பாஜக ஆட்சியை நீக்க எதிர்க்கட்சிகள் ஒன்றிணைய வேண்டும்: மம்தா பானர்ஜி

மத்தியில் ஆளும் பாரதிய ஜனதா கட்சியை இந்தியாவிலிருந்து வெளியேற்ற எதிர்க்கட்சிகள் அனைத்தும் ஒன்றிணைய வேண்டும் என்று மேற்கு வங்க முதல்வரும், திரிணமூல் காங்கிரஸ் கட்சித்
மேற்கு வங்க மாநிலம், கொல்கத்தாவில் திரிணமூல் காங்கிரஸ் கட்சி சார்பில் கடைப்பிடிக்கப்பட்ட தியாகிகள் தினத்தை முன்னிட்டு  நடைபெற்ற பிரமாண்ட பேரணியில் கலந்து கொண்டவர்களில் ஒரு பகுதியினர்.
மேற்கு வங்க மாநிலம், கொல்கத்தாவில் திரிணமூல் காங்கிரஸ் கட்சி சார்பில் கடைப்பிடிக்கப்பட்ட தியாகிகள் தினத்தை முன்னிட்டு நடைபெற்ற பிரமாண்ட பேரணியில் கலந்து கொண்டவர்களில் ஒரு பகுதியினர்.

மத்தியில் ஆளும் பாரதிய ஜனதா கட்சியை இந்தியாவிலிருந்து வெளியேற்ற எதிர்க்கட்சிகள் அனைத்தும் ஒன்றிணைய வேண்டும் என்று மேற்கு வங்க முதல்வரும், திரிணமூல் காங்கிரஸ் கட்சித் தலைவருமான மம்தா பானர்ஜி அழைப்பு விடுத்துள்ளார்.
மேற்கு வங்க மாநிலம், கொல்கத்தாவில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் திரளாக திரண்டிருந்த கட்சித் தொண்டர்கள் முன் மம்தா பானர்ஜி பேசியதாவது:
'பாஜகவை வெளியேற்றுவோம்' என்ற பெயரில் ஆகஸ்ட் 9-ஆம் தேதி முதல் திரிணமூல் போராடத் தொடங்கும். பாஜகவை இந்தியாவிலிருந்து நிச்சயமாக வெளியேற்றுவோம். இதை சவாலாக எடுத்துக் கொண்டிருக்கிறோம். சாரதா நிதி நிறுவன மோசடி, நாரதா விடியோ விவகாரம் ஆகியவற்றை சுட்டிக்காட்டி எங்களை மத்திய அரசு அச்சுறுத்தி வருகிறது. அதைக் கண்டு நாங்கள் அஞ்ச மாட்டோம். எங்களில் யாரும் குற்றம் புரியவில்லை. அதனால், யாருக்கும் நாங்கள் அடிபணிய மாட்டோம்.
குடியரசுத் தலைவர் தேர்தலில் எதிர்க்கட்சி வேட்பாளராக போட்டியிட்ட மீரா குமாருக்கு திரிணமூல் காங்கிரஸ் உள்பட அனைத்து எதிர்க்கட்சிகளும் ஆதரவளிக்க முன்வந்தன.
இதேபோல், 2019-ஆம் ஆண்டு நடைபெறவுள்ள மக்களவைத் தேர்தலிலும் எதிர்க்கட்சிகள் அனைத்தும் ஒன்றிணைந்து பாஜகவை தோற்கடிக்க வேண்டும். காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, ராஷ்ட்ரீய ஜனதா தளம் கட்சியின் தலைவர் லாலு பிரசாத், ஐக்கிய ஜனதா தளம் தலைவர் நிதீஷ் குமார், தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால் என யாரெல்லாம் பாஜகவை எதிர்க்கிறார்களோ அவர்கள் அனைவருக்கும் திரிணமூல் காங்கிரஸ் ஆதரவளிக்கும்.
பாஜக அரசு அண்டை நாடுகளுடன் நல்லுறவை பேணுவதில் தோல்வி அடைந்துவிட்டது. பூடான், வங்கதேசம், நேபாளம் போன்ற அண்டை நாடுகளுடனான நல்லுறவை மத்திய அரசு ஏன் மேம்படுத்தவில்லை?
ஜிஎஸ்டி அமலாக்கம், ரூபாய் நோட்டு வாபஸ் நடவடிக்கை ஆகியவற்றுக்கு எதிர்ப்பு தெரிவித்தவர்களுக்கு எதிராக சிபிஐ, அமலாக்கத் துறை ஆகிய மத்திய புலனாய்வு அமைப்புகளை மத்திய அரசு ஏவி விடுகிறது.
அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்ட காலக்கட்டத்தைக் காட்டிலும் தற்போது நாட்டில் நிலைமை படுமோசமாக உள்ளது. மோடி அரசுக்கு எதிராக செயல்படும் எதிர்க்கட்சிகளும், ஊடகங்களும் ஒடுக்கப்படுகின்றன.
குடியரசுத் தலைவர் தேர்தலில் பாஜக வேட்பாளர் ராம்நாத் கோவிந்துக்கு ஆதரவாக மேற்கு வங்க மார்க்சிஸ்ட் எம்எல்ஏக்கள் வாக்களித்துள்ளது கண்டனத்துக்குரியது என்று மம்தா பானர்ஜி தெரிவித்தார்.
பாஜக பதிலடி: பாஜகவை இந்தியாவை விட்டு வெளியேற்றுவோம் என்று மம்தா பானர்ஜி கூறியதற்கு பாஜக பதிலடி கொடுத்துள்ளது.
இதுகுறித்து மேற்கு வங்க பாஜக தலைவர் கூறியதாவது: மோடியை நீக்குவோம்; தேசத்தைக் காப்போம் என்று கூறி பேரணி நடத்தியவர் மம்தா. ஆனால், அதன்பிறகு, 4 மாநில சட்டப் பேரவைத் தேர்தல்களில் பாஜக வெற்றிவாகை சூடியது. மம்தாவின் அரசியலை எதிர்த்து போராட தயாராக இருக்கிறோம். திரிபுராவில் தடம் பதிக்க முயன்றது திரிணமூல். ஆனால், அங்கு அக்கட்சியின் செல்வாக்கு சரியத் தொடங்கிவிட்டது. இந்தச் சூழலில் பாஜகவை தேசத்திலிருந்து வெளியேற்றுவோம் என்று அவர் கூறியுள்ளது நகைப்பை ஏற்படுத்துகிறது என்றார் அவர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com