ரயில்வே துறையின் முன்னுரிமைகளில் இணையப் பாதுகாப்பும் ஒன்றாகும்

ரயில்வே நிர்வாகத்தின் அன்றாடப் பணிகளில் இணையவெளிப் பாதுகாப்பை (சைபர் செக்யூரிட்டி) உறுதிப்படுத்துவது அதன் முன்னுரிமைப் பணிகளில் ஒன்றாகும் என்று ரயில்வே அமைச்சர் சுரேஷ் பிரபு
ரயில்வே துறையின் முன்னுரிமைகளில் இணையப் பாதுகாப்பும் ஒன்றாகும்

ரயில்வே நிர்வாகத்தின் அன்றாடப் பணிகளில் இணையவெளிப் பாதுகாப்பை (சைபர் செக்யூரிட்டி) உறுதிப்படுத்துவது அதன் முன்னுரிமைப் பணிகளில் ஒன்றாகும் என்று ரயில்வே அமைச்சர் சுரேஷ் பிரபு தெரிவித்தார்.
தில்லியில் ரயில்வே தொடர்பாக கருத்தரங்கம் தில்லியில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. உயரதிகாரிகள் பங்கேற்ற இந்தக் கருத்தரங்கில் ரயில்வே அமைச்சர் சுரேஷ் பிரபு பேசியதாவது:
ரயில்வே துறை நவீனமயமாக்கம் மற்றும் பராமரிப்புத் திட்டத்தின் ஒரு பகுதியாக ரயில் சாரதி செயலி உள்ளிட்ட பல்வேறு முன்முயற்சிகளை ரயில்வே அமைச்சகம் கடந்த மூன்றாண்டுகளில் தொடங்கியுள்ளது. அடுத்ததாக, மிகப்பெரிய முதலீடுகளின் மூலம் ரயில்வேதுறையை முழுமையாக உருமாற்றம் செய்வதற்குப் பாடுபட்டு வருகிறோம். ரயில்வே துறையின் ஒவ்வொரு அம்சமும் உருமாற்றம் செய்யப்படும். ரயில்வே பராமரிப்புக்கு நாம் மிகவும் நவீனமான தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துகிறோம். மேலும் ரயில் தண்டவாளங்களில் உள்ள குறைகளை ஒரு செயலி மூலம் கண்டறிகிறோம்.
அதேவேளையில் மின்னணுப் பணப் பரிவர்த்தனைக்காக நாம் இணையவெளியைப் பயன்படுத்தும்போது அதனால் ஏற்படக் கூடிய பாதிப்பும் அதிகமாக இருக்கலாம். அனைத்தையும் கையால் செய்யும்போது அந்த முறையில் நிகழக்கூடிய தவறுகள்தான் சவாலாக இருக்கும். அந்த முறையில் இருந்து தொழில்நுட்பத்துக்கு மாறும்போது தொழில்நுட்பத்தில் உள்ள குறைகள் அல்லது அதை ஏமாற்றக் கூடியவர்களால் மிகப்பெரிய அச்சுறுத்தல் ஏற்படுகிறது. எனவே இணையவெளிப் பாதுகாப்பு என்பது ரயில்வே துறையின் முன்னுரிமைகளில் ஒன்றாகும்.
ரயில்களின் வேகம் அதிகரிப்பு: ரயில்களை 600 கி.மீ. வேகத்தில் இயக்கும் நோக்கில், ஆப்பிள் போன்ற உலகளாவிய தொழில்நுட்ப நிறுவனங்களுடன் இணைந்து மத்திய அரசு பாடுபட்டு வருகிறது. இந்திய ரயில்வேயை அடுத்தகட்டத்துக்கு எடுத்துச் செல்ல இது உதவும்.
தில்லி-மும்பை, தில்லி-கொல்கத்தா ஆகிய இருவழித்தடங்களில் கதிமான் எக்ஸ்பிரஸ் ரயில்களின் வேகத்தை அதிகரிப்பதற்கு ரூ.18,000 கோடி மதிப்பிலான ரயில்வே அமைச்சகத்தின் திட்டத்திற்கு மத்திய கொள்கைக் குழு (நீதி ஆயோக்) ஒப்புதல் அளித்துள்ளது. இதன் காரணமாக கதிமான் எக்ஸ்பிரஸ் ரயிலின் வேகம் மணிக்கு 200 கி.மீ.யாக உயரும். இதன் வாயிலாக பயணிகளுக்கு எவ்வளவு பயண நேரம் மிச்சமாகும் என்பதை நீங்களே எண்ணிப் பார்க்கலாம் என்றார் சுரேஷ் பிரபு.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com