முக்கியப் பிரச்னைகளை பேசாத திருநங்கைகள் மசோதா

இந்தியாவில் திருநங்கைகள் எதிர்கொண்டு வரும் முக்கியமான பிரச்னைகளுக்கு தீர்வு காண்பது தொடர்பான எந்த அம்சங்களும் திருநங்கை உரிமைகள் மசோதாவில் இடம்பெறவில்லை என்று நாடாளுமன்றக் குழு
முக்கியப் பிரச்னைகளை பேசாத திருநங்கைகள் மசோதா

இந்தியாவில் திருநங்கைகள் எதிர்கொண்டு வரும் முக்கியமான பிரச்னைகளுக்கு தீர்வு காண்பது தொடர்பான எந்த அம்சங்களும் திருநங்கை உரிமைகள் மசோதாவில் இடம்பெறவில்லை என்று நாடாளுமன்றக் குழு விமர்சித்துள்ளது.
திருநங்கைகளுக்கு மறுக்கப்பட்டு வரும் பல்வேறு உரிமைகளை மீட்டுக் கொடுக்கும் நோக்கில், திமுக எம்.பி. திருச்சி சிவா சார்பில் கடந்த 2015-ஆம் ஆண்டு திருநங்கை மசோதா கொண்டு வரப்பட்டது.
திருநங்கைகளுக்கு வேலைவாய்ப்பில் இடஒதுக்கீடு அளிப்பது, திருநங்கைகளை துன்புறுத்துவோருக்கு கடுமையான தண்டனைகளை விதிப்பது என்பன உள்ளிட்ட அம்சங்கள் இந்த தனிநபர் மசோதாவில் இடம்பெற்றிருந்தன.
இதனிடையே, இந்த மசோதாவில் சில குறைபாடுகள் உள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர் கருத்து தெரிவித்திருந்தனர். இதையடுத்து, சமூக நீதித் துறைக்கான நாடாளுமன்றக் குழுவின் பரிசீலனைக்கு திருநங்கைகள் மசோதா கடந்த ஆண்டு அனுப்பி வைக்கப்பட்டது.
இந்நிலையில், இந்த மசோதா தொடர்பான நாடாளுமன்றக் குழுவின் ஆய்வறிக்கை மக்களவையில் கடந்த வெள்ளிக்கிழமை சமர்ப்பிக்கப்பட்டது. அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
இந்த மசோதாவில் முதலில் திருநங்கைகள் குறித்து தெரிவிக்கப்பட்டுள்ள வரையறையே தவறாக உள்ளது. மசோதாவின்படி, திருநங்கை என்பவர் முழுமையான ஆணோ, முழுமையான பெண்ணோ கிடையாது என்று மட்டுமே வரையறுக்கப்பட்டுள்ளது.
மேலும், ஒருவரது பிறப்பால் நிர்ணயிக்கப்படும் பாலினமும், அவரது உணர்வு ரீதியிலான பாலினமும் ஒன்றுக்கொன்று தொடர்பில்லாமல் இருந்தால் அவரும் திருநங்கை என்று இந்த மசோதாவில் கூறப்பட்டுள்ளது.
இந்த வரையறை, அறிவியல் ரீதியில் தவறானது. பழமையான கோட்பாடுகளின் அடிப்படையில் இந்த வரையறை வழங்கப்பட்டிருக்கிறது. அதேசமயத்தில், பிறக்கும்போதே தெளிவற்ற பிறப்புறுப்புகளைக் கொண்டிருப்பவர்களை இந்த மசோதா அடையாளப்படுத்தவில்லை.
இந்த வரையறையானது, திருநங்கைகளுக்கு ஏற்கெனவே உறுதி செய்யப்பட்டிருக்கும் பல்வேறு அடிப்படை உரிமைகளுக்கு முரணாக உள்ளது.
மேலும், திருநங்கைகளுக்கான திருமண பந்த உரிமை, விவாகரத்து பெறும் உரிமை உள்ளிட்ட முக்கியப் பிரச்னைகள் குறித்த எந்த அம்சமும் இந்த மசோதாவில் இடம்பெறவில்லை. இவை யாவும், இந்தியாவில் பெரும்பாலான திருநங்கைகள் அன்றாடம் சந்தித்து வரும் பிரச்னைகளாகும்.
அதுமட்டுமன்றி, சமூகம் மற்றும் கல்வியில் பிற்படுத்தப்பட்டோர் பிரிவின் கீழ் திருநங்கைகளுக்கு இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஆனால், அதுதொடர்பான எந்த அம்சமும் இந்த மசோதாவில் இல்லை. சமூகத்தின் பல்வேறு நிலைகளில் திருநங்கைகளுக்கு பாரபட்சம் காட்டப்படுவது குறித்தும் இந்த மசோதவில் முறையாக தெரிவிக்கப்படவில்லை என அந்த ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்
பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com