போலி நிறுவனங்களுக்கு உதவிய 26 பட்டயக் கணக்காளர்கள்: மத்திய அரசு தீவிர கண்காணிப்பு

போலி நிறுவனங்களை உருவாக்க உதவியதாக 26 பட்டயக் கணக்காளர்களை (சார்ட்டட் அக்கவுண்டன்ட்) மத்திய அரசு தீவிர கண்காணிப்பு வளையத்தின்கீழ் கொண்டு வந்துள்ளது.
போலி நிறுவனங்களுக்கு உதவிய 26 பட்டயக் கணக்காளர்கள்: மத்திய அரசு தீவிர கண்காணிப்பு

போலி நிறுவனங்களை உருவாக்க உதவியதாக 26 பட்டயக் கணக்காளர்களை (சார்ட்டட் அக்கவுண்டன்ட்) மத்திய அரசு தீவிர கண்காணிப்பு வளையத்தின்கீழ் கொண்டு வந்துள்ளது. அவர்கள் மீது விரைவில் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று தெரிகிறது.
கருப்புப் பணத்தை வெளிநாட்டில் பதுக்குவதற்காகவும், அப்பணத்தை மீண்டும் சட்டப்பூர்வமாக வங்கிக் கணக்குக்கு கொண்டு வரவும் போலியான பெயர்களில் நிறுவனங்கள் உருவாக்கப்படுகின்றன. அண்மையில் இதுபோன்ற சுமார் 1 லட்சம் போலி நிறுவனங்களின் அங்கீகாரம் ரத்து செய்யப்பட்டது. இப்போது, அதனை உருவாக்கிய பட்டயக் கணக்காளர்களின் பக்கம் விசாரணை அமைப்புகள் கவனத்தைத் திருப்பியுள்ளன.
இது தொடர்பாக மத்திய அரசு அதிகாரிகள் கூறியதாவது:
போலி நிறுவனங்களை உருவாக்க உதவிய பட்டயக் கணக்காளர்கள் மீது உரிய ஒழுங்கு நடவடிக்கை எடுப்பதாக இந்திய பட்டயக் கணக்காளர்கள் கல்வி நிலையம் (ஐசிஏஐ) உறுதியளித்துள்ளது. போலி நிறுவனங்கள் உருவாகாமல் தடுப்பது என்பது கருப்புப் பண ஒழிப்பு நடவடிக்கையின் முக்கிய அம்சமாகும். இதில் பல்வேறு விசாரணை அமைப்புகள் முழு முனைப்புடன் பணியாற்றி வருகின்றன. கருப்புப் பணம் உருவாவதற்கான அனைத்து வழிகளும் கண்டறியப்பட்டு அவை முடக்கப்பட்டு வருகின்றன.
இதன் ஒரு பகுதியாக போலி நிறுவனங்களை உருவாக்குவதை தடுக்க தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்பு உருவாக்கப்பட்ட போலி நிறுவனங்கள் குறித்தும் அதில் பங்காற்றிய பட்டயக் கணக்காளர்கள் குறித்தும் தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது. இதன் அடிப்படையில் 26 பட்டயக் கணக்காளர்கள் கண்காணிப்பு வளையத்துக்குள் கொண்டுவரப்பட்டுள்ளனர் என்று தெரிவித்தனர்.
இது தொடர்பாக ஐசிஏஐ அமைப்பின் தலைவர் நீலேஷ் சிவ்ஜி விகம்சே கூறியதாவது: போலி நிறுவனங்களை உருவாக்க உதவியதாக 26 பட்டயக் கணக்காளர்கள் மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இது தொடர்பாக அவர்கள் மீது நடவடிக்கை எடுப்பது குறித்து ஐசிஏஐ தீவிரமாக ஆலோசித்து வருகிறது. குற்றச்சாட்டுக்கு உள்ளானவர்களின் விவரங்களை சேகரித்து வருகிறோம்.
ஐசிஏஐ}யின் விதிகளை மீறிச் செயல்படுபவர்கள் மீது கடுமையான ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும். அவர்களின் அங்கீகாரம் ரத்து செய்யப்படவும் வாய்ப்பு உள்ளது. கருப்புப் பணத்தை பதுக்கவும், மாற்றவும் உதவியவர்கள் நிச்சயமாக தண்டனைக்கு உள்ளாக வேண்டும் என்றார்அவர்.
முன்னதாக, கடந்த 1}ஆம் தேதி பட்டயக் கணக்காளர்கள் மாநாட்டில் பங்கேற்ற பிரதமர் நரேந்திர மோடி, கருப்புப் பணத்தை உருவாக்க உதவிய பட்டயக் கணக்காளர்களின் அங்கீகாரத்தை ஏன் ரத்து செய்யக் கூடாது? என்று பேசியிருந்தார் என்பது நினைவுகூரத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com