வெளிநாட்டு வங்கிகளில் இந்தியர்களின் ரூ.19,000 கோடி கருப்புப் பணம்: வருமான வரித்துறை கண்டறிந்தது

ஸ்விட்சர்லாந்தின் ஹெச்எஸ்பிசி வங்கி உள்ளிட்ட வெளிநாட்டு வங்கிக் கிளைகளில் கணக்கு வைத்துள்ள இந்தியர்களின் ரூ.19,000 கோடி மதிப்பிலான கருப்புப் பணத்தை வருமான
வெளிநாட்டு வங்கிகளில் இந்தியர்களின் ரூ.19,000 கோடி கருப்புப் பணம்: வருமான வரித்துறை கண்டறிந்தது

ஸ்விட்சர்லாந்தின் ஹெச்எஸ்பிசி வங்கி உள்ளிட்ட வெளிநாட்டு வங்கிக் கிளைகளில் கணக்கு வைத்துள்ள இந்தியர்களின் ரூ.19,000 கோடி மதிப்பிலான கருப்புப் பணத்தை வருமான வரித் துறை கண்டறிந்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி, மக்களவையில் வெள்ளிக்கிழமை கூறியதாவது: வரிப் பிடித்தமே இல்லாத அல்லது குறைந்த வரிவிதிப்பு கொண்ட வெளிநாடுகளில் பணத்தைக் குவித்து வைத்துள்ள 700 இந்தியர்களின் விவரங்களை சர்வதேச புலனாய்வு செய்தியாளர் கூட்டமைப்பு (ஐசிஐஜே), மக்களின் கவனத்துக்கு கொண்டுவந்தது.
இந்தத் தகவல்கள் அனைத்தும் பல்வேறு வெளிநாட்டு வங்கிக் கணக்குகளில் இந்தியர்கள் குவித்து வைத்துள்ள ரூ.11,010 கோடியை வருமான வரித்துறை கண்டறிய வழிவகுத்தன. இது தொடர்பான 31 வழக்குகளில் 72 அரசுத்தரப்பு புகார்கள், குற்றவியல் நீதிமன்றங்களில் பதிவு செய்யப்பட்டுள்ளன.
இதேபோல், ஸ்விட்சர்லாந்து நாட்டில் உள்ள ஹெச்எஸ்பிசி வங்கிக் கிளையில் கணக்கு வைத்துள்ள 628 இந்தியர்கள் பற்றிய தகவல், பிரான்ஸ் அரசிடம் இருந்து கிடைத்தன. இந்தியாவுக்கும் பிரான்ஸுக்கும் இடையிலான இரட்டை வரிவிதிப்பு தவிர்ப்பு ஒப்பந்தத்தின்கீழ் இந்த விவரங்கள் பெறப்பட்டன.
இது தொடர்பாக நடைபெற்ற முறையான புலனாய்வின் விளைவாக, நடப்பாண்டு மே மாதம் வரை ரூ.8,437 கோடி மதிப்பிலான கருப்புப் பணம் கண்டறியப்பட்டு, வரிப்பிடித்தம் செய்யப்பட்டது.
மேலும், 162 வழக்குகளில் கருப்புப் பணத்தை மறைத்தது தொடர்பான அபராதமாக ரூ.1287 கோடி விதிக்கப்பட்டது. 84 வழக்குகளில் 199 குற்றவியல் புகார்கள் பதிவு செய்யப்பட்டன. எனினும் வரி ஒப்பந்தங்களின்படி பெறப்படும் இந்த விவரங்களை வரிப் பிடித்த நோக்கத்துக்காக மட்டுமே பயன்படுத்த முடியும். இந்த ஒப்பந்தங்களின் ரகசியம்காப்பு அம்சங்களின்படி, இந்த விவரங்களை பகிரங்கமாக வெளியிட முடியாது.
இந்தியர்கள் வெளிநாடுகளில் குவித்து வைத்துள்ள கருப்புப் பணம் எவ்வளவு என்பதை அரசு அதிகாரப்பூர்வமாக மதிப்பிடவில்லை. எனினும், வெளிநாடுகளிலும் உள்நாட்டிலும் உள்ள கருப்புப் பணத்தின் அளவை மதிப்பிடுவதற்கான ஆய்வை அரசு தொடங்கியுள்ளது என்றார் ஜேட்லி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com