வட மாநிலங்களில் தொடரும் மழை: குஜராத்தில் 7,000 பேர் வெளியேற்றம்

மேற்கு வங்கம், குஜராத், மகாராஷ்டிரம், பிகார், ஹிமாசலப் பிரதேசம் உள்ளிட்ட வடமாநிலங்களில் கடந்த சில நாள்களாக தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதனால், பொதுமக்கள் கடும் அவதிப்பட்டு வருகின்றனர்.
மகாராஷ்டிர மாநிலம், நாசிக் மாவட்டத்தில் பாயும் கோதாவரி ஆற்றில் பெருக்கெடுத்து ஓடும் வெள்ளத்தில் மூழ்கியுள்ள கோயில்கள்.
மகாராஷ்டிர மாநிலம், நாசிக் மாவட்டத்தில் பாயும் கோதாவரி ஆற்றில் பெருக்கெடுத்து ஓடும் வெள்ளத்தில் மூழ்கியுள்ள கோயில்கள்.

மேற்கு வங்கம், குஜராத், மகாராஷ்டிரம், பிகார், ஹிமாசலப் பிரதேசம் உள்ளிட்ட வடமாநிலங்களில் கடந்த சில நாள்களாக தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதனால், பொதுமக்கள் கடும் அவதிப்பட்டு வருகின்றனர்.
மேற்கு வங்க மாநிலத்தில் கங்கை நதி சமவெளிப் பகுதியில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. கங்கையின் கிளை நதிகளில் வெள்ள நீர் அபாய அளவைத் தாண்டி ஓடுகிறது. அடுத்த இருநாள்களுக்கு கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
கிழக்கு மிதுனபுரி, தெற்கு 24 பர்கானாக்கள், பீர்பூம், புருலியா, மேற்கு பர்த்வான் உள்ளிட்ட பகுதிகள் வெள்ளத்தால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளன. அங்கு தாழ்வான பகுதிகள் மழை நீரில் மூழ்கிவிட்டன. எனினும், உயிரிழப்பு குறித்து தகவல் எதுவும் கிடைக்கவில்லை.
குஜராத்தில் பெய்து வரும் தொடர்மழையால் 7 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். வடக்கு, தெற்கு குஜராத் மாவட்டங்கள் மழையால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளன. சாலைகளில் வெள்ளநீர் பெருக்கெடுத்து ஓடுவதால் பல இடங்களில் போக்குவரத்து முடங்கியுள்ளது. உயிரிழப்பைத் தடுக்கும் நோக்கில் மீட்புக் குழுவினர் முழுவீச்சில் பணியாற்றி வருகின்றனர்.
மகாராஷ்டிரத்தில் கோதாவரி ஆற்றின் நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் பெய்து வரும் கனமழையால் கோதாவரியில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால், ஆற்றின் கரையோரம் வசிக்கும் மக்களும், தாழ்வான பகுதிகளில் உள்ள வீடுகளில் இருப்பவர்களும் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல உத்தரவிடப்பட்டுள்ளது. கோதாவரி ஆற்றில் உள்ள அணைகள் அனைத்தும் வேகமாக நிரம்பி வருகின்றன.
ஹிமாசலப் பிரதேச மாநிலத்தையும் மழை விட்டு வைக்கவில்லை. மாநிலத்தின் அனைத்துப் பகுதிகளிலும் பரவலாக மழை பெய்து வருகிறது. சில இடங்களில் கனமழை பெய்து வருவதால் மக்கள் வீடுகளுக்குள்ளேயே முடங்கியுள்ளனர். அங்கு வரும் 29}ஆம் தேதி வரை மழை நீடிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
பிகாரின் பல பகுதிகளிலும் மழை பெய்து வருகிறது. அம்மாநிலத்தில் மழையால் பெரிய அளவில் பாதிப்பு ஏற்படவில்லை. தலைநகர் பாட்னா, கயை, பாகல்பூர் ஆகிய இடங்களில் குறிப்பிடத்தக்க அளவில் மழை பெய்துள்ளது. அடுத்த சில நாள்களில் மழை அதிகரிக்கும். இடி, மின்னல் அதிகம் இருக்கும் என்பதால் பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டுமென்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

குஜராத் மாநிலத்தில் உள்ள மோர்பி மாவட்டத்தில் கனமழையால் சேதமடைந்த நெடுஞ்சாலை. நாள்: ஞாயிற்றுக்கிழமை.

கர்ப்பிணி, தாயுடன் இரட்டைக் குழந்தைகள் ஹெலிகாப்டர் மூலம் மீட்பு

குஜராத் மாநிலம், ராஜ்கோட் மாவட்டத்தில் மழை வெள்ளத்தில் சிக்கித் தவித்த கர்ப்பிணி ஒருவரையும், தாயுடன் புதிதாய் பிறந்த இரட்டைக் குழந்தைகளையும் ஹெலிகாப்டர் மூலம் இந்திய விமானப்படை வீரர்கள் மீட்டனர்.
ராஜ்கோட் மாவட்டம், நானா மாத்ரா கிராமத்தை வெள்ள நீர் சூழ்ந்திருப்பதால், அக்கிராமத்துக்கும், பிற பகுதிகளுக்கும் இடையேயான தொடர்பு முழுவதும் துண்டிக்கப்பட்டுள்ளது. இக்கிராமத்தில் 2 கர்ப்பிணிகள் சிக்கியிருப்பதாக இந்திய விமானப்படைக்கு தகவல் கிடைத்தது. இதன்பேரில், அவர்களை மீட்க ஜாம்நகரில் இருந்து சேடக் ரக ஹெலிகாப்டரில் விமானப்படை மீட்புக் குழு சென்றது.
ஹெலிகாப்டர் பாதிவழியில் சென்றபோது, 2 கர்ப்பிணிகளில் ஒருவருக்கு இரட்டைக் குழந்தைகள் பிறந்திருப்பதாக தகவல் வந்தது. இதையடுத்து, அவர்கள் மூவரும் முதலில் ஹெலிகாப்டர் மூலம் மீட்டு அழைத்து வரப்பட்டனர். பிறகு, மற்றொரு கர்ப்பிணியும் ஹெலிகாப்டர் மூலம் மீட்கப்பட்டு வந்து, காத்திருந்த ஆம்புலன்ஸ் வாகனத்தில் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com