று தெரிவித்தார். அதுதொடர்பான விஷயங்கள் எதையும் அரசு பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளவில்லை என்றும் அவர் கூறினார்.
பணப்புழக்கம் அதிகரிப்பு: இதற்கு நடுவே நாட்டின் பணப்புழக்கம் தொடர்பான கேள்வி ஒன்று மக்களவையில் எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த மத்திய நிதித் துறையின் மற்றோர் இணையமைச்சரான அர்ஜூன்ராம் மேக்வால், ரூபாய் நோட்டு வாபஸ் நடவடிக்கைக்கு முன்பு இருந்த பணப்புழக்கத்தின் அளவில் தற்போது 85 சதவீதம் எட்டப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார். அதை மேலும் அதிகரிப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொண்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com