பாஜகவின் தலித் விரோதப் போக்கைக் கண்டித்து பகுஜன் சமாஜ் கட்சி போராட்டம் நடத்தும்: மாயாவதி

பாஜகவின் தலித் விரோதப் போக்கைக் கண்டித்து உத்தரப் பிரதேசத்தில் வரும் செப்டம்பர் 18}ஆம் தேதி மாநிலம் தழுவிய போராட்டத்தை பகுஜன் சமாஜ் கட்சி நடத்தும் என்று அதன் தலைவர் மாயாவதி தெரிவித்தார்.
பாஜகவின் தலித் விரோதப் போக்கைக் கண்டித்து பகுஜன் சமாஜ் கட்சி போராட்டம் நடத்தும்: மாயாவதி

பாஜகவின் தலித் விரோதப் போக்கைக் கண்டித்து உத்தரப் பிரதேசத்தில் வரும் செப்டம்பர் 18}ஆம் தேதி மாநிலம் தழுவிய போராட்டத்தை பகுஜன் சமாஜ் கட்சி நடத்தும் என்று அதன் தலைவர் மாயாவதி தெரிவித்தார்.
உத்தரப் பிரதேசத்தின் சஹாரன்பூர் மாவட்டத்தில் அண்மையில் தலித்துகளுக்கு எதிராக நடைபெற்ற வன்முறை குறித்து அவர் மாநிலங்களவையில் கடந்த புதன்கிழமை பேசினார். அப்போது, அவருக்கு ஒதுக்கப்பட்ட நேரம் முடிந்து விட்டதால் பேச்சை முடித்துக் கொள்ளுமாறு அவைத் தலைவர் குரியன் தெரிவித்தார்.
இதனால் அதிருப்தியடைந்த மாயாவதி, தலித் விவகாரம் குறித்துப் பேச தமக்கு அனுமதி மறுக்கப்படுவதாகக் குற்றம்சாட்டி வெளிநடப்பு செய்தார். அதைத் தொடர்ந்து மாநிலங்களவை எம்.பி. பதவியை அவர் ராஜிநாமா செய்தார். அவரது ராஜிநாமாவை அவைத் தலைவரும், குடியரசு துணைத் தலைவருமான ஹமீது அன்சாரி ஞாயிற்றுக்கிழமை ஏற்றுக் கொண்டதாக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
இந்நிலையில், தனது ராஜிநாமாவால் எழுந்துள்ள அரசியல் சூழல் குறித்து விவாதிப்பதற்காக மாயாவதி, பகுஜன் சமாஜ் கட்சியின் மூத்த தலைவர்கள் கூட்டத்தை தில்லியில் ஞாயிற்றுக்கிழமை நடத்தினார். இதில் அக்கட்சியின் எம்.பி.க்கள், எம்எல்ஏக்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் மாயாவதி பேசியதாவது:
உத்தரப் பிரதேசத்தின் சஹாரன்பூரில் தலித்துகளுக்கு எதிராக நடத்தப்பட்ட வன்முறை தொடர்பாகப் பேசுவதற்கு எனக்கு அனுமதி மறுக்கப்பட்டதாலேயே மாநிலங்களவை எம்.பி. பதவியை கடந்த 18}ஆம் தேதி ராஜிநாமா செய்தேன். எனவே பாஜகவின் தலித் விரோத நிலைப்பாட்டைக் கண்டித்து வரும் செப்டம்பர் 18}ஆம் தேதி மாநிலம் தழுவிய போராட்டத்தை எங்கள் கட்சி தொடங்கும்.
அதைத் தொடர்ந்து ஒவ்வொரு மாதமும் 18}ஆம் தேதியன்று கட்சித் தொண்டர்களின் மாநாடு நடத்தப்படும். அதேபோல், உத்தரப் பிரதேசத்தின் இரண்டு மண்டலங்களிலும் கட்சித் தொண்டர்கள் பேரணி, பொதுக்கூட்டங்கள் ஆகியவற்றை நடத்துவார்கள். அதில் நானும் கலந்து கொள்வேன். பாஜகவின் சுயரூபத்தை வெளிப்படுத்துவதற்காக மீரட்டில் தொடங்கவுள்ள போராட்டமானது அடுத்த ஆண்டு ஜூன் மாதம் வரை தொடரும் என்றார் அவர்.
உத்தரப் பிரதேச சட்டப் பேரவைத் தேர்தலில் பகுஜன் சமாஜ் கட்சி மிக மோசமான தோல்வியைச் சந்தித்த நிலையில், இழந்த செல்வாக்கை மீட்டெடுக்கவும் தலித் சமூகத்தின் தன்னிகரற்ற தலைவராக தாம் மீண்டும் உருவெடுக்கவும் மாயாவதி எம்.பி. பதவியை ராஜிநாமா செய்துள்ளதாக அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர். உத்தரப் பிரதேச சட்டப் பேரவையில் மொத்தமுள்ள 403 இடங்களில் அவரது கட்சி வெறும் 18 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது.
இதனிடையே, மாயாவதியின் ராஜிநாமா ஒரு நாடகம் என்று பாஜக விமர்சித்துள்ளது. ஏனெனில் அவரது மாநிலங்களவை எம்.பி. பதவிக்காலம் அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதத்துடன் முடிவடைய உள்ளதை அக்கட்சி சுட்டிக் காட்டியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com